உலக முடிவு எப்போது ??? - பகுதி - 2
***உண்மையான கல்கி அவதாரம் எது?, வராக அவதாரம் எப்போது நடந்தது ?
***தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது?
ஹர ஹர நம பார்பதீபதையே--அரஹர மஹா தேவா....
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
**(உலக முடிவு எப்போது?? - பகுதி-1)** என்ற முதல் பகுதியை படிக்க முன் இந்த பகுதியை படிக்க வேண்டாம்....
சைவம் கூறும் உலக முடிவை/ பிரளயங்களை பற்றி பார்க்க முன்னர் காலக் கணக்கினை அறிவோம்..இந்த கால கணக்கானது சைவத்திற்கு மட்டுமல்ல அனைத்து வேத நெறிகளிட்கும் பொருந்தும்...
கால வாய்ப்பாடு
60 தற்பரை = 1 விநாடி
60 விநாடி = 1 நாளிகை
60 நாளிகை = 1 நாள்
365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.
கிருதயுகம் = 17,28,000 வருடம்
திரேதா யுகம் = 12, 96,000 வருடம்
துவாபர யுகம் = 8,64,000 வருடம்
கலியுகம் = 4,32,000 வருடம்
சதுர்யுக மொத்தம் = 43,20,000 வருடம் .... (17,28.000+12,96,000+8,64,000+4,32,000 = 43,20,000)
71 சதுர்யுகம் = 1 மன்வந்தரம்
1000 சதுர யுகம் = 432 கோடி வருடம் = 1 கற்பம்
**...சைவம் கூறும் உலக முடிவு/ பிரளயங்களாவன ..**
1. நித்திய பிரளயம்;
இது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நிகழ்வது. ஒவ்வொரு மன்வந்தரமும் 71 சதுர்யுகங்கள் கொண்டது. தற்போது நடப்பது வைவஸ்வத மன்வந்தரத்தில் 28வது சதுர்யுகம். சதுர் என்றால் 4. ஒவ்வொரு சதுர்யுகமும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று 4 யுகங்கள் கொண்டது. ஒவ்வொரு சதுர் யுகத்திலும் 43,20,000 வருடங்கள் உள்ளன. வைவஸ்வத மன்வந்தரத்தின் 28வது சதுர் யுகத்தில் கிருத, திரேதா, துவாபர யுகங்கள் முடிந்து இப்போது நடப்பது 4வது யுகமான கலியுகம். இது 4,32,000 வருடங்கள் கொண்டது.
இந்தக் கலியுகம் மகாபாரத யுத்தம் முடிந்து கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் கி.மு. 3101 பெப்ரவரி மாதம் 17ம் திகதி தொடங்கியது. ஆகவே கலியுகம் முடிய இன்னமும் 4,26,888 வருடங்கள் உள்ளன. இந்த கலியுகம் முடியும் தறுவாயில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும். அவர் விஷ்ணுயசிரயன் (விஷ்ணுயசஸ்) என்னும் அந்தணனுக்கு மகனாக சாம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். ஆனால் உலக முடிவு வராது. இந்த கலியுகம் முடிய 29வது சதுரயுகத்தின் 1வது யுகமான கிருத யுகம் மீண்டும் தொடங்கும். இதையே ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடும்போது பாரதி "கிருத யுகம் எழுக மாதோ" என்று பாடினான்.
இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 71 சதுர்யுகங்களும் கழிந்த பின்னர் மன்வந்தர முடிவில் ஒரு பிரளய அழிவு உண்டாகும். அது எமது பூலோகத்துக்கு மட்டும் நிகழ்வது. பூலோகம் என்பது பூமி மட்டும் அல்ல; எமது சூரிய குடும்பம் உள்ளிட்ட 2000 மில்லியனுக்கு மேற்பட்ட சூரிய குடும்பங்களை உடைய எமது ஆகாயகங்கை என்னும் இந்தப் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் இந்தப் பிரளயத்தில் அழியும். இதுவே நாம் வாழும் எமது உலகின் முடிவுக்காலமாகும்.
