Wednesday, January 1, 2025

Thondaradipodi azhwar

உஷத்கால நேரம் அது. அயராது அருளியபின் யோக நித்திரையில் இருந்தார் பெரிய பெருமாள். காவேரி ஒருபுறமும் கொள்ளிடம் மறுபுறமும் அரணாக இருப்பது அரங்கனுக்கு தாங்கள் செய்யும் பெரும் தொண்டாக கருதி மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தன. மார்கழி பனி குளிர்ச்சியில் காற்றும் சற்று அதிகம் வீசிக்கொண்டிருந்தது.  வீசிய காற்றில், திருமாலின் மார்பில் உள்ள வைஜயந்தி மாலை "கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்" என்று  மெதுவாக திருப்பள்ளியெழுச்சி செய்து பெருமாள் எப்பொழுது விழி மலர்வார் என்று எட்டி எட்டி பார்ததது. தென்றலோடு சேர்ந்து,மாலையின்  வாசம் பெருமாளின் மூக்கை அடி மேல் அடி வைத்து ம்ருதுவாக அணுகியது.

கடி மலர்க்கமலங்கள் மலர்ந்தன. "மணமிகு வனமாலையே, குளிர்ந்த இந்த அதிகாலை நேரத்திலேயும் கொஞ்சம் சூடாக இருப்பதன் காரணம் என்ன?" என்று பெருமாள் எதுவும் தெரியாதது போல், வைஜயந்தி மாலையை வினவினார். மாலையும், "இது தான் தருணம்; சொல்லிவிட வேண்டியது தான்" என்று துள்ளி குதித்து "வைகுண்டநாதா, உம்முடைய மார்பிலே சதா இருக்க, இந்த எளியேனுக்கு இடம் அளித்தீர் - அடியேனைப் போன்ற அசித்துகளாகட்டும், இந்த லோகத்தில் இருக்கும் ஜீவாத்மாக்கள் ஆகட்டும் - எங்கள் மீது தான் என்னே கருணை உங்களுக்கு! எப்பொழுதும் எங்கள் நலமே உங்கள் சிந்தனை. விபவத்தில் மட்டுமில்லாது, பல தருணங்களில், பூலோகத்திற்கு பலரை அனுப்புகிறீர்கள், நாங்கள் கடைத்தேர; உங்கள் ஆயுதங்களில் பலவற்றை அனுப்பி, சன்மார்க்கத்தை ஏற்படுத்தி மக்கள் உய்ய வழி வகுத்தீர்; தங்களின் மார்பில் ஏற்பட்ட மரு கூட மறு அவதாரம் எடுத்து இக்காலத்தில் மிக முக்கியபிரச்னையாக இருக்கும் ஜாதி மத துவேஷங்களை ஒழிக்க தன்னால் முயன்றத்தை செய்யதது. அந்த "திருமரு மார்வை சிந்தையுள் வைத்து", அடியேனுக்கும் நம்மால் முடிந்ததை செய்யலாம் என்று ஒரு அவா; அதற்கு தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்" என்றது. புன்னகைத்தவாரே, பெருமாள் "வைஜயந்தியே, நீ வெற்றிமட்டுமே கண்டவள்; இந்த முயற்சியில், உன் வாசனை மறந்து வேறு வாசனை வரக்கூடும்; ஜாக்கிரதை!" என்றார். மாலை உடனே "ஸ்வாமி, அப்படி நேர்ந்தால், நீர் தான் அடியேனை தக்கசமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும்" என்றது. பெருமாளும், "சரி அப்படியே ஆகட்டும்" என்று ஆசீர்வதித்தார்.    

