தாயுமானவ ஸ்வாமிகள் J.K. SIVAN தாயுமானவர் வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வாழ்ந்து, இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தார்.திருச்சி மாத்ருபூதேஸ்வரர் மேல் அதீத பக்தி. அவரைத் தான் தாயுமானவ சுவாமி என்று தமிழில் அழைக்கிறோம். இன்றும் ஒரு தாயுமானவர் பாடல் கீழே தருகிறேன். அர்த்தம் புரிந்து கொள்வது கஷ்டமே இல்லை. .
''கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்
கரடிவெம் புலிவாயையுங்
கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல்கொளலாஞ்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி னும்புகுதலாஞ்
சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறமரிது சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. ''
ஒரு பெரிய லிஸ்ட் தருகிறார் தாயுமானவர். எதெல்லாம் முடியும் எது முடியவே முடியாது என்று அவர் அன்று சொன்னது இன்றும் பொருந்தும்.
காட்டில் பலத்தோடு அலையும் மதங் கொண்ட யானையை ஒருவழியாக வசப்படுத்தி நடக்க விடலாம். கரடி புலிகளின் கொடிய சக்தி கொண்ட வாயைக் கூட ஒரு வழியாக கட்டி விடலாம். , சிங்கத்தின் முதுகிலேறி சவாரி செய்யலாம். விஷ நாகங்களைக் கூட கழுத்தைப் பிடித்து வீசி ஆட்டலாம். யாகத்தீ வளர்த்து மந்திர சக்தியால் ஐந்து லோகங்களையும் விற்று சாப்பிட்டு விடலாம்.சித்து வேலை கற்று எவர் கண்ணிலும் படாமல் மாயாவியாக உலகத்தை சுற்றி வரலாம். வானுலகத்தில் உள்ள தேவர்களுக்கு கட்டளையிட்டு வேலை வாங்கலாம்.
எந்த வயதிலும் இளமை பொருந்திய உடலோடிருக்கலாம்.ஒரு சரீரத்திலிருந்து இன்னொரு சரீரத்துக்குள் புகலாம். நீரின் மீது நடக்கலாம். நெருப்பின் மீது வீட்டில் AC அறையில் சோபாவில் உட்கார்ந்திருப்பது போல் இருக்கலாம். ஒருவரும் நமக்கு ஈடு இணை இல்லை என்று பெருமிதத்தோடு அஷ்ட மஹா சித்திகள் பெறலாம். ஆனால் நம்மால் முடியாதது ஒன்று இருக்கிறதே. மனதில் எண்ணங்கள் எழாமல் அடக்கி சும்மா இருக்கக்கூடிய திறன் எப்படி? ஆஹா இதை மாட்டு மட்டும் என்றும் அறியமுடியவில்லையே, ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே. அதை நீ எனக்கு உணர்த்தவேண்டும் அறிவாகிய என் மாத்ரு பூதேஸ்வரா, தேஜோ மயானந்தமே.''
நேற்று ஒரு நண்பர் பையன் என்னை பார்க்க வந்திருந்தான். என்னவெல்லாமோ கொஞ்சம் பேசிவிட்டுஅவனை கேட்டேன்; ''தம்பி நீங்க என்ன செய்றீங்க? 'ஸார், நான் சும்மாத்தான் இருக்கேன்'' பெரியவர்:''அதெப்படி அப்பா நீ இவ்வளவு கெட்டிக்காரனா இருக்கே. சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமான வேலையாச்சே’.அது
எவ்வளவு கஷ்டமானது'' என்று தாயுமானவ சுவாமிகள் சொல்லியிருப்பதே இப்போது தானே படிச்சேன்.'' மேற்கண்ட பாடலை பாடிக்காட்டினேன். அந்த பாட்டின் அர்த்தத்தாலோ, அல்லது எனது குரலின் கர்ண கொடூரத் தாலோ என்னவோ '' சார் கொஞ்சம் அவசரமாக போக வேண்டி இருக்கிறது. இன்னொரு நாள் வரேன்'' என்று எழுந்து விடுவிடுவென்று நடந்து விட்டான். இனி இந்த தெருப்பக்கமே திரும்பமாட்டான் என்று அவன் முக பாவம் ஜாடை காட்டியது. ஞானிகள் அருகில் இருந்தால் ''சும்மா இருக்கும் சுகம் '' பற்றி கேட்டறியலாம் .
' சும்மா இருத்தல்’ பணத்தால், பதவியால், பரம்பரையால், வயதால், எதிலும் அடங்காத பெருஞ்செல்வம். வேண்டுதல் வேண்டாமை இல்லாத சும்மா இருத்தல் ஒரு யோகம். இனிப்புக் கடையில் சிக்கிக் கொண்ட எறும்பு இனிப்பு சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது போலத்தான் 'சும்மா இருப்பது'. விளையாட்டு மைதானத்திற்கு குழந்தையை கூட்டிப்போய் விட்டு 'எதுவும் விளையாடாதே சும்மா இரு' என்பது போலத்தான்…..
ஒரு பொருளின் மேல் முதலில் ஆசை வரும். அது கையில் கிடைத்துவிட்டால் ஆணவம் வரும். என்னைப் போல் இந்த உலகில் யார் உண்டு ? நினைத்ததை முடிப்பவன் நான் என்ற ஆணவம் வரும். கிடைக்க வில்லை யென்றால் ஆங்காரம் வரும். அந்த ஆங்காரம், ஆணவத்தை விட மோசமானது. அறிவை மயக்கும். நடு நிலை தவற வைக்கும். எதை எடுத்தாலும் அதுவாய் மாறிடும். வாயில் வந்த படி பேசும். மும்மூர்த்திகளும் நான் தான் என்று சொல்லும்....இப்படி சொல்லிக் கொண்டே தாயுமானவர் இந்த பட்டியலுக்கு முடிவு வேண்டுமே என்று முடிவில் இராவணாகாரமாகி விடும் என்கிறார்.
