Sunday, December 22, 2024

Seshadri swamigal upadesam

திருவண்ணா மலையில் அப்போது இன்னொரு மஹான் வாசம் செய்து வந்தார் .அவர் பெயர் சேஷாத்ரி சுவாமிகள். சேஷாத்திரி சுவாமிகளால்  ரமணர்  உலகத்துக்கு, நமக்கு,  கிடைத்தார்.   சேஷாத்ரி ஸ்வாமி ஒரு ப்ரம்மஞானி. அவர் இந்த உலகுக்கு  காட்டிய ஆத்ம ஞானி தான் பகவான் ரமணர்..

வெளியே அதிகம் தெரியாத மஹான்  
திருவண்ணா  
மலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அதிசயம், ஆச்சர்யம் நிறைந்த  சம்பவங்களாக இருந்தபோதிலும் அவற்றைப் பற்றி அதிகம் வெளியே தெரியாத காரணம்  அவர்  விளம்பரப் பிரியர் அல்லர்.

மற்றும் எவரையும்  அருகிலே சேர்க்காதவர் என்பதால் இதை கவனித்து வெளியே சொல்ல அதிக பக்தர் இல்லை.

இது தவிர  அவரிடமிருந்து  அதிசய  அனுபவங்கள் பெற்ற  பக்தர்களும் அவற்றை  வெளிப் படுத்த முற்பட வில்லை.   ஆங்காங்கே  அவர்கள் மூலம்  அறிந்த , கசிந்த  விஷயங்கள் தான்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரிகள்  போன்றவர்களால்  நமக்கு இன்று  கிடைத்துள்ளது.

இன்று ஒரு சில சம்பவங்கள் சொல்கிறேன்.

சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகிலே  எப்போதும் சிஷ்யனாக  சேவை செய்யும்  மாணிக்க சாமிக்கு ஒருநாள் சேஷாத்திரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்:

''இதோ பார்  மாணிக்கம்,  நீ  ஈயைப் போல்  சுத்தமாக,  
எறும்பைப் போல பலத்தோடு,  நாயைப்போல் அறிவோடு, ரதியைப்போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ  குரு தெரிவார்'' என்றார்.

மலர்களின் மதுவும், மலமும்  ஈக்கு  ஒன்றே . ஆகவே  இரண்டிலும்  அது  ஆனந்திக்கிறது. ஆனால் மனதளவில் அது சுத்தமானது.

பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும் பகலும் உழைக்கும் எறும்பு சுறுசுறுப் புக்கு  பேர் போனது.  ஆகவே  அதை  பலமிக்கது என கருதலாம்.

காதையும், வாலையும் எவனோ குறும்பு சாமி வெட்டி விட்டான் என்றாலும்  காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய் அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை  அளித்தவனை நன்றியோடு  நெருங்குகிறது.

அதால் நன்றியை தெரிவிக்க முடிந்தது இந்த செயல் தானே.

எந்த மனைவி கணவனின் நலம் கருத்தில் கொண்டு  எப்போதும் அவனுக்கு பணி விடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த  ரதி என்று  கருதப் படுபவள்.

இதைத் தான்  ஸ்வாமிகள் மாணிக்க சாமிக்கு உணர்த்தி இருக்கிறார்.

எனவே ஐம்புலன் வசமாகாமல்  சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே  உணரமாட்டான்.  லோக க்ஷேமத் திற்காக தன் உழைப்பை ஈடு படுத்திக் கொள்வான்.

நமது  கர்மங்கள் பயனை அளிப்பவை.  ஆனால் ஈஸ்வரார்ப் பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல.  எந்த  கர்மபயனும்  சம்பந்தப்படுத்தாது.'' என்றார்.

ஒருநாள் ஸ்வாமிகள்  எச்சம்மா  ( நம்ம லட்சுமி அம்மா! ) வீட்டுக்கு போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது.

''நீ  என்ன பூஜை பண்றே?''

''உங்க படத்தையும்,  ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ '' என்றாள் .

''எவ்வளோ நாள் இந்தமாதிரி எல்லாம் பூஜை பண்றது.  தியானத்தில் இருக்க வேண்டாமா?''  என்கிறார் சுவாமி.

''எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ''

''இப்படித்தான்'' என்று சுவாமி தரையில் பத்மா ஸனம்  போட்டு அமர்ந்தார்.  
அவ்வளவு தான். அவர் சிலையாகி விட்டார். காலை பத்துமணிக்கு இது நடந்து  மாலை நாலு மணி கிட்டத்தட்ட அவர்  அசையவே இல்லை.  சமாதி நிலை.

மாலை  நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோ பேர் தன்னையே  பார்த்து கொண்டிருந்தது எதுவுமே  தெரியாது அவருக்கு.  மெதுவாக கண் திறந்தார்.

''எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும்  நீ''

ஒருவர்  அப்போது ''ஈஸ்வரனை எப்படி தியானம் பண்ணுவது?'' என்று கேட்க,   ''பலாப் பழத்திலுள்ள பலாச்சுளை போல,  பலாக்கொட்டையை போல பண்ணணும்''  என்கிறார்.

பக்தருக்கு புரியாமல் வாயைப் பிளந்தார். ஸ்வாமியே விளக்கினார்.

''பலாக் கொட்டையை  ஈஸ்வரன் என்று வைத்துக்கொள். எப்படி தன்னுடைய  பீஜ சக்தியால் அநேக மரங்கள், கோடிக்கணக்கான பழங்களை உற்பத்தி பண்ணுகிறது.

அதுமாதிரி  தான்  ஈஸ்வரன்  தன்னுடைய மாயா சக்தியால்  அளவற்ற  ஜீவன்களை உண்டு  பண்ணுகிறான்.

சின்னதும் பெரிசுமாக, தித்திப்பு வேறே வேறே மாதிரி வெவ்வேறு நிறமாக, வெள்ளை, மஞ்சள், வெளிறிய கலர்  என்று  பலாப்பழ சுளை மாதிரி,   எவ்வளவோ உயிர்களை படைக்கிறான்.

பலாக்கொட்டை மேலே உறை  இருக்கிற மாதிரி  ஈஸ்வரன் ஜீவனை அன்னமயம் முதலான  பஞ்ச கோசங்களை வைத்து மூடி இருக்கிறான்.

பலாக்கூட்டை மேலே இருக்கிற  உறையை  எடுத்துட்டு சுட்டு சாப்பிடறோமே. அது போல  பஞ்ச கோசங்களை நீக்கணும். அப்போ தான் பகவான் தெரிவான்.

இன்னொண்ணும்  சொல்றேன் கேளு.  நாம எல்லோருமே   ஒருத்தர் தான். ஒரு ஸ்வரூபம் தான். ஆனால் கண்ணாடியில்   பார்க்கும்போது, நாமும் தெரியறோம். நம்ம ஸ்வரூபமும் கண்ணாடியில் ஒண்ணும் தெரியறது. தெரிவது  ரெண்டாயிடுத்து.   அதுமாதிரி  ஆத்மா ஒண்ணு தான்.

அதை நிர்மலமான புத்தியில் பிரதி பலிக்க பண்ணினால் தான் தியானத்தில் அனுபவிக்கிறோம். தியானம் பண்றவன், தியானம், யாரை தியானம் பண்றோமே  மூணும் ஒண்ணா யிடணும் . அதை  தான்  த்ரிபுடி  என்கிறோம்.   ''

ஒன்றறக்''  கலந்து என்று தமிழ் பாட்டிலே வருமே அதுதான்  இது. மேலும் அவர் சொல்கிறார்.....

ஒவ்வொரு மனிதனும் தனியாகவே  இந்த  உலகில் அறிமுக மாகிறான்.   இந்த உலகை விட்டு விலகும்போதும் அவ்வாறே, அவன் எவ்வளவு பெரிய  மக்கள் தலைவனாக இருந்தபோதும், தனியே தான்  செல்லவேண்டும். என்பது நியதி.

அவனது   பூர்வ ஜென்ம கர்மாக்கள் அவனை அவன் வாழ்நாளில் அவனை   நல்ல வனாகவோ கெட்ட வனாகவோ   அவன் செயல்களில் காட்டுகிறது.

நரகமோ  ஸ்வர்க்கமோ  எங்கு செல்லவேண்டு  
மானால் அவன் தனித்தே தான் போகவேண்டும்.

நம்மையெல்லாம்  தாங்கும் இந்த பூமி ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டுள்ளது.   அந்த சத்யம் தனது சக்தியால்  சூரியனை ஒவ்வொரு  நாளும்  நேரம் தவறாமல் தனது பணியை, உலகை ஒளிபெற,   செய்விக்கிறது.  காற்றை  வீசச் செய்கிறது.

எல்லாமே  அந்த சத்தியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. நம்மையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

ஆனால் இந்த மனிதர்கள் தான் சத்தியதிற்கும் தர்மதிற்கும் கட்டுப்பட மறுக்கிறார்கள் -

காலம்  தான் உலகத்தின் சகல ஜீவராசிகளையும்  உயிருடன் இயக்குகிறது.  அதுவே  முடிவைத் தருகிறது.  எல்லாம்  உறங்கும் வேளையிலும்  காலம்  உறங்காமல் விழித்துள்ளது.  காலம் வெல்ல முடியாதது. எவராலும்  கட்டுப் படுத்த முடியாத ஒன்று. அதுவும் மேலே சொன்ன ஒரு சத்தியத்துக்கு உட்பட்டு செயல் படுகிறது.

என்று சேஷாத்ரி சாமிகள் மாணிக்கம் சாமிக்கு செய்த உபதேசங்கள் இவைகள் -

படித்ததில் பகிர்ந்தது

Written & Compiled by  
M.S.Ramesh Salem

No comments:

Post a Comment