Tuesday, October 30, 2012

ஆன்லைனில் கதை சொல்லும் பாட்டி ருக்மணி சேஷசாயி !


Courtesy:Sri.Mayavaram Guru



ஆன்லைனில் கதை சொல்லும் பாட்டி !

 http://chuttikadhai.blogspot.com  & http://rukmaniseshasayee.blogspot.com  

'எதிர்கால சமுதாயம் பண்போடு வளரவும் வரலாற்றை அறிந்ததாக விளங்கவும் செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள்.'

இப்படி ஓர் அறிமுகத்துடன் இணையதளத்தில் ப்ளாக் (வலைப்பதிவு) எழுதிவருகிறார், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த 
74 வயதுப் பாட்டி ருக்மணி சேஷசாயி. 30 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். 50 ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர். சுட்டிகளுக்காக இவர் இதுவரை 27 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

'பாட்டி சொல்லும் கதைகள்' என்ற பெயரில் இவர் எழுதிவரும் ப்ளாக் மிகவும் பிரபலம். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புதுக் கதையைத் தவறாமல் அப்டேட் செய்து வருகிறார். இதுவரை இவரது ப்ளாக் பக்கங்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை புரட்டப்பட்டு உள்ளன.

''மாணவர்களிடம் இப்போது பாடங்களைத் தாண்டிய புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்துபோய்விட்டது. அதேவேளையில், அவர்கள் எந்த நேரமும் கம்ப்யூட்டரையும் இணையதளத்தையும் பயன்படுத்திவருவது என் கவனத்தை ஈர்த்தது. அப்போதுதான், இணையத்திலேயே எழுதலாம் என்ற எண்ணம் உதித்தது.

எனக்கு ஒரு ப்ளாக் உருவாக்கித் தரும்படி என் பேரனைக் கேட்டேன். அவனும் உடனே உருவாக்கிவிட்டான். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷன் மூலம் தமிழில் டைப் செய்து கதை எழுதத் தொடங்கினேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாட்டில் இருந்து எல்லாம் பலரும் கதைகளைப் படித்துவிட்டுக் கருத்து தெரிவிப்பார்கள்'' என்று சொல்லும் ருக்மணிப் பாட்டியின் பேச்சில் அத்தனை சந்தோஷம்.

இவரது ப்ளாக்கில் உள்ள திருக்குறள் கதைகள் அத்தனையும் சூப்பர் ஹிட்! திருவள்ளுவர் கூறிய வாழ்க்கைத் தத்துவங்களைச் சுவாரசியமானக் கதைகளாகத் தருகிறார். புராணக் கதைகளையும் எளிமையாகச் சொல்கிறார். இவரது எழுத்துப் பணியைச் சக வலைப்பதிவர்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர். சென்னையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவில் இவரைக் கௌரவித்து இருக்கிறார்கள்.

''நம் நாட்டின் வரலாற்றுப் பெருமைகளையும் கலாசார மேன்மைகளையும் கதைகள் மூலம் சொல்கிறேன். இன்றைய சிறுவர்களின் உலகத்தைப் பிரதிபலிக்கும் கதைகளையும் எழுதுகிறேன். சுட்டிகளை வாசிப்புதான் மேம்படுத்தும். அதற்கு உதவியாக இருப்பதில் மிகவும் திருப்தியாக இருக்கிறது.

சுட்டிகளிடம் நான் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். நிறையப் புத்தகங்களை படிக்க வேண்டும். ஆன் லைனில் உலா வருவது தப்பு இல்லை. அங்கே ஆக்கபூர்வமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதைத் தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உங்கள் வீட்டுத் தாத்தா பாட்டிகளுக்காக ப்ளாக் உருவாக்கி, அதில் அவர்களது அனுபவங்களைப் பதிய உதவுங்கள்'' என்று அன்போடு அறிவுறுத்துகிறார் ருக்மணிப் பாட்டி.
 

1 comment:

  1. I am a thatha writing stories for Indian children. Please refer
    http://rajathathacorner.awardspace.com/

    ReplyDelete