முத்துசுவாமி தீட்சிதர் !
சிதம்பர நாதர் - யோகி, சித்தர், ஞானி ! முத்துசுவாமியின் தந்தை ராமஸ்வாமி தீட்சிதருக்கு ஸ்ரீ வித்யா தீக்ஷை தந்தவர். காசி செல்லும் வழியில் மதராஸப் பட்டிணம் வந்த போது தீட்சிதரின் அழைப்பை ஏற்று அவர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். அங்கிருந்து புறப்படும் சமயத்தில் விஸ்வாமித்திரர் தசரதனிடம் ராமனை கேட்டது போல் முத்துஸ்வாமியை தன்னுடன் அனுப்புமாறு தீட்சிதரிடம் கேட்டார். தசரதன் போலவே மயங்கி, தயங்கி கடைசியில் ஒப்புக்கொண்டார் தீட்சிதர்.
காசி போகும் வழியில் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, அவற்றுக்கு அருகிலுள்ள க்ஷேத்ரங்களை தரிசித்த படியே சென்றார்கள். வாராணசியில் முத்துஸ்வாமிக்கு பல உபாசனை முறைகளை உபதேசம் செய்தார் சிதம்பர நாத யோகி. ஒவ்வொரு நாளும் கங்கையில் முழுக்கு, விஸ்வநாதர், விசாலாக்ஷி, அன்னபூரணி, ஸ்ரீ சக்ரேஸ்வரர் (ஹனுமன் காட்) தரிசனம், காலையும், மாலையும் சங்கீதம், வேத பாராயணம். இப்படியாக சென்றது ஐந்து வருடங்கள். இதற்கிடையில் பத்ரிநாதம், நேபாளம்.
ஒரு நாள் கங்கை கரையில் இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது யோகி தீட்சிதரை நோக்கி ' நாம் பிரியும் காலம் வந்துவிட்டது. நீ ஊர் திரும்பு' என்றவர் மேலும் தொடர்ந்தார் 'கங்கையில் நின்று கொண்டு உனக்கு மிகவும் பிடித்தமானதை கலைவாணியிடம் பிரார்த்தித்துக் கொள்'. முத்துஸ்வாமியும் அவ்வாறே செய்ய அவர் கைகளில் ஏதோ கனக்கவே கண் திறந்து பார்த்தார். 'ராம' என்று தேவ நாகரி லிபியில் பொறிக்கப்பட்ட வீணை ! கரை ஏறிய தீட்சிதரை குரு ஆசிர்வதித்தார் 'நீ வீணையிலும், பாட்டிலும் வித்வானாக விளங்குவாய்'. இப்படி சொல்லி விட்டு கங்கையில் இறங்கிய யோகி மறுபடி கரை திரும்பவே இல்லை. மிகுந்த வருத்தத்துடன் அவருக்கு இறுதி கார்யங்களை செய்து விட்டு ஊருக்கு திரும்பினார் முத்துஸ்வாமி தீட்சிதர். இப்போதும் அந்த வீணை அவருடைய சந்ததியரிடம் இருக்கிறது.
குமரகுருபரர் !
பாண்டிய நாட்டின் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து, திருசெந்தூரில் முருகன் அருளால் கந்தர் கலிவெண்பா, மதுரையில் மீனாக்ஷியம்மையின் கருணையினால் பிள்ளைத்தமிழ் புனைந்த மஹா சித்த புருஷரான குமரகுருபரர் (இப்பெயரே செந்தில் நாதன் சூட்டியதாகும்) தன் குருவின் கட்டளையை ஏற்று காசியம்பதி அடைந்தார். காசிக் கலம்பகம், துண்டி விநாயகர் பதிகம் இயற்றினார். கேதாரீஸ்வரர் கோவிலை புதிப்பிக்கவும், சைவ மடம் ஒன்றை நிறுவவும் திருவுளம் கொண்டார். வந்தது காசி என்றாலும் கையில் காசு இல்லை. அப்போது வாராணசியை ஆண்ட இஸ்லாமிய அரசனிடம் பொருள் உதவி கேட்டார். மன்னன் அவரை உதாசீனம் செய்தான். அவமானப்பட்டு வெளியேறியவர் கலைவாணியின் மீது சகலகலாவல்லி மாலையை தொடுக்க உடன் உருது பேச, எழுத திறன் பெற்றார். ஒரு சிங்கத்தின் மீதேறி அரசவைசென்றார். பாதுஷாவோடு அவன் பாஷையிலேயே பேசி கோவில், மடம் கட்ட சம்மதத்தோடு பொருளும் பெற்று திருப்பணிகளை செவ்வனே செய்து முடித்தார். காசி மாநகரமே அவரை வாய்பிளந்து பார்த்து போற்றிப் புகழ்ந்தது. அவர் தொண்டால் மெருகேறிய கேதாரீஸ்வரர் கோவில் பொறுப்பும், நிறுவிய குமரகுருபரர் மட (திருப்பனந்தாள்) நிர்வாகமும் இப்போது நகரத்தார் சமூகத்திடம் இருக்கிறது.
மஹா கவி சுப்ரமண்ய பாரதி !
கண்களில் தீக்ஷிண்யமும் , உடையில் மிடுக்கும், நடையில் கம்பீரமும், பேச்சில் கர்ஜனையும் ஒருங்கே கொண்ட நம் தமிழகத்தின் ஒப்புயுவரற்ற பெருமையின் அடையாளமான பாரதி காசி வந்த போது அந்த மாமனிதனின் வயது பதினாறு. திருமணம் ஆகிவிட்டது. மனையாளை பிரிந்து வாராணசியில் தன் அத்தை வீட்டில் தங்கி கல்லூரியில் சமஸ்க்ரிதம், ஹிந்தி மொழிகளை கற்றுத் தேர்ந்தான் சுப்பையா. சில காலம் பள்ளியில் ஆசிரியர் வேலை. முத்துஸ்வாமி தீட்சிதர் போல் கட்டுக்கள் ஏதும் இல்லாததால் நகரெங்கும் சுற்றித் திரிந்தான் பாரதி. நினைத்தால் கோவில், கங்கைக் கரை. கையில் எப்போதும் காளிதாசன், ஷெல்லி போன்றவர்களின் படைப்புகள். கங்கையில் நின்று கொண்டு அவற்றை உரக்கப்படித்து எக்காளமிட்டான் நம் தேசியக் கவி. காசி வாசத்தின் போது பாரதியின் உடை அணியும் பாங்கு வட நாட்டார் பாணிக்கு மாறியது. தலையில் முண்டாசு, சட்டைக்கு மேலே உள், வெளிக்கோட்டு, பஞ்ச கச்ச வேஷ்டி. நேர் நடை. உரையில் சிம்மத்தின் உறுமல். காசி நகரமே அவனை வியந்து பார்த்தது. ஆகாரம் மட்டுமா, ஞானமும் அல்லவோ தருகிறாள் என்று அன்னபூரணியை போற்றிப்புகழ்ந்தான் மஹா கவி. கங்கையின் மாண்புக்கு ஈடு ஏதும் உண்டோ என்று முழக்கமிட்டான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பிய செல்லம்மாளின் காதலன் மீண்டும் கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றான். எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டிய சுப்ரமண்ய பாரதி தங்கி இருந்த வீடு ஹனுமன் கட்டத்தில்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment