courtesy; Sri.KSR.Ramki
திரு ஞான சம்பந்தருடன்
(கேள்விகள்: KSR கற்பனை; பதில்கள்- சம்பந்தர் தேவாரத்திலிருந்து)
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தரரே, வணக்கம். தமிழிலும் மந்திரங்கள் உண்டு என்பது உம்மால் அன்றோ உலகுக்குத் தெரிந்தது. பாண்டிய மன்னன் நோய் தீர விபூதி பூசி என்ன சொன்னீர்கள்?
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருவாலவாயான் திரு நீறே
ஐந்து வயதிலேயே தமிழ் கவிதை பாடி இந்துக்களின் ரிகார்ட் புத்தகத்தில் பதிவான குழந்தை மேதையே. உங்கள் திரு வாயால். மீண்டும்…..
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
கணபதி பற்றி நீவீர் பாடிய பாடலைக் கேட்க ஆசை. அதை வேகமாகப் படித்தால் வாயில் போட்ட கடலை மிட்டாய் கூட தூள்தூள் ஆகிவிடுமோ?
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடி கொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கண பதிவர வருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே
சம்பந்தன் தன்னைப் பாடினான், சுந்தரன் பெண்ணைப் பாடினான், அப்பர் என்னைப் பாடினான் என்று சிவனே சொன்னாராமே?
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞான சம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே
அற்புதம், உம்மை முருகனின் மறு அவதாரம் என்று அருணகிரியே திருப்புகழ் பாடியது உமது திரு நெறிய தமிழால் அன்றோ! உமது பாடல் படிக்கப் படிக்க எதுகை மோனையுடன் வருமே, அது என்ன பாட்டு?
உண்ணா முலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே
வயதில் மூத்த அப்பர் பெருமான் எச்சரித்தும் தைரியமாக மதுரை சென்று ஆபத்துக்களைச் சந்திthதீரே, இது அசட்டுத் தைரியம் இல்லையா?
வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
காலம் கலி யுகம், இதில் நல்ல படியாக நேர்மையாக ஒருவன் வாழ முடியாதென்று எனக்குத் தோன்றுகிறது.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இல்லை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
திருமணம் ஆனவுடன் பொதுமக்கள், புது மணப் பெண் புடைசூழ சோதியில் கலந்த போது என்ன பாடினீர்?
காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நமம் நமச்சிவாயவே
சென்னை மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்த வணிகர் குலப் பெண் பூம்பாவையை பல ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பல், அஸ்தி நிறைந்த பானையிலிருந்து உயிருடன் கொணர்ந்தது எப்படி?
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை
கட்டிடங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே பூம்பாவாய்
நோய் வந்தால் கடவுளை வழி பட முடியுமா?
"தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்தெய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே"
"இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்"
நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தா, நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் என்று பாரதியார் பாடியது உம் பாடலைக் கேட்டுத் தானோ?
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையர் ஏசலில்லையே
வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க பூதலத்தில் வந்துதித்த ஞானச்சுடரே, ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாட்டில் ராவணனையும் பத்தாம் பாட்டில் சமணர்களையும் சாடுகிறீரே?
"ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன் தனோடு
இடரான வந்து நலியா"
"புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின"
ஆளுடையப் பிள்ளையாரே, அப்படி என்ன சேக்கிழார் பெருமானை மயக்கினீர்? "பிள்ளை பாதி, புராணம் பாதி" என்று சொல்லும் அளவுக்கு 4000 செய்யுளில் 2000 செய்யுட்கள் எல்லாம் உமது கதையாக இருக்கிறதே?
"கண்காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே"
"நற்றமிழ் ஞான சம்பந்தன் நான் மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே"
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று மனம் உருகினார் வள்ளலார். ஒரு ஏழையின் நிலை கண்டு இரங்கி கனகதாரா துதி பாடி தங்க மழை பொழிவித்தான் சங்கரன். நீரும் வறட்சி நீங்க பாடினீராமே
காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை
படர் தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த
சிவன் மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரைசாய மிதி கொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைகளால் வாரி வயல் மேதி வைகு
நனிபள்ளி போலு நமர்காள்
நனி பள்ளியை பதிகம் பாடியே வளப் படுத்திய உமது தினசரி பிரார்த்தனை என்னவோ?
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,
ஆழ்க தீயது எல்லாம், அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே
நல்ல பிரார்த்தனை. அந்தணர் முதலாகவுள்ள எல்லா குலங்களும் பசு மாடு முதல் உள்ள எல்லா மிருகங்களும் வாழ்ந்து வையகத் துயர்கள் எல்லாம் மறைய வேண்டும். கேட்கவே ஆனந்தம்
No comments:
Post a Comment