திருமாலை (வைஜயந்தி மாலை) திரு மாலை (பெருமாளை) அடைய எப்படி இருக்க வேண்டும் என்று காண்பிக்க விழைந்து, ஸ்ரீவத்சம் சென்றபோது நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு, சரி, நாம், அந்தணர் குலத்தில் ஒருவர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று உலகிற்கு உணர்த்துவோம் என்று முடிவெடுத்து, சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் க்ஷேத்திரத்தில், உடனேயே (அதே மார்கழி மாதத்தில்) நல்லதொரு கேட்டை நக்ஷத்திரத்தில் பூமியில், குடுமி சோழிய பிராமணர் குலத்தில் வந்து பிறந்தது; பெற்றோர் விப்ரநாராயணர் என்று பேரிட்டனர்.  ஸ்ரீமன் நாராயண கைங்கர்யம் ஒன்றே வாழ்க்கை லட்சியமாக ஒரு பிராமணன் கொண்டிருக்கவேண்டும் என்பதை வாழ்ந்து காண்பித்தார், விப்ரநாராயணர். எப்படி பக்தி மார்கத்தை பரப்புவது என்று சிந்தித்து அதை எங்கிருந்து தொடங்கவேண்டும் என்று யோசித்து, சரி, பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலிருந்தே தொடங்குவோம் என்று பெரிய கோவில் வந்து மூலஸ்தானத்தில் சயனகோலத்தில் ஸ்ரீ ரெங்கநாதரை கண்டார். "ஆஹா! ஆஹா! பச்சை மா மலை போல் மேனி! பவளவாய் கமலச்செங்கண்! அச்சுதா! இனி நான், இந்த இடத்தை விட்டு ஸ்வர்க்கமே கிடைத்தாலும் செல்ல மாட்டேன்" என்று கங்கணம் கட்டிக்கொண்டார். ஊரில் குதிர்ஷ்டிகள் வேதத்திற்கு தவறாக அர்த்தம் சொல்லும் விதத்தை பார்த்து, "வெறுப்பொடு சமணர் முண்டர்; விதி இல் சாக்கியர்கள்; பெருமாளை தவிர, மற்றுமோர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடர்களே!" என்று நொந்துகொண்டார்.

மாலையாயிற்றே! அரங்கன் கோயில் அருகிலேயே, ஒரு அழகான பூந்தோட்டம் அமைத்து நறுமணம் வீசும் மலர்கள் பல, வளர்த்து, தினம், பெருமாளுக்கும் தாயாருக்கும் மாலை செய்யும் கைங்கர்யம் செய்துவந்தார். பெருமாளுக்கு மாலை தொடுக்கும் ஒன்று தான் முழு வேலையாக கொண்டிருந்தார். வேதம் கற்றிருந்ததாலும் முக்காலமும் நித்ய கர்மாக்களை செவ்வனே செய்து வந்தமயாலும், மிகவும் தேஜஸுடன் விளங்கினார்.

ஒருநாள், தேவதேவி என்னும் ஆடல் பாடல் கலையில் மிகவும் திறமைசாலி மற்றும் மிகுந்த அழகு பொருந்திய பெண் ஒருத்தி, இவர் தோட்டத்தின் வழியே வந்து, தோட்டத்தையும் இவரையும் கண்டு பிரமித்தாள். இவளது சகோதரி, 'நீ பேரழகி தான்; இருந்தாலும், இந்த விப்ரநாராயணரை உன்னால் மயக்க முடியாது; வா போகலாம்" என்றாள். இதனை ஒரு சவாலாக ஏற்று, தேவதேவி தன் ஆபரணங்களை களைந்து, ஒரு பெண் முனி போல் ஆடை அணிந்து, விப்ரநாராயணரை அண்டி, தன்னையும் இறைத்தொண்டில் சேர்த்துக்கொள்ளுமாறு மன்றாடினாள். அவரும், சரி, என்று ஒத்துக்கொண்டு ஆனால் தன் பக்தியில் குறைவில்லாமல் கைங்கர்யம் செய்து வந்தார்.

மலரின் வாசனை மாறத்தொடங்கியது.
விதி வசத்தால், ஓர் மழை இரவில், இரக்கப்பட்டு, தேவதேவியை தன் குடிசையிலேயே தங்க அனுமதி தந்தவர், அவள் அழகில், சேவையில் மயங்கி, அவளுக்கு அடிமையானார். பெருமாளை மறந்தார். உல்லாசவாழ்வில் குதூகலித்தார். தாம் வந்த கார்யம் மறந்தார். ஒரு நாள், தேவதேவி தன் தாயாரைக்கான செல்கிறேன் என்றாள்; இவர், நானும் வருவேன் என்றார்; ஆனால், தேவதேவியின் தாயாரோ, செல்வம் இல்லாமல் இருக்கும் இவருக்கு அங்கு இடமில்லை என்று விரட்டிவிட்டார். தேவதேவியை பிரிந்து வாடிய விப்ரநாராயணர், கோவிலுக்கு சென்று பெருமாளிடம் அழுது புரண்டார்.

