Sunday, March 6, 2016

Gratitude

Courtesy: Sri.GS.Dattatreyan

களஞ்சியத்தில் ஒரு கைப்பிடி

தென்னையின் நன்றி

உதவி என்பது ரெண்டு வகையில் நமக்கு அறிமுகமானது. முதலாவது, நமக்கு எதோ ஒன்று தேவை, அது பணமாகவோ, பொருளாகவோ, ஒரு செய்கையாகவோ, நல்ல வார்த்தையாகவோ கூட இருக்கலாமே. அதை நாம் தேடிக்கொண்டிருக்கும்போது அதை அளிக்க முடிபவரிடம் சென்று நாம் கேட்டுப் பெறுவது.

மற்றொன்று, நமக்கு எது தேவையோ அதை அந்த மற்றொருவர் உணர்ந்து நாம் கேளா முன்னரே நமக்கு அளிப்பது. இது எப்படியிருக்கு?. இது மாதிரி செய்வோரும் உண்டா என்றால் இன்னும் சிலர் இருப்பதால் தான் நாம் மழை என்றால் என்ன என்றாவது கொஞ்சம் நனைந்து அறிய முடிகிறது. இல்லையேல் டிவியில் ஒரு படத்தில் பார்த்தோ, எங்கோ படித்தோ, இது தான் மழை என்பது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

இப்படி நாம் இருவகையில் பெறுகிற உதவிக்கு பிரதியாக நாம் தெரிவிப்பது தான் நன்றி. இந்த நன்றியை நாம் தெரிவிக்கையில் நமக்கு எவ்வளவு உணர்ச்சி வசம். அதைப் பெறுபவருக்கு தான் எத்தனை மகிழ்ச்சி.

இந்த இடத்தில் ஒரு சிறு நெருடல். சிலர் புகழுக்காகவும், பெருமைக்காகவும் உதவுபவர்கள். மனம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செய்த உதவி அல்ல அது. ஒரு கோவிலில் ஒரு சிறு பாதரச விளக்கு தானம் செய்து, ஒரு மின் விசிறி தானம் கொடுத்து, அதன் மீது அதை விட பெரியதாக தனது பெயரை விளம்பரம் செய்து உதவுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் தனக்கு தேவையில்லாததை மற்றவர்களுக்கு கொடுப்பது அதைவிட கேவலம். ஒரு கோவிலில் சமீபத்தில் ஒரு சந்நிதியில் அந்த சுவாமி அம்பாள் பெயரைத் தேடினேன். அந்த பெயர்ப் பலகை சந்நிதிக்கு கிரில் கேட் செய்து வைத்த யாரோ ஒரு வியாபாரி பெயரை பெரிதாக அவரது முழு விலாசத்தோடு காட்டியது. மனம் வாடியது. கடைசி வரை சுவாமி பெயர் அம்பாள் பெயர் தெரியாமல் வேண்டிவிட்டு வெளியே வந்தேன்.

இந்த நன்றி தான் ஒருவிதத்தில் நாம் இறைவனுக்கு தெரிவிக்கும் பக்தி யாகும் கூட. நமக்கு எது தேவையோ அதை அளிப்பதிலும் நமக்குத் தேவையானதை நாம் அறியாதபோது, நமக்கு தானாகவே அளிப்பதும் அந்த இறைவன் என்று எத்தனை பேர் உணர்கிறோம்.

நமக்கு ஒருவர் ஒரு சின்ன உதவி செய்தாலும் அந்த தேவையான நேரத்தில் நாம் கேட்டோ நாம் கேளாமலோ நமக்கு உதவியவர்களை மறக்காமல் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பலமடங்கு கூடவே நாம் அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவது ஒரு சிறந்த பண்பு. நல்ல குணம் என்று சொல்லலாம். அதை அவ்வாறு செய்யாவிட்டால் சிலருக்கு தூக்கமே வராது. நிறைவேற்றும் வரை புழுவாய்த் துடிப்பார்கள்.

சிலர், தான் செய்த உதவிக்கு பிரதிபலன் எப்போது கிடைக்கும் என்று உதவி பெற்றவர்களிடம் எதிர்பார்ப்பது ரொம்ப சாதாரண சங்கடமான நிலைமை.

சிலர் அதை மற்றவரிடம் பிரகடனப்படுத்துவார்கள். இன்னாருக்கு இந்த உதவி இப்போது செய்தேன் என்கிற அவர்கள் வார்த்தை காதில் படும்போது உதவி பெற்ற நாம் நெளிவோம். மனம் உடையும்.

சிலர் உதவி பெற்றதையே உடனே மறந்துவிடுவதும் உண்டு. அவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று எனக்குத் தெரியாததால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அதற்கு நேர் மாறாக தாங்கள் உதவி செய்தோம் என்பதையே அடியோடு சிலர் அப்போதே மறந்து விடுவார்கள். எதிர்பார்ப்பு என்பது இல்லவே இல்லை அவர்களிடம் அவர்கள் மனிதரல்ல, தெய்வங்கள்.

இதை ஒரு கிழவி சிந்தித்துப்பார்த்தாள்.

காலத்தால் செய்த உதவி மாணப் பெரிது என்று தான் நமக்குத் தெரியுமே.
கிழவி என்ன சொல்கிறாள்.

ஒருவன் நமக்கு செய்த உதவிக்கு பிரதியுபகாரமாக எப்போது நாம் பல மடங்கு கூடவே சேர்த்து திருப்பி அளித்து மகிழ்வோம் என்ற தாகம் உதவி பெற்றவன் உள்ளே வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

இது எப்படியென்றால், எதைப்போல என்றால், வீட்டின் ஓரத்தில் ஒரு தென்னம் பிள்ளை வளர்க்கிறாய். சிறு கன்று. சிறிது நீர் கூட அதற்கென்று ஒருநாளும் ஊற்றவில்லை. உன் வீட்டில் கழிவு நீர் வெளியே போகும் பாதையை அந்த தென்னங்கன்றின் பக்கமாக செல்லும்படி வைத்தாயே. அதில் தான் அது வாழ்ந்தது. தென்னை உயிர் பெற்று, வளர்ந்து விட்டது இப்போது அண்ணாந்து பார்த்தால் அதன் மீது தான் எத்தனை இளநீர்க் கொத்து.

நீ அளித்த சாக்கடை நீருக்கு பிரதியுபகாரமாக, இனிய, சுவையான, உடலுக்கு இதமான, இளநீர்..... அதன் காலில் (வேரில் ) நீ அளித்த கழிவுநீருக்கு பலமடங்கு மேலான இளநீரைத் தனது தலையாலே ஒரு சப்தம் கூட போடாமல் சுமந்து தருகிறதய்யா!! அதுவே தென்னையின் நன்றி நவிலல்...

இது தான் அந்த அவ்வைக் கிழவியின் பாடல்:

''நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.''


http://www.sisnambalava.org.uk/articles/others/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20130219152634.aspx

J.k. Sivan's photo.



No comments:

Post a Comment