Tuesday, November 20, 2012

pooram & uthiram

courtesy: Sri.RV Ramani
 
வானத்தில் அர்ஜுனனும் திரௌபதியும்

Picture shows stars in Kanya Rasi (Virgo Constellation)


பூரம் உத்தரம் ஆகிய இரு நட்சத்திரங்களும் சிம்மம் கன்னி ராசிகளில் உள்ள நட்சத்திரங்கள்..இவற்றை டெல்டா மற்றும் தீடா லியோ என்றும் பீடா மற்றும் 93 லியோ என்றும் நவீன வானவியல் குறிப்பிடுகிறது. பீடா லியோ, டெனிபோலா எனப்படுகிறது. இவை வெண்மை நிற நட்சத்திரங்கள். இவையே வெண்மை நிறத்தவனான பல்குனனுடன் தொடர்பு கொண்ட நட்சத்திரங்கள். பூரத்திற்கு அர்யமாவும் உத்தரத்திற்கு
பகாவும் அதி தேவதைகள். பங்குனி மாதம் பல்குனி நட்சத்திரத்தில் பிறந்ததால் பல்குனன் என்ற பெயரை அர்ஜுனன் பெற்றான்.

நட்சத்திர அதிசயங்கள்

வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்
ச.நாகராஜன்
அர்ஜுனி நட்சத்திரம்!

ரிக் வேதம் பூர்வ பல்குனி நக்ஷத்திரத்தை 'அர்ஜுனி' என்றே குறிப்பிடுகிறது. (ரிக் வேதம்X.85.13)உலகின் முதல் இலக்கியமான வேதம் மிகமிகப் பழையது.அதில் அர்ஜுனனைப் பற்றிய குறிப்பு வருகிறதென்றால் மகாபாரதத்தின் பழமையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். வேதம்,பூரம் எனப்படும் பூர்வ பல்குனியை 'அர்ஜுனா பல்குனா:' எனக் கூறுவதோடு அது இரண்டு நட்சத்திரங்களை உடையது எனக்
கூறுகிறது. அர்ஜுனன் என்ற வார்த்தைக்கு வெண்மை என்று பொருள்.இந்த நட்சத்திரங்கள் இரண்டும் வெண்மையாக இருப்பது ஒரு சுவையான செய்தி! இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் அர்ஜுன மரம் போலத் தோற்றம் இருப்பது தெரிய வரும்! இந்த அர்ஜுன நட்சத்திரத்தின் அருகில் தான் துருபத நட்சத்திரம் காணப்படுகிறது!

சப்தரிஷி மண்டலத்தில் உள்ள 17ம் எண் உடைய நட்சத்திரம் 60 வருட சக்கர சுழற்சியைக் கொண்ட இரட்டை நட்சத்திரம் ஆகும். இந்த சக்கரம் அர்ஜுனனுக்கு மேல் சுழன்று வருவதால் அது தான் அவனது இலக்காக அமைகிறது! அந்த மீனின் கண்ணில் அவன் அம்பை எய்தால் அவன் திரௌபதியை அடையலாம்! இந்த அர்ஜுனி நட்சத்திரத்தில் தான் முன்பு திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது!

கன்யா ராசியின் ஆறு நட்சத்திரங்கள்

வானத்தில் கன்யா ராசி மண்டலத்தில் ஆறு நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பெரும் மர்மங்களும் சுவையான செய்திகளும் அடங்கி உள்ளன!இந்த ஆறு நட்சத்திரங்களில் பெரும் தவத்தைச் செய்து ராமனின் அருளைப் பெற்ற சபரி நட்சத்திரம் அமைவது குறிப்பிடத்தகுந்தது. பெரும் தவத்திற்குரிய இடமான சப்தரிஷி மண்டலம் அருகில் சபரிக்கு உரிய இடம் கிடைத்திருப்பது நியாயம் தானே! ஆறு
நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் நீலம் கலந்த வெண்மையுடனும், மூன்றும் ஐந்தும் மஞ்சள் நிறத்துடனும் ஆறாம் நட்சத்திரம் சிவப்பாகவும் ஐந்தாம் நட்சத்திரம் வெண்மையாகவும் காணப்படுவதால் இவை விசித்திரமானவை எனக் குறிக்கப்படும் சொல்லான 'விசித்ரா' என அழைக்கப்படுகின்றன. இதில் ஐந்தாம் நட்சத்திரம் (சூர்யனின் ஒளி போன்ற மஞ்சள் நிறத்தை உடையவளான) திரௌபதியாக
அடையாளம் காட்டப்படுகிறது!

வானிலே திரௌபதியின் இடத்தைக் காணும் தர்மர்

மஹாபாரதம் ஸ்வர்க்காரோஹண பர்வத்தில் பூமியில் தம் கடமையை முடித்த பாண்டவர்கள் அனைவரும் வானில் தம் தம் இடத்திற்குச் செல்வதை விரிவாகக் குறிப்பிடுகிறது. (நான்காம் அத்தியாயம்- கோவிந்தன் அர்ஜுனன் ஆகிய இருவரையும் ரிஷிகள் புடை சூழ்ந்த இடத்திலும் பன்னிரெண்டு சூர்யர்களோடு கர்ணனையும், மருத் கணங்களோடு சூழப்பட்ட வாயுவின் அருகில் பீமனையும் அஸ்வினீ தேவர்களின்
ஸ்தானத்தில் நகுல சகாதேவர்களையும் பார்க்கிறார்)ஸ்வர்க்க வழியில் செல்லும் தர்மர் ஒவ்வொருவருடைய இருப்பிடத்தையும் இவ்வாறு பார்த்த பின்னர் திரௌபதியின் இடத்திற்கு வந்து அவளைப் பார்க்கிறார். மகாபாரதம் கூறும் சுலோகங்களைப் பார்ப்போம்:

