Saturday, February 14, 2026

Valentine's Day

வாலன்டின்  தினம் – நங்கநல்லூர்  J K SIVAN 
இன்று பெப்ரவரி 14  வாலன்டின் காதலர் தினம். சுப்புலக்ஷ்மி  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டையை குடைந்தது. எதிர் வீட்டு காமாக்ஷி மாமியிடம் கேட்டாள்."ஏண்டி காமு, இன்னிக்கு என்னடி விசேஷம்?."தெரியலே மாமி, சிறுசுகள் லவ் பண்ணலாமாம் . உலகம் பூரா அதுக்கு சரின்னு  கொண்டாடடறாளாம். எங்க   காம்ப்ளெக்ஸ்லேயும் அநேக சிறுசுகள் ஆணும் பொண்ணுமா அங்கேயும் இங்கேயும்  நடந்துண்டே பேசறது.  எதுக்கும்  பூமிலே  கால் பாவலே.    ஒண்ணையும்  கையிலே பிடிக்க முடியலே. ஆடறது ஓடறது.   தஸ்  புஸ் ன்னு  இங்கிலீஷ்லே  பேசிண்டே இருக்கு.  செல் போனும் கையுமா தனக்குத் தானே  பேசிண்டு  தானா சிரிச்சுக்கிறது. தலையை ஆட்டறது. கையை ஆட்டி என்னென்னவோ குசுகுசுன்னு பேசறது.   இப்போல்லாம்  ஒண்ணோடு ஒன்னு  நேரேயே  அந்த சின்ன டெலிபோனிலே  பார்த்துக்க முடியுமாம்.  நாலு பேர் பக்கத்திலே இருக்காளா ,  பார்க்கறாளா என்கிற  விவஸ்தை கூட இல்லாம டெலிபோனுக்கு முத்தம் கொடுக்கிறதோ  இல்லே.  அதிலே தெரிகிற  தாடிக்காரனுக்கு  முத்தமா?...   ஒண்ணுமே  புரியலே மாமி. இளவட்டங்கள் எல்லாமே  தாடியோடு  சுத்தறது.  சிலது ஜடாதாரியா இருக்கு.
''ஆமாண்டி  காமு,  உன் வாய்க்கு சக்கரை  தான் போடணும் காமு.  எனக்கு  ஒன்பது வயசிலே கல்யாணம்.எங்காத்துக்காரர்  சங்கமேஸ்வர மாமா  கட்டுக்குடுமியோடு, காதுலே  கடுக்கன்,வாயில் வெத்தலை கொதப்பிண்டு நெத்திலே பளிச்சுனு  விபூதி, கழுத்திலே  கௌடிசரடு உத்திராக்ஷம் வெத்து மார்பிலே  சந்தனம், பூணலோடு, எனக்கு ஜாம் ஜாம்னு  கல்யாணம் ஆச்சு. எங்காத்து மாமா கும்மோணம்காலேஜ் B A ....  என்ன அழகு என்ன அழகு போ.. இதுகளும்  இருக்கே. பீடைகள். அது சரி, இன்னிக்கு ஏதோ விஷேம்ங்கறாளே அது என்னடி?'' என கேட்டாள்  சுப்புலக்ஷ்மி பாட்டி.  'வாலன்டின் என்கிறவன் ரோமாபுரிலே ஒரு  துறவி. அவன் காலத்துக்கு முன்னாலே  அங்கே  லுபெற்காலியா ன்னு ஒரு பண்டிகை. அதிலே  ஆண்கள் நிர்வாணமா  ஒரு ஆட்டையோ நாயையோ வெட்டி பலிகொடுத்து  ஆட்டு தோலை உரிச்சு அந்த ரத்தத்தில் தோய்த்து  பெண்கள் மீது விளாசுவார்கள். இப்படிப்பண்ணா பெண்களுக்கு பிள்ளைப்பேறு சக்தி அதிகரிக்குமாம்.  அடப் பாவிகளா.  இதை அப்புறம் ஒரு ரோமாபுரி  போப்  கலசியஸ் என்கிறவர் வாலன்டின் தினம் என்று மாத்திட்டார். அதுக்கு பின்னாலேயும் ஒரு கதை.
ரோமாபுரி சக்ரவர்த்தி ஸர்வாதிகாரி  2ம் கிளாடியஸ் என்பவன் ராஜ்யத்தில் ஆண்கள்  அவனுடைய படையில் வேலை செய்யவேண்டும். கல்யாணமே பண்ணிக்கொள்ளக்கூடாது என்று ஆணையிட்டான்.  பிரம்மச்சாரி வீரர்களுக்கு சக்தி ஜாஸ்தி என்று நினைத்தான். ஆனால் அந்த ஊரில்  வாலன்டின் என்கிற ஒரு துறவி இருந்தார் அவர் அநேக பெண்களுக்கும் ஆண்களுக்கும் ரகஸ்யமாக  கல்யாணம் நிறைய பண்ணி வைத்தது  அந்த கொடூர  ராஜா காதில் விழுந்துவிட்டது. அப்புறம் என்ன.?  வாலன்டின் துறவிக்கு  தலை காணாமல் போய்விட்டது.