பெருமாளும், இவரை திருத்திப்பணிகொள்ளும் நேரம் வந்து விட்டது என்று தன் விளையாட்டை ஆரம்பித்தார். விப்ரநாராயணரின் சிஷ்யனாக சென்று, தேவதேவியின் தாயாரிடம் தன் சந்நிதியில் உள்ள ஒரு தங்க வட்டிலை தன் குரு கொடுத்துவரச்சொன்னதாக குடுத்தார். மறு நாள், கோவில் பட்டர் வட்டிலை காணாது, மன்னரிடம் புகார் அளித்தார். விசாரணையில், அது, தேவதேவியின் இல்லத்தில் இருப்பதும் அதை விப்ரநாராயணர் ஒரு சிறுவன் மூலம் அவளுக்கு கொடுத்தார் என்பதும் தெரியவந்தது. இவருக்கு மன்னன் சிறை தண்டனை விதிதான். இரவில், தான் செய்த தவறை எண்ணி விம்மினார்; பரம காருண்யகரான பெரிய பெருமாள், மன்னரின் கனவில் வந்து, நடந்தது தன் திருவிளையாடல் தான் என்று கூறி விப்ரநாராயணரை விடுவிக்க சொன்னார். மறுநாள், மன்னரும், இவரை விடுவித்து, வணங்கி, இவர் வைணவ தொண்டிற்கு தானும் உதவுவதாகவும் சொன்னான். தேவதேவியும் தன் காம இச்சைகளை துறந்து, பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபட்டாள். விப்ரநாராயணரும் "சாதி அந்தணர்களேலும் பெருமாளைப்பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில்" என்று எல்லாரும் உணரும்படி சாதித்தார். மேலும், "ஊர் இலேன் காணி இல்லை; உறவு மற்று ஒருவர் இல்லை; பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பராமமூர்த்தி; மனத்தில் ஓர் தூய்மையில்லை; வாயில் ஓர் இன்சொல் இல்லை; புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா! எனக்கு இனிக்கதியென் சொல்லாய்?" என்று பாடினார்.  

பெருமாளும், மனமுகந்து, "உன் முயற்சியை மெச்சினோம். இனி, எந்த ஒரு கோயிலிலும், காலையில் எம்மை எழுப்ப, உன் பாடல்கள் மட்டுமே யாம் கேட்போம்; நீ பாடிய "திருமாலை" அறியாதார் "திரு-மால்-ஐ" அறியாதார் என்று உலகம் பேசும். உன் விருப்பம் என்ன, கேள்? அரங்கநகரிலேயே இருக்க வேண்டும் என்றால், அப்படியே ஆகட்டும்; இருந்தாலும், ஒவ்வொவரு முறை எமக்கு மாலை சாற்றும்போதேல்லாம் நீ அங்கேயும் எப்போதும் இருப்பாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதைக்கேட்ட விப்ரநாராயணர், தான் செய்த தவறு வேறு யாரும் செய்யாமல் இருக்க, தான், சதா, பெருமாளின் அடியார்களின் பாத தூசியை தன் சிரசில் சேர்த்துக்கொண்டு ஸ்ரீ ரெங்கநாதரை மட்டுமே வழிபட விரும்புகிறேன்" என்றார். ஸ்ரீ ரெங்கநாதரும் "மிக்க மகிழ்ச்சி; இன்று முதல், நீ "தொண்டர் அடி பொடி" ஆழ்வார் என்று எல்லோராலும் கொண்டாடப்படுவாய்" என்று அருளினார்.
   
இதனால் தான், நம் ஸ்வாமி வேதாந்த தேசிகரும், தன்னுடைய பாதுகா ஸஹஸ்ரத்தில், முதல் ஸ்லோகத்திலேயே, "ஸந்த:ஸ்ரீரங்கப்ருத்வீஸ சரணத்ராண ஸேகரா:ஜெயந்தி புவனத்தராண பத பங்கஜ ரேணவ:" அதாவது "பெருமாளின் திருவடிகளை தாங்கும் பாதுகைகளை சிரசில் வைத்து கொண்டாடும் பாகவதோத்தமர்களின் பாதங்களில் உள்ள தூசி இந்த உலகை காக்கிறது" என்று போற்றி பாடுகிறார்.

நாமும், அடியார்கடியானாய் இருந்து, நம்மால் முயன்ற கைங்கர்யத்தை செய்துகொண்டு பக்தி, ப்ரபத்தி மார்க்கங்களில் ஈடுபடுவோமாக!

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்! 😊🙏

No comments:

Post a Comment