HRE-6: பன்னிரு திருமுறை:முதல் பாடல்கள்
03TuesdayFeb 2015
Posted by Prof. Dr. A. DAYALAN in இந்து மத சாரம், சைவம்,Saivam
நமச்சிவாய
பன்னிரு திருமுறைகள் (18,266 பாடல்கள்; 1,254 தலைப்புகள்)
***அருளாளர்கள் அளித்தவை பல, எனினும் அவைகளில் நமக்கு, இப்போதைக்கு இதை வைத்துக்கொள், என்று இறைவன் தந்தவைகள் சில.
***பன்னிறு திருமுறைகளின் 18,266 பாடல்களை பராயணம் செய்ய நாள் நேரம் உள்ளதா? நினைக்கதான் நாள் மனம் அம்சம் உள்ளதா?உமையொருபாகா, உள்ளம் உள்ளது ! முதலில், முதலை முனைவோம் முக்கண்ணன் முன்னேற்றுவான்.
திருமுறைகள்:1-7; தேவரம் (8250 பாடல்கள்)
(A)சம்பந்தர் (திருஞானசம்பந்தர்) தேவாரம்-4158 பாடல்கள்
(1) முதல் திருமுறை:சம்பந்தர் தேவாரம்-1469பாடல்கள்
தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.(திருமுறை முதல்பாடல்)
***தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
(2)இரண்டாம் திருமுறை:சம்பந்தர் தேவாரம்-1331பாடல்கள்
செந்நெல் அங்கழனிப் பழனத்தய லேசெழும்
புன்னை வெண் கிழியிற் பவளம் புரை பூந்தராய்
துன்னி நல்லிமையோர் முடிதோய் கழலீர் சொலீர்
பின்னு செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே,
***செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.
(3) மூன்றாம் திருமுறை:சம்பந்தர் தேவாரம்-1358பாடல்கள்
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடைப்பனி கால் கதிர் வெண்டிங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல் வினையே.
***நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே ! தில்லை வாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே ! கொன்றைப் பூமாலையை விரும்பிச் சூடியவனே ! நான் மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே ! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே ! எம் தொல்லை வினை இல்லையாம்படிதிருவருள் செய்க.
(B)அப்பர் (திருநாவுக்கரசர்) தேவாரம்-3066பாடல்கள்
(4)நான்காம் திருமுறை:அப்பர் தேவாரம்-1070பாடல்கள்
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
***திருவதிகை வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்.
(5) ஐந்தாம் திருமுறை:அப்பர் தேவாரம்-1015பாடல்கள்
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண் டின் புற
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.
***பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பேரின்ப நிலையை எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ ?
(6)ஆறாம் திருமுறை:அப்பர் தேவாரம்-981பாடல்கள்
அரியானை அந்ணர் தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
***எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும் மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றிஉரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.
(C)சுந்தரர் (சுந்தரமூர்த்தியார்) தேவாரம்-1026பாடல்கள்
(7)ஏழாம் திருமுறை:சுந்தரர் தேவாரம்-1026பாடல்கள்
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள் அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே
***பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
(D)திருமுறை-8 (1058 பாடல்கள்; மாணிக்கவாசகர்): திருவாசகம்-658, திருக்கோவையார்-400
(8)எட்டாம் திருமுறை: மாணிக்கவாசகர்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.
***திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க!
திருமுறை-9 (301 பாடல்கள்)
(9) ஒன்பதாம் திருமுறை-301 பாடல்கள் (பல சிவ பக்தர்கள்)
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
***இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திரு உள்ளம்பற்றிச் செயற்படுவாயாக.
திருமுறை-10 (3000 பாடல்கள்)
(10)பத்தாம் திருமுறை: திருமூலர்–திருமந்திரம்-3000 பாடல்கள்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
***ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
***பாயிரம் வரிசையில் முதல்பாடல்
ஒன்றவன்றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்தெட்டே.
***ஒரு பொருளாய் உள்ளவன் முதற்கடவுள் ; அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். மூன்றுநிலைகளில் (இலயம், போகம், அதிகாரம்) நிற்பான் .அறம், பொருள், இன்பம், வீடு நான்கனையும் உலகிற்கு உணர்த்தினான். ஐம்பொறிகளின்வழி நுகரப்படும் ஐந்து அவாவினையும் வென்றான். ஆறு அத்துவாக்களாக விரிந்தான். ஏழு உலகங்களுக்கும் மேற்சென்று இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.
திருமுறை-11(1385 பாடல்கள்)
(11) பதினொன்றாம் திருமுறை-1385 பாடல்கள்(பல சிவ பக்தர்கள்)
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி ஒளி திகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ் பயில் பாணபத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
இறைவனின்-சிபாரிசு கடிதம் (Recommendation letter):-
***சந்திரன் மகிழ்தல், நிறைந்த திங்கள் மாடக் கூடல்(நான்மாடக் கூடல்) `கூடற் பதிமிசை நிலவு ஆலவாய் (அருட்டுறை) , பூங்கோயில்` மன்னியசிவன் யான் மொழிதரும் மாற்றம்.
***பால் நிறம் போலும் உரிய கார் காலம் மேகம் ஒப்பு உரிமையின் – `உதவுதல் தனக்குக் கடன் என மனத்தினாலே கொண்ட உரிமையினால்`. அழகு. பெரிய சந்திரன்(பூரணச் சந்திரன்) ; குலவிய குடை` எனத் தனித் தனி இயைக்க. ஒத்த விளங்குகின்ற `குடைக் கீழ்ச் `உகைக்கும் தனித்தனிச் சென்று இயையும் போர்க்கு ஏற்ற நடைகளைக் கற்ற குதிரை ஏறிச் செல்லுதல் சேரலன் காண்க.
***பண்பால்-யாழ் இசைக்கும் பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் , அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன்அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து அனுப்பு.
திருமுறை-12 (4272 பாடல்கள்)
(12) பனிரெண்டாம் திருமுறை: சேக்கிழார்–பெரியபுராணம்-4272 பாடல்கள்
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
***எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவன், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்
……>>>HRE-6:பன்னிரு திருமுறைகள்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment