*Continuation from yesterday's posting..*
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
"ஈசுவரன் ஒருவன் உண்டென்பதை மறவாதீர்கள். இதைப்பற்றி எங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமா? எங்களுக்கு இதுகூடத் தெரியாதா? என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் வாஸ்தவத்தில் ஈசுவரன் ஒருவர் இருக்கிறாரென்பதை நீங்கள் உணர்ந்திருக்கும் விஷயத்தில் ஊர் ஊராக நியாய ஸ்தலங்கள் எதற்கு? ஒவ்வொரு லௌகிக நடவடிக்கைகளுக்கும் இவ்வளவு காகிதச் செலவு எதற்கு? பத்திரங்கள் பதிவு செய்வதற்கு இத்தனை அதிகாரிகள் எதற்கு? பத்திரங்களில் சாக்ஷிகளின் கையெழுத்து எதற்கு? இவ்விதமாக ஒவ்வொரு கார்யத்தையும் கவனிக்கும்போது ஈசுவரன் ஒருவர் இருக்கிறாரென்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களென்று நினைக்க இடமேயில்லை. ஈசுவரன் ஒருவர் ஸர்வ ஸாக்ஷியாக இருக்கிறாரென்பதை சுத்தமாக மறந்தேயிருக்கிறீர்கள். ஈசுவரன் ஒருவர் இல்லையென்று தீர்மானித்துக்கொண்டே நடந்து வருகிறீர்களென்றே சொல்லலாம். ஆகையால் இவ்விஷயம் உங்களுக்கு சிறியதாகத் தோன்றினாலும் அவசியம் எடுத்துச் சொல்லவேண்டிய விஷயமே."
"இப்பொழுது அநுபவிக்கும் ஸுக துக்கங்கள் முன் செய்த கர்மவசத்தினால்தான் ஏற்படுகின்றன என்கிற நம் ஸித்தாந்தத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களா? கர்ம பலனான துக்கமானது உங்களுடைய பிரயத்தினத்தையாவது கர்ம விருப்பத்தையாவது கொஞ்சமேனும் எதிர்பாராமல் தானாகவே ஏற்படவில்லையா? அப்படியிருக்க, அதேமாதிரி பலனாயிருக்கிற ஸுகமும் உங்களுடைய பிரயத்தினத்தையும் விருப்பத்தையும் எதிர்பாராமல் வந்துதானே தீரும்? ஸுகத்திற்காக ஏன் வீணாக ஆசையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்? அதற்காக ஏன் வீணாகப் பிரயத்தினம் செய்கிறீர்கள்? பூர்வ கர்மாவினால் நீங்கள் ஸுகம் ஸம்பாதித்திருக்கும் விஷயத்தில் அது தானாகவே வந்துதானே தீரும்? அவ்விதம் ஸம்பாதிக்காமலிருக்கும் விஷயத்தில் நீங்கள் என்ன ஆசைப்பட்டாலும் பிரயத்தினப்பட்டாலும்கூட உங்களுக்கு அந்த கிடைக்குமா? அப்படியிருக்க வீணாக ஏன் உங்கள் காலத்தையும் ஸுகம் பலத்தையும் செலவழிக்கிறீர்கள் ? புண்யத்தை ஸம்பாதிப்பதில் செலவழியுங்கள்; ஸுகம் தானாகவே வரும். விஷய ஸுகம் சாசுவதமில்லை. துக்கத்திலும் கொண்டுபோய் விடும். ஆகையால் சாசுவதமானஆத்ம ஸுகத்தையே அடைய பிரயத்தினம் செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற ஸ்திதியில் நீங்கள் இன்னொரு ஜன்மம் எடுக்கும்படி ஏற்பட்டால், இப்பொழுது ஸத்கதிக்கு ஸாதகமாக உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஸௌகர்யங்கள் அப்பொழுது கிடைக்குமென்பது என்ன நிச்சயம்? வீணாக காலத்தைக் கழிக்காதீர்கள். நல்ல விஷயத்தில் உபயோகப் படுத்துங்கள். அர்த்தபரராகவிருந்து ஸந்தோஷத்தையும் திருப்தியையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கூடிய மட்டும் மனதை சுத்தமாகவும் பற்றற்றதாகவும் வைத்துக்கொள்ள அப்யாஸம் செய்யுங்கள். மனது பரிசுத்தமாவதற்கு ஈசுவராராதன ரூபமாய் நித்ய கர்மாக்களைச் சிரத்தையுடன் செய்துவாருங்கள்" என்றிவ்வாறு சிரத்தையையும் கர்மாநுஷ்டானத்தையுமே வற்புறுத்துவார்கள்.
*To be continued..*
No comments:
Post a Comment