காலம் செல்லச்செல்ல  பாவம் அந்த வாலன்டின் துறவி என்று வெட்டப்பட்டாரோ அந்த தினம் (14.2.269)  14 பெப்ரவரி  ஒரு வாலன்டின் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதல்கள்  கல்யாணத்தில் முடியவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள்  வேண்டும், வாழ்த்தும், தினம். இன்று  சிகப்பு ரோஜாவுக்கு டிமாண்ட்.  அது காதலர் புஷ்பம் அல்லவா?அந்த காதல் கத்திரிக்காயை எல்லாம் விடு  காமு.  நா எனக்கு தெரிந்த காதல்  சமாச்சாரம் ஒன்று சொல்றேன் கேள்.  வேறு யார்?  கிருஷ்ணனை ருக்மணி காதலித்து கடிதம் அனுப்பின சமாச்சாரம் தான்.  இதில் ஒரு  வேடிக்கை. இந்த ருக்மணி காதல் கடிதத்தை ரஹஸ்யமாக எடுத்துக் கொண்டு சென்றதும்  ஒரு துறவி தான்.
ருக்மணியின் காதல் விஷயம் சுருக்கமாக சொல்லி அவள் கடிதத்தை  வெளியிடுகிறேன்.
மஹாராஜா பீஷ்மகர் என்பவருக்கு ருக்மி என்ற பிள்ளை, ருக்மிணி என்ற பெண். ருக்மி அசுரர் பலம் கொண்டவன். கிருஷ்ணனை வெறுப்பவன். அவன் ராஜாவாக செயல்பட்டான். தங்கை ருக்மிணியை நண்பன் கிருஷ்ணன் எதிரி சிசுபாலனுக்கு கல்யாணம் பண்ணிவைக்க ஏற்பாடு செய்துவிட்டான். ருக்மிணிக்கோ கிருஷ்ணன் பிரதாபங்கள் கேள்விப்பட்டு அவனையே கல்யாணம் பண்ணிக்க துடித்தாள். என்ன செய்யமுடியும்?  கல்யாண நாள் குறிச்சாச்சு. இன்னும்  ஒரு சில தினங்களே இருக்கிறது.
ஒன்று கிருஷ்ணனுடன் திருமணம். இன்றேல் மரணம் என்ற நிலைக்கு ருக்மிணி வந்துவிட்டாள் . இதை எப்படி கிருஷ்ணனுக்கு தெரிவிப்பது?. துவாரகை எங்கோ தூரத்தில் உள்ள ராஜ்யமாயிற்றே?   அரண்மனைக்கு  சுனந்தனன் என்கிற  ப்ராமண ரிஷி வந்தார். எப்படியோ  தனியாக அவரை சந்தித்து  கிருஷ்ணனுக்கு  ஒரு  கடிதம் கொடுத்து  எப்படியாவது  கிருஷ்ணனிடம் இதை கொடுத்து விடுங்கள்"  என்றாள்.
இது தான்  ருக்மிணியின் கடிதம்."கிருஷ்ணா, புவன சுந்தரா (உலகிலேயே  அழகா), அழகு, வீரம், தைர்யம், அறிவும், சாதுர்யம்  அனைத்திலும் சிறந்தவா!!  உன்னை  நான் பார்த்ததே இல்லை, உன்னை பற்றி கேள்விப்பட்டே  உன்னையே  என்  கணவனாக  வரித்து விட்டேன். எந்த அளவுக்கு உன் மேல் காதல் இருந்தால் வெட்கத்தை விட்டு அந்நிய புருஷன் உனக்கு இதை எழுதுகிறேன். புரிந்து கொள். உடனே என்னை வந்து காப்பாற்றி அழைத்து செல்.இன்னொருவன் எனக்கு  தாலிக்கயிறு  கட்டு முன்  தூக்கு கயிறு என் கழுத்தை அலங்கரித்து விடும். ஒருவேளை இந்த ஜன்மத்தில் உன்னை  அடைய முடியாவிட்டால்  அடுத்தடுத்த ஜன்மங்க ளிலாவது உன்னை  அடைய பாடு படுவேன். – — உனக்காகவே  வாழும் ருக்மிணி"
ருக்மணியின் கடிதத்தை ஓட்டமும் நடையுமாக சென்று குறித்த நேரத்தில்  சிசுபாலனோடு கல்யாணத்துக்கு முன்பே  கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டார் ரிஷி. அவரிடமிருந்து ருக்மிணி  பற்றிய சகல விவரம் கிருஷ் ணன் அறிந்து, அவரிடம் உடனே திரும்பி ருக்மிணியைப் பார்த்து  "கிருஷ்ணனிடம் கடிதம்  கிடைத்தது.  தக்க தருணத்தில் வந்து அவளை காப்பாற்றுகிறேன்" என்று  சொல்லுங்கள் என்ற சேதியும்  சொல்லி அனுப்பி னான்.
குல வழக்க  பிரகாரம் கல்யாணத்திற்கு முதல் நாள் மணப்பெண் தனியாக தோழிகளுடன்  ஊருக்கு  வெளியே  இருந்த  பார்வதி கோவிலில்  பூஜை செய்து பிரசாதம் பெற்றுக்கொள்ள  சென்றாள்.  அங்கு  ஒரு  ரதம் காத்திருந்தது.   மாறு வேடத்தில் கிருஷ்ணன்  அவளை  அங்கு  சந்தித்து அவளை கடத்தி சென்றான்.  ருக்மிணி கிருஷ்ணனுக்கு மனைவியாகவும் த்வாரகையில் ருக்மிணி ராணியும் ஆனாள். 
என்னுடைய  வாலன்டின் தின காதல் கதை எப்படி?

No comments:

Post a Comment