இவை யாவும் ஒரு கிருத யுக காலம் அதாவது 17,28,000 வருடங்கள் நீருள் அமிழ்ந்திருக்கும். இந்தப்பிரளயம் எப்படி இருக்கும் என்று சிந்திப்பவர்கள் "2012" திரைப்படத்தைப் பார்த்தால் பிரளயம் என்பது எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.
வரப்போகின்ற பிரளயத்தில் இந்தப் பூமி மட்டுமல்ல நமது ஆகாய கங்கை என்னும் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் அழியும். அப்போது பூலோகம் தவிர்ந்த ஏனைய உலகத்தொகுதிகள் யாவும் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். பிரளய கால முடிவில் மீண்டும் இந்த உலகங்கள் பிரம்மாவினால் படைக்கப்படும்.
இவ்வாறான பிரளய காலம் ஒன்றில் நீருள் அமிழாது அக்காலத்தில் உயர்ந்து நின்ற சிகரம் ஒன்றுதான் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி...
சம்பந்தர் தேவாரம் :-
"கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.."
""துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே."
இதேமாதிரியாக "2012" திரைப்படத்தில் எமது இன்றைய உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டு ஒரு சிறு குன்றாக தண்ணீருக்கு மேல் நிற்பதையும் அதன்போது ஆபிரிக்காவில் வேறொரு மலை உருவாகி அதுவே அப்போதைய உலகின் உயர்ந்த சிகரம் என்றும் திரைப்படம் சொல்வது ஒப்பிடத்தக்கது..அம்மையப்பராகிய இறைவர் பிரளய காலத்தில் பிரணவத்தைத் தோணியாக்கி சீர்காழியில் சுற்றி வந்ததாக சைவம் கூறுகின்றது. இதனாலேயே சீர்காழிக்கு தோணிபுரம் என்று பெயர்.
"பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை" - சம்பந்தர் .
2. நைமித்திக பிரளயம்;
1000 சதுர் யுகங்களுக்கு அதாவது 432 கோடி வருடங்களுக்கு ஒருமுறை நிகழவது நித்திய பிரளயம் ஆகும். இது ஒரு கல்ப காலம். இது படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பகற்பொழுது. இப்போது நடப்பது சுவேதவராக கல்பமாகும். முன்னைய கல்ப முடிவில் நீரில் அமிழ்ந்திருந்த உலகத்தை விஷ்ணுவானவர் வெள்ளைப்பன்றி வடிவெடுத்து மேலே கொண்டு வந்ததால் இதற்கு இந்தப்பெயர்.
சுவேதம் என்றால் வெள்ளை; வராகம் என்றால் பன்றி என்று அர்த்தம். இது விஷ்ணுவின் 10அவதாரங்களில் ஒன்று. நித்திய பிரளயத்தில் எமது பூலோகம் என்னும் பால்வீதியில் உள்ள அனைத்து அண்டத்தொகுதிகளுடன் அதற்கும் அப்பாலும் உள்ள புவர் லோகம், சுவர் லோகம் என்னும் அண்டத்தொகுதிகளும் அழியும்.
இந்த மூவுலங்களைச்சார்ந்த அண்டங்கள் யாவும் இந்த நித்திய பிரளயத்தின் பின்னர் 1000 சதுர் யுக காலம் நீரினுள் அமிழ்ந்திருக்கும். இது பிரம்மாவுக்கு இரவுக்காலமாகும். இக்காலத்தில் இந்த மூவுலகங்கள் தவிர்ந்த ஏனைய உலகங்கள் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். இதன் பின்னர் பிரம்மாவினுடைய பகல் தொடங்க அவர் இம்மூவுலகங்களையும் முன்போலப் படைப்பார்.
பதிவு நீண்டதால் அடுத்த பதிவில் ஏனைய பிரளயங்கள் பற்றி பார்ப்போம்...தொடரும் - பகுதி - 3
நன்றி Dr. இ.லம்போதரன் (MD)
No comments:
Post a Comment