Wednesday, May 7, 2025

Sannidhi of Acharyal - Sri gurukrupa vilasam

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
*Continuation from yesterday's posting*
 
ஆசார்யாரிடம் நாம் வைத்திருக்கும் பக்தியால் அவர்களை நம் நிலைக்கு இறக்குவதில் பிரவிருத்திக்கக் கூடாதென்பதை நாம் அநேகமாக உணர்கிறதில்லை. அவர்கள் வாயைத் திறந்து பேசி அனுக்ரஹமோ உபதேசமோ செய்ய வேண்டுமென்பதில்லை. அவர்களுடைய ஸந்நிதி விசேஷத்தினாலேயே ஆனந்தமும் சாந்தியும் ஏற்படுமென்பதில் ஸந்தேகமில்லை.  
 
கீதையில் ஞாளியைப் பற்றி பகவான் சொல்லும்போது "இதர பிராணிகளுக்கெல்லாம் எது இரவோ அதில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்; அவர்கள் எதில் விழித்துக் கொண்டிருக் கிறார்களோ அது அவனுக்கு இரவு ஆகும்' (II.69) என்று கூறியிருப்பதால் நம் நிலையைக்கொண்டு ஸ்ரீமத் ஆசார்யாரின் அனுபவத்தைத் தீர்மானிப்பது அர்த்தமற்ற கார்யமாகும். நம்முடைய கீழ்ப்பட்ட லௌகிக திருஷ்டியில் பார்த்தால் அவருடைய சர்யை (கார்யம்) விலக்ஷணமாகத் தோன்றும். புத்திப்ரமம் இருக்குமோ என்றுகூடத் தோன்றும். ஸ்ரீ ஹஸ்தாமலகாசார்யார் வெளிப் பார்வைக்கு வெறும் ஜடர் போலவே தோன்றவில்லையா? ஸ்ரீமத் பகவத்பாதாள் ''நீயார்?' என்று கேள்வி கேட்டபிறகல்லவா அவர் ஆத்ம நிஷ்டர் என்பது வெளியாகியது? அவரை சிஷ்யராக அங்கீகரித்த பிற்பாடுகூட அவருடைய யோக்கியதையை மற்ற சிஷ்யர்கள் அறியாமலிருந்தார்கள். ஆசார்யாரவர்களின் பிரஹ்மஸூத்ர பாஷ்யத்திற்குக் காரிகை எழுதவேண்டுமென்று பிரஸ்தாபம் வந்த ஸமயத்தில். "ஹஸ்தாமலகர் எழுதினால் அற்புதமாகத் தானிருக்கும். ஆனால் அவருடைய ஆத்மானுபவ நிலையிலிருந்து கிரந்தம் எழுதக்கூடியபடிக்கு அவரை இறக்குவது சிரமப்படுமே" என்று ஆசார்யார் சொன்னதிலிருந்து அவர் தன்னைவிட மேல் படியிலிருப்பதாக ஸூசிப்பித்தார். ஸ்ரீ ஸதாசிவபிரஹ்மேந்திர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் ஜகத்தை மறந்து பித்துப்பிடித்தவர்போல் காவேரிக் கரையில் ஸஞ்சரிப்பதைப் பார்த்த சில ஜனங்கள் அவருடைய குருவான ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதீ ஸ்வாமிகளிடம் சென்று தெரிவித்தார்கள். அதற்கு அவர்கள் "அந்த மாதிரி பைத்தியம் எனக்கு ஏற்படவில்லையே! " என்று துக்கப்பட்டார்கள். இவ்விதம் முன்னுள்ள அறிஞர்களால் விரும்பப்படும் சர்யை (கார்யம்) ஸாமான்ய ஜனங்களுக்கு விலக்ஷணமாகத் தான் தோன்றும். அதே மார்க்கத்தில் சென்று அவ்வித அனுபவமடைந்தவர்கள்தான் ஸ்ரீமத் ஆசார்யாருடைய தன்மையையும் கார்யங்களையும் வார்த்தைகளையும் சரியாய்ப் புரிந்துகொள்ள முடியும்.
 
*To be continued..*

No comments:

Post a Comment