சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் கோடி அர்ச்சனை, லக்ஷ ஹோமம், அதிருத்ர மஹா யாகம், மஹாபிஷேகம்!
கோடி அர்ச்சனை : 07.03.2016 – 29.04.2016
லக்ஷ ஹோமம், அதிருத்ர மஹா யாகம் & மஹாபிஷேகம் : 29.04.2016
அன்புடையீர்,
கோயில் என்றாலே பொருள்படும் சிதம்பரத்தில் அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடும் ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனையும், லக்ஷ ஹோமமும், அதிருத்ர மஹா யாகமும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களின் மேலான வழிகாட்டுதலின் படி, மிகச் சிறப்பாக மாபெரும் வைபவமாக நடைபெறவுள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் – இம்மூன்றாலும் சிறப்புற்ற தலம் – சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த தலம். உலக புருஷனின் இதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். தரிசிக்க முக்தி தரும், சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த, பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த, வேண்டுவதை உடன் அருளும், மரண பயம் போக்கும் ஸ்தலம்.
சிவகங்கை எனும் தீர்த்தம் (குளம்) கோயிலினுள் அமைந்து கங்கைக்கு மேலான பலன்களை வழங்குகின்றது.
ஸ்ரீ நடராஜ ராஜர் - அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர்.
அர்ச்சனை பாட்டேயாகும் - என்பது தெய்வ சேக்கிழார் வாக்கு. இறைவனை வழிபடும் வகைகளில் மிக எளியதும், வரங்களை விரைவில் வழங்கக் கோருவதிலும், தோத்திரம் எனும் வகையில் தெய்வத்தினை போற்றிடும் சிறப்பு அம்சமாக அர்ச்சனை கருதப்படுகின்றது. பல்வேறு மலர்களாலும், இலைகளாலும் தெய்வத்தின் பாதங்களில் சேர்ப்பிக்கும் அர்ச்சனை அளவில்லாத பலன்களைத் தரக்கூடியது.
அர்ச்சனையை எண்ணிக்கைகள் கொண்டு செய்வது வழக்கத்தில் உள்ளது. 16 தெய்வப் பெயர்களைக் கொண்டு செய்யப்படுவது ஷோடச நாமாவளி என்றும், 108 கொண்டு செய்வது சதநாமாவளி என்றும், 300 கொண்டு அர்ச்சிப்பது திரிசதி என்றும், 1008 கொண்டு வழிபடுவது ஸஹஸ்ரநாமம் என்றும் அழைக்கப்படும்.
இதில் ஸஹஸ்ரநாமாவளிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதிலும் நடராஜ ராஜரை துதிக்கும் நடேச ஸஹஸ்ரநாமம் பற்பல விசேஷங்கள் கொண்டது.
இந்த ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு 100 முறை அர்ச்சித்தால் அது லக்ஷார்ச்சனை எனப்படும்.
கோடி அர்ச்சனை : காலை & மாலை இரு வேளைகளில் 50 நாட்களுக்கு லக்ஷார்ச்சனை செய்தால் அது கோடி அர்ச்சனை என்ற கணக்கில் அமையும்.
லக்ஷ ஹோமம் : ஒரே நேரத்தில் நூறு பூஜகர்கள் நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை ஹோமம் செய்வது லக்ஷ ஹோமம் ஆகும்.
அதிருத்ர மஹா யாகம் : யஜுர் வேதத்தின் மையப் பகுதியானதும், நமசிவாய எனும் ஐந்தெழுந்து மந்திரத்தை தன்னுள் கொண்டதும், முழுவதும் சிவபெருமானையே போற்றுவதும் ஆகிய ஸ்ரீ ருத்ரம் அளப்பரிய சக்தி கொண்டது. பரமேஸ்வரரின் பேரருளைப் பெற்றுத் தரக்கூடியது. மங்களங்களை வழங்கக் கூடியது. அதிருத்ர மஹா யாகம் என்பது ஸ்ரீ ருத்ரத்தினை 14641 முறை ஜபித்து ஹோமம் செய்யப்படுவது ஆகும்.
மஹாபிஷேகம் : அபிஷேக பிரியரான நடராஜப் பெருமானுக்கு விபூதி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், இளநீர், சந்தனம், திரவியப்பொடி, மஞ்சள்தூள் முதலான பொருட்கள் கொண்டும், பல்வேறு புஷ்பங்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் செய்வது ஸகல திரவிய மஹாபிஷேகம் ஆகும்.
கோடி அர்ச்சனை : 07.03.2016 – 29.04.2016
லக்ஷ ஹோமம், அதிருத்ர மஹா யாகம் & மஹாபிஷேகம் : 29.04.2016
பக்தர்கள் அனைவரும் இந்த மாபெரும் காணுதற்கரிய வைபவத்தினை தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறக் கோருகின்றோம்.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 9443479572, 9362609299.
No comments:
Post a Comment