Sunday, October 13, 2024

Overcoming ahankara - HH Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

*நிர்மமோ  நிரஹங்கார:*

மனிதனுக்கு, தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும்கூட "நான் செய்தேன்" என்று அஹங்காரம் வரும்.  அந்த அஹங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும்.  "நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள்?  எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு எது இஷ்டமோ நான் அதைச் செய்வேன்"  என்கிற ஒரு மனோபாவத்தை அஹங்காரம் ஏற்படுத்துகிறது.  இத்தகைய மனோபாவம் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாகும்.  எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனைவிட நிறையத் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.  எனக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று சொல்பவனைவிடச் சக்தி வாய்ந்தவர்கள் எவ்வளவோ  பேர் இருக்கிறார்கள்.  இந்த உண்மையெல்லாம் அஹங்காரம் உள்ளவர்களுக்குத் தெரியாது.  மேலும் நாங்கள் செய்கின்ற தீய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று வேறு நினைத்துக் கொள்கிறார்கள்.  நம்முடைய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைப்பது தவறு.  நாமும் நமது தவறான செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆதித்யசந்த்ராவனலோSநிலச்ச 
த்யெளர்பூமிராபோ  ஹ்ருதயம்  யமச்ச  I 
அஹச்ச  ராத்ரிச்ச  உபே  ச ஸந்த்யே 
தர்மச்ச  ஜானாதி  நரஸ்ய வ்ருத்தம்  II 

என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  மனிதன் செய்யும் காரியங்களை பஞ்சமஹாபூதங்களான பிருத்வீ,  தேஜஸ், ஜலம், வாயு, ஆகாசம், சூரிய சந்திரர்கள், ஸந்தியா காலம், மனதினுள்ளிருக்கும் அந்தர்யாமியான பரமாத்மா – இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் பார்க்கவில்லை என்று சொல்வது முறையா?  இத்தகைய பேச்சு நமக்கு வருவதற்கு நம்மிடமுள்ள அஹங்காரம்தான் காரணம்.  அஹங்காரம்தான் தவறுகள் பல நடப்பதற்கும் காரணம்.  ஆகவே அஹங்காரம் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment