*Continuation from yesterday's posting*
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
ஓர் ஊரில் இரண்டு ஸஹோதரர்கள் இருந்தார்கள். பெயர் பிரகிருதமில்லாததினால் ராமன் லக்ஷ்மணன் என்று வைத்துக் கொள்வோம். தம்பியாகிய லக்ஷ்மணன் மிகவும் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருந்த ஸமயத்தில், அவனுக்கு சீக்கிரம் குணமாக ஸ்ரீமத் ஆசார்யாரவர்களுடைய அநுக்ரஹத்தை வேண்டிக்கொண்டு தமையனாரான ராமன் ஸ்ரீமடத்திற்குத் தந்தி கொடுத்தார். அந்தத் தந்தியை வாங்கின அதிகாரி "இதுமாதிரி விஷயங்களில் ஸ்ரீமத் ஆசார்யாரவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ளவா போகிறார்கள்? அவர்தான் உலகத்தை மறந்திருக்கிறாரே!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். கொஞ்சநேரம் கழித்து அவர் ஸ்ரீமத் ஆசார்யாரை தரிசனம் செய்யப் போகும் ஸமயத்தில் ஸந்தர்ப்பம் கிடைத்தால் சொல்லலாமென்று நினைத்து இத்தந்தியையும் எடுத்துக்கொண்டு போனார். அவ்விடம் போய்ச் சேர்ந்ததும் ஆசார்யாரவர்கள்,
"கையில் என்ன?" என்று கேட்டார்கள்.
"தன் தமையன் ராமன் ஜ்வரத்தினால் சிரமப்படுவதாக லக்ஷ்மணன் தந்தி கொடுத்திருக்கிறான்'' என்று அதிகாரி சொன்னார். உடனே ஆசார்யாரவர்கள்.
"தம்பி லக்ஷ்மணனுக்கு உடம்பு சரியில்லையென்று ராமன் தந்தி கொடுத்திருக்கிறான் என்று சொல்லுங்கள்' என்றார்கள். உடனே அதிகாரி தந்தியை எடுத்துப் பார்க்க ஆசார்யார் சொன்னதே சரியாகவிருக்கக் கண்டு,
''மன்னிக்க வேண்டும். நான்தான் தவறுதலாய்ச் சொல்லியிருக்கிறேன். சரியானபடி ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் மறந்துவிட்டேன்" என்றார். ஆசார்யார் புன்சிரிப்புடன்.
'' உலகத்தை நான் மறக்கலாம். நீங்கள் மறக்கலாமா?" என்று கேட்டார்கள். அவ்வதிகாரி காலையில் தன் மனதிற்குள் சொல்லிக்கொண்ட வார்த்தைகளையே ஆசார்யார் பிரயோகம் பண்ணினதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார்.
*To be continued..*
No comments:
Post a Comment