"தாமரை மலர்களாலும் குவளை மலர்களாலுமாகிய மாலையை அணிந்தவளும் ஸ்வர்க்கத்தை விளங்கச் செய்பவளும் சூரியன் போன்ற ஒளியுள்ளவளுமாகிய திரௌபதியைப் பார்த்தார். அப்போது அவர் அவளைத் தொட விரும்பினார்.அப்போது இந்திரன் அவரை நோக்கி,"யுதிஷ்டிரரே! இவள் கர்ப்பத்தில் பிறவாதவளும் உலகங்களுக்குப் பிரியமானவளும் புண்ய சம்பந்தமுள்ளவளுமான லஷ்மி!இவள் உமக்காக திரௌபதி வடிவம்
எடுத்துக் கொண்டு மானிடத்தன்மையை அடைந்தாள்."

இவ்வாறாக, தனது கடமையை முடித்த திரௌபதி மீண்டும் வானில் தனது ஸ்தானத்திற்குத் திரும்புவதைப் பார்க்கிறோம்.
இத்தோடு கன்யா ராசியில் உள்ள இந்த நட்சத்திரங்களின் மீதான அடுத்த நட்சத்திரங்களின் ஆக்கிரமிப்பைக் குறித்து மேலை நாட்டு அறிஞர் ஆர்.பிரௌன், "கிரேக்க இலக்கியம் இகாரியஸின் மகளான எரிகோனின் ஆபரணங்களை அகற்றும் சம்பவத்தை இது நினவு படுத்துகிறது" என்று குறிப்பிடுகிறார், துச்சாஸனன் திரௌபதியின் துகிலை உரியும் சம்பவத்தை இத்தோடு ஒப்பிட்டால் நாம் வியப்பை அடைவோம்!

Picture shows stars in Simha rasi (Leo Constellation)


கான்பூரையும் கன்யாகுமரியையும் காக்கும் கன்யா மண்டலம்

கன்யா ராசி மண்டலம் கான்பூர் எனப்படும் கன்யாபுரத்தையும் தென் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரியையும் காக்கும் மண்டலமாகத் தொன்று தொட்டு நம் முன்னோரால் சொல்லப்பட்டு வருகிறதுதை நினைவு கூர்ந்து மகிழலாம்!

அர்ஜுனனும் சர் ஜேம்ஸ் ஜீனும் காணும் விஸ்வரூப தரிசனம்!

போர்க்களத்தில் கீதையை கண்ணன் சொல்லக் கேட்ட அர்ஜுனன் திகைத்து, "பயங்கரமான உக்ரரூபத்துடன் இருக்கிறாயே!நீ யார்?" (ஆக்யாஹி மே கோபவான் உக்ர ரூபோ; கீதை 10-31)என்கிறான். அதற்குக் கண்ணன்,"உலகை அழிக்கும் வலிமை வாய்ந்த காலன் நான்!" (காலோஸ்மி லோக க்ஷயக்ருத் ப்ரவ்ருத்தோ; கீதை 10-32)என்கிறான்!

பிரசித்தி பெற்ற வானியைல் விஞ்ஞானி பயங்கரம் மற்றும் உக்ரம் என அர்ஜுனன் குறிப்பிட்ட'டெரர்' (terror) மற்றும் டெரிபிக்(terrific) என்ற வார்த்தைகளால் பிரபஞ்சத்தின் விஸ்வரூபத்தை வானில் கண்டு பின் வருமாறு குறிப்பிடுகிறார்:-" நமது பூமியைச் சுற்றி பரவி இருக்கும் பிரபஞ்சத்தின் நோக்கத்தையும் இயற்கையையும் கண்டுபிடிக்க முயலும் நமக்கு அது பயங்கரமாகத் தோற்றமளிக்கிறது!
அதனுடைய அர்த்தமே காண முடியாத பரந்த தூரங்களும் கற்பனைக்கும் எட்ட முடியாத காலமுமே இந்த பயங்கரத்திற்கான காரணங்கள்! பிரபஞ்சத்தின் எல்லையற்ற காலத்தின் முன் நாம் கூனிக் குறுகுவதோடு மனித குல சரித்திரமே இமைக்கும் நேரத்திற்கும் கீழாக இருப்பதையும் காண்கிறோம். பரந்த வெளியில் மனித குலமாகிய நாம் மட்டும் தனித்து நமது வீடாகிய பூமியில் இருக்கிறோம்!உலகின் எல்லா
சமுத்திர மணல்களையும் பிரபஞ்சமாக வைத்துக் கொண்டால் அதில் ஒரு சிறுமணல் துகளின் பத்து லட்சத்தில் ஒரு பகுதி போல நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோம்!!"

அர்ஜுனன் கண்ட விசுவரூப தரிசனத்தில் அவன் பயந்து கூறிய அதே சொற்களை விஞ்ஞானி அப்படியே கூறுவது வியப்பை அளிப்பதாக இருக்கிறது.

விஞ்ஞானமும் புராணமும் ஒரே விஷயத்தை இரு வேறு வழிகள் வாயிலாகக் காண்பிக்கின்றன என்று பிரபல வானியல் விஞ்ஞானி டாக்டர் ஹெர்பர்ட் டிங்கிள் கூறியது மிகப் பொருத்தமாக அமைகிறது!

 

No comments:

Post a Comment