அது என்ன இராவணாகாரம் ?
வீரத்திலும், பக்தியிலும் சிறந்தவன் இராவணன்.
சீதை மேல் ஆசைப் பட்டான். புத்தி வேலை செய்வது நின்றது. வீரம் போய் குறுக்கு, கோணல், புத்தி வந்தது. கள்ளமாய் அவளை கவர்ந்து வந்தான். இராமனோடு சண்டை போட்டான். தன் சொந்த மகனை போரில் இழந்தான். தம்பி மக்கள் எல்லோரையும் இழந்தான். நாடும் போயிற்று. அனாதையாக நின்றவன் இத்தனைக்கும் காரணம் அந்த சீதை தானே, அவளை முதலில் இதோ கொன்று விடுகிறேன் என்று கோபம் கொண்டான். அவள் வேண்டும் என்று தானே தூக்கி வந்தவன், அவளுக்காக இத்தனை நாள் போர் புரிந்தவன், சகோதரன், சேனை, நாடு, மக்கள், உறவுகள் எல்லாமே இழந்தான். இப்போது அவளை கொல்லுவேன் என்கிறான். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆங்காரம். ஆங்காரம் மனத்தில் பதிந்து, படிந்து, மனம் சிந்திக்க தவறி உணர்ச்சிக்கு அடிமையானால் படும் தொல்லைக்கு எல்லையே இல்லை.
இந்த மனித உடம்பு இருக்கிறதே, அதை அடக்கி ஆள்வது ஐம்புலன்கள் தான். அதன் ஒட்டு மொத்தம் தான் உடம்பு.
கண், மூக்கு, செவி, வாய், ஸ்பரிசத்துக்கு ஆதாரமான உடம்பு இவைகளை செலுத்துவது, இயக்குவது மனம், புத்தி. தறி கேட்டு ஓடும் அதை அடக்குவது என்பது ஞானிகளால் மட்டுமே முடிகிறது. வைராக்கியம் இதற்கு வேண்டுமே. சாதாரண பாமர ஜனங்களாகிய நாம் அவற்றின் அடிமையாகி பல கஷ்டங்களுக்கு துயரங்களுக்கு துன்பங்களுக்கு ஆளாகிறோம்.
மேலே சொன்ன பாடலை மீண்டும் ஒரு முறை படியுங்கள். பலம் கொண்ட மதயானையைக் கூட மனிதன் அடக்குகிறான். வேகமாக ஓடும் சக்தி வாய்ந்த குதிரையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவன் சொன்னபடி ஓட வைக்கிறான். வண்டி இழுக்க சொல்கிறான். சர்க்கஸில் கரடி புலி சிங்கம் இதெல்லாம் கூட அவன் அடிமையாகி சொன்னபடி ஒரு சின்ன ஸ்டூல் மேல் ரெண்டு காலில் நிற்கிறது. கை தட்டல் வாங்குகிறது. சிங்கத்தின் மேல் கூட நாம் சவாரி செய்யமுடியும்.
கூடைக்குள் போட்டு கருநாகத்தையும் ஆடு பாம்பே என்று தெருவில் வட்டமான கூட்டத்தின் நடுவே ஆட வைக்க முடிகிறது.
நெருப்பில் பாதரசம் மற்றும் சில வினோத உலோகங்களை போட்டு காய்ச்சி சிவப்பாக பொன்னாக்கி பணம் சம்பாதிக்கலாம்.
திடீரென்று நினைத்த போது யாரும் காணாதபடி மறைந்து போகலாம், காற்றில் ஹனுமான் போல் பறந்து போகலாம். விண்ணுலகத்தில் உள்ள தேவர்களைக் கூட நமது வீட்டு வேலைகளைச் செய்ய போய் கூட்டி வரலாம். ரொம்ப சந்தோஷமான ஒரு சமாச்சாரம். நாம் நூறு வயதானாலும் கூட காய கல்பங்கள் சாப்பிட்டு இளமையோடு இருக்கலாம். ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு பர- காயப் பிரவேசம் செய்யவும் கூட நம்மால் முடியும். நாம் என்றால் நீங்களோ நானோ இல்லை. சித்தர்கள், ஞானிகளைச் சொல்கிறேன். கப்பலோ படகோ எதுவும் வேண்டாம். அஷ்ட மா சித்தி பெற்ற மஹான்களால் ஜலத்தின் மேல் கூட நடக்கமுடியும். தூங்க முடியும். நெருப்பில் ஜம்மென்று குளிக்க முடியும். இன்னும் என்னென்னவோ சக்திகள் சித்திகள் பெற முடிகிறது.
ஆனால், ஐயோ என்ன செய்வது? புரியவில்லையே தெரியவில்லையே! ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு காரியம் என்ன தெரியுமா? நான் சொல்லவில்லை. தாயுமானவ ஸ்வாமிகள் சொல்கிறார். "மனத்தை அடக்கி சும்மா இருப்பது. குரங்கைக் காட்டிலும் மோசம் நாம். மனது அலை பாய்ந்து கொண்டு இருக்கிறது. அதை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லையே'. நமது நிலை தாயுமானவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. என் மனதில் எப்போது குடிகொண்ட அறிவான தெய்வமே . தேஜோமயானந்த அருட்ஜோதி யே . நீ தான் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு முடிக்கிறார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது அல்லவா?
No comments:
Post a Comment