பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். 'என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?' என அரங்கன் கேட்க… 'முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்' என்றாராம் பராசரர்.
'அட… ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?' என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட… பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.
ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். "மன்னிக்கவும் ரங்கா! என்னால் உன்னை பாட முடியாது!" என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!
பின்னே… பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் 'பாட முடியாது' என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?
"என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன… பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!" என்றான் அரங்கன்.
பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, "அரங்கா… உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!" என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர்.
என்னவொரு அற்புதமான உவமை, பாருங்கள்! பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என யோசியுங்கள்.
பகவான் எனப்படுபவர் ஒளிமயமான, தேஜஸ் நிறைந்த, பரஞ்சோதி என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் வரும்?! சரி… அவருடைய திருமேனியை, பொன்னுக்கு நிகராக ஜ்வலிப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். ஆனால், அத்துடன் நின்றுவிடவில்லைஅவர். தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு தராததால், 'நன்பொன்' என்று பாடுகிறார். 'மாசறு பொன்னே…' என்கிறோமே, அப்படி நன்பொன் எனப் பாடுகிறார். அப்போதேனும் நிறைவுற்றாரா அவர்?!
'உரைத்த நன்பொன்' என்கிறார். அதிலும் மனம் சமாதானமாகவில்லை அவருக்கு. பொன் என்று சொல்லியாயிற்று; நன்பொன் என்று சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது; 'உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன்' என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது. இறுதியாக, 'சுட்டுரைத்த நன்பொன்' என்று, தங்கத்தைச் சுட்டு, உரைத்துப் பார்த்து, நல்ல பொன் எனத் தெரிந்துகொண்டேன் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்.
அப்படியும், அவருக்குள் ஒரு சந்தேகம்… 'இது சரிதானா? பகவானின் திருமேனிக்கு இது சரிசமம்தானா?' என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உசுப்ப… சட்டென்று, 'சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது' என்று பாடிவிட்டார் ஆழ்வார். '
'அடடா… பகவானே! உன்னுடைய ஜோதிமயமான திருமேனிக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது' என்று பாடி முடித்து, வணங்குகிறார்.
இதுதான் தமிழின் அழகு; இதுதான், ஆழ்வார் பெருமக்களின் பூரணத்துவமான இறை பக்திக்குச் சான்று!
தமிழையும் பக்தியையும் கலந்து, உள்ளிருந்து பாடல்களாகத் தந்திருக்காவிட்டால், நமக்கெல்லாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமெல்லாம்கிடைத்திருக்குமா, சொல்லுங்கள்!...
வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசத்திலிருந்து...
No comments:
Post a Comment