Thursday, November 27, 2014

7th padai veedu -thirupugazh

Courtesy: Sri.Sundararajan
சிறுவை
 
முருகனுக்குரிய இடமாக ஆறு படைவீடுகளை சிறப்பித்து கூறுவார்கள். ஏழாவது படை வீடு அன்பர்களின் மனம்தான் என்பார் கிருபானந்த வாரியார். அவர் கூறுவது அருணகிரியார் வாக்கின் எதிரொலிதான்.  "சந்ததமும்( எப்பொழுதும்)  அடியார்கள் சிந்தை அது குடியான பெருமாள்" என்பது அருணகிரியாரின் வாக்கு. சிறுவாபுரி  தற்சமயம் சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது (சென்னை  கும்மிடிப்பூண்டி வழியில் பொன்னேரிக்கு அருகில் உள்ளது) ஸ்தலத்திற்கு உரிதான அண்டர்பதி என்ற திருப்புகழில் இவ்வாறு சொல்லும் பொழுது அவர் வேண்டுவது மங்கை உடன் அரி தானும் இன்பம் உற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்.
 
தாமரை போன்ற கண்களை உடையவனே, தேவசேனையின் கணவனே, ஞானம் நிறைந்தவனே, வடிவேலா, ஏழு மலைகளும் பிளக்கவும்கிரௌஞ்சத்தின் வலிமையை அழித்தவனே,
தேவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் அசுரர்கள் அழியவும்காளியுடன் சங்கரன் மகிழவும்,விநாயகனும்உமையாளும் மகிழவும்உலகில் உள்ளோரும்முனிவர்களும்இந்திரனும் நின்று காணவும் இலக்குமியும் திருமாலும்இன்பமுறவும் மயில் மீது ஏறி ஆடி என் முன்னே வரவேண்டும்.
 
அடியார்கள் மனத்தில் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே, சிறுவையில் வாழும் பெருமாளே, மயிலுடன் ஆடி வரவேண்டும்.
 
புதுமனைக்கு போகவேண்டி இந்த திருப்புகழைப் பாடி துதிக்காலாம் என்பார் வள்ளிமலை ஸ்வாமிகள். பாடலையும் பொருளையும் இப்பொழுது பார்கலாமா.
 
 
 
     அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
        அண்டர்மன மகிழ்மீற                   வருளாலே
     அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
        ஐங்கரனு முமையாளு                    மகிழ்வாக
     மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
       மஞ்சினனு மயனாரு                     மெதிர்காண
     மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
      மைந்துமயி லுடனாடி                    வரவேணும்
     புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
       புந்திநிறை யறிவாள                    வுயர்தோளா
    பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
        பொன்பரவு கதிர்வீசு                     வடிவேலா
     தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
        தண்டமிழின் மிகுநேய                    முருகேசா
     சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
        தண்சிறுவை தணில்மேவு             பெருமாளே.
 
பதம் பிரித்து உரை
 
      அண்டர் பதி குடி ஏற மண்டு அசுரர் உரு மாற
      அண்டர் மன(ம்) மகிழ் மீற அருளாலே
 
அண்டர் பதி = தேவர்களின் தலைவனான இந்திரன் குடி ஏற = தனது பொன்னுலகத்திற்குக் குடியேறவும். மண்டு = நெருங்கி வந்தஅசுரர் உரு மாற =அசுரர்கள் உரு மாறி இறக்கவும் அண்டர் மனம் மகிழ் மீற = தேவர்கள் மனத்தில்மகிழ்ச்சி அதிகமாகக் கொள்ளவும் அருளாலே = அத்தகைய அருளோடு.
  
      அந்தரி ஒடு உடன் ஆடு சங்கரனும் மகிழ் கூர
      ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
    
அந்தரியொடு உடன் ஆடு = காளியுடன் ஆடிய சங்கரனும் மகிழ் கூர = சங்கரன் மகிழ்ச்சி மிகக் கொள்ளவும் ஐங்கரனும் = விநாயகனும் உமையாளும் மகிழ்வாக =விநாயகனும்உமா தேவியும் களிப்புற.
 
      மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும்
      மஞ்சினனும் அயனாரும் எதிர் காண
        
மண்டலமும் = பூமியில் உள்ளவர்களும். முநிவோரும் = முனிவர்களும் எண் திசையில் உள்ள பேரும் = எட்டு திசைகளில் உள்ளவர்களும் மஞ்சினனும் =இந்திரனும் அயனாரும் = பிரமனும். எதிர் காண = எதிர் நின்று பார்க்கவும்.
 
     மங்கை உடன் அரி தானும் இன்பம் உற மகிழ் கூற
     மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
    
மங்கையுடன் = அலர் மேல் மங்கையோடு அரி தானும் = திருமாலும் இன்பம் உற =இன்பத்துடன் மகிழ் கூற = மகிழ்ச்சியை எடுத்து ஓதவும் மைந்து = வலிமையானமயிலுடன் ஆடி வர வேணும் = மயிலுடன் என் முன் ஆடி வர வேண்டும்.
 
      புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள
      புந்தி நிறை அறிவாள உயர் தோளா
 
புண்டரிக = தாமரை மலரை ஒத்த விழியாள = கண்களை உடையவனே அண்டர் மகள் = தேவர்கள் வளர்த்த மகளின் (தேவசேனையின்) மணவாள = கணவனே புந்தி நிறை = அறிவு நிறைந்த. அறிவாள = ஞானம் கொண்டவனே உயர் தோளா =உயர்ந்த புயங்களை உடையவனே.
 
     பொங்கு கடல் உடன் நாகம் விண்டு வரை இகல் சாடு
     பொன் பரவு கதிர் வீசு வடிவேலா
 
பொங்கு கடலுடன் = பொங்கின கடலுடன் நாகம் விண்டு = எழு கிரிகள் பிளவு பட வரை = கிரௌஞ்ச கிரியின் இகல் = வலிமையை சாடு = பாய்ந்தழித்த பொன் பரவு = பொன்னொளி பரப்பி கதிர் வீசும் வடிவேலா = ஒளிவீசும் கூரிய வேலனே.
 
     தண் தரளம் அணி மார்ப செம் பொன் எழில் செறி ரூப
     தண் தமிழின் மிகு நேய முருகேசா
 
தண் தரளம் = குளிர்ந்த முத்து மாலை. அணி மார்ப = அணிந்த மார்பை உடையவனே செம் பொன் எழில் செறி சொரூப = செம் பொன்னின் அழகு செறிந்த உருவத்தனே தண் தமிழின் மிகு நேய = நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்டுள்ளவனே முருகேசா = முருகேசனே.
 
     சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான
     தண் சிறுவை தனில் மேவு பெருமாளே.
 
சந்ததமும் = எப்போதும். அடியார்கள் = அடியார்களின் சிந்து அது குடியான =மனத்தையே இடமாகக் கொண்ட பெருமாளே= பெருமாளே தண் = குளிர்ந்த
.

சிறுவை தனில் மேவும் பெருமாளே = சிறுவையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சிறுவாபூரில்ஆலயத்தில் உல்ள மரகத மயில் பார்க்க வேண்டிய பொக்கிழம்.


Please visit 
 

No comments:

Post a Comment