கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.
அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?
"நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி" என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.
ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:
"நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?"
அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:"எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு" என்றார்.
"அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?"
"சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.
இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.
இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.
"ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்" என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்" என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு 'மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்' என்று சொல்லிவிட்டார்.
எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.
தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.
"மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?"
"இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா" என்றார்.
அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.
மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு,"நீ போகத்தான் போறாயா?" என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.
அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.
அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.
மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், "உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது" என்றார்.
தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.
"எப்போ கிளம்பப் போறே?" என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் "தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்" என்றார்.
மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,
"நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்" என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:
"நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, 'என்னை விட்டுப் போறயா?'ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே" என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.
"உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்" என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்…….
No comments:
Post a Comment