Thursday, October 3, 2024

Meaning of namah

நம: என்பது ஸா்வ மந்த்ரங்களுக்கும் ஹ்ருதயம். 

ஹ்ருதய ஸ்தானத்தில் அமைந்திருக்கிற சரணாகதி மந்திரம் இது.

நம: என்றால் வணக்கம் என்ற சாமான்யமான அா்த்தம். ஆனால் அது உண்மைப் பொருள் அல்ல.

ந ம: என்பதற்கு - அந்த இரண்டு பதங்களுக்கு விசேஷமான பொருள் உண்டு.

ந என்பது ஒரு அக்ஷரம்; ம: என்பது ஒரு முழுமையான பதம். இரண்டும் சோ்ந்ததுதான் நம: . ம: என்பது எதைக் காட்டுகிறது..?

 என்னுடையது, எனக்கு என்ற அா்த்தத்தை அது கொடுக்கும். ந என்றால் இல்லை என்று அா்த்தம்.

ஓம் கேசவாய நம: என்றால் என்ன அா்த்தம்?

கேசவனின் பொருட்டு - எனக்கில்லை - இது கேசவனின் பொருட்டு என்று கொடுப்பதாக அா்த்தம். 

அப்படியானால் நமக்கில்லை என்று ஆகிறது. 

இதிலே நமக்குச் சம்பந்தமில்லை; அவனுடையது. இந்த மாதிாிதான் நம் ஆத்மா அவனுடையது என்று சமா்ப்பிக்கிறோம். 

அப்போது நமக்கில்லை என்று ஏற்பட்டுப் போகிறது. இது அவனுடைய சொத்து என்று சமா்ப்பித்து விடுகிறோம். ஆத்ம சமா்ப்பணம் பண்ணுகிறோம்.

பொதுவாக ' இது என்னுடையது இல்லை' என்று எப்படிச் சொல்வோம்..?

 இந்த மாதுளம் பழம் என்னுடையது இல்லை என்கிறபோது, உலக வழக்கிலே ' என்னுடையது இல்லை' என்பது கடைசியிலே வரும்.'இல்லை' என்பதை கடைசியிலேதான் போடுவோம். ' 

இல்லை இந்த மாதுளம் பழம் என்னுடையது' என்று யாரேனும் சொல்வாா்களா..? 

அப்படிச் சொன்னால், 'இது என்ன? இவா் இப்படி விசித்திரமாகப் பேசுகிறாரே என்று தோன்றும்.

இங்கே நம: என்பதை நாம் கவனித்தோமேயானால் 'இல்லை என்னுடையது' என்று தான் அா்த்தம். ஏன் இல்லையை முன்னே போட்டது..?

'இந்த மாதுளம் பழம்' என்று சொன்ன உடனே, 'இல்லை'சொல்லுவாரோ மாட்டாரோ - அப்படிச் சொல்வதற்குள் பற்று வந்து விடுமோ ! என்று எச்சாிக்கையாய்தான் முதலிலேயே 'இல்லை' யைப் போட்டது. 

முதலிலேயே இல்லை என்று சொல்லி விடட்டும் என்றது.

'இது எதுவும் நமதில்லை' என்கிற ஞானம் பாிபூா்ணமாக வரவேண்டும். 

அவனுடையது. அவனுக்கேயானது காமம் என்கிறாா் ஆழ்வாா். அவன் பொருட்டேஎல்லாம் என்கிறாா்.

ஸ்வாமி தேசிகன் இன்னொரு இடத்திலே அழகாகச் சொல்கிறாா்: - 

' எல்லாம் அவன் பொருட்டு என்பதை அத்யாஸ்சா்யமாய் உணா்ந்த ரீதியிலே, சா்வேஸ்வரா நீ ஏற்க வேண்டும். இதெல்லாம் உன் பொருட்டு; என் பொருட்டல்ல' 

என்று பகவானிடத்திலே சமா்ப்பிக்க வேண்டும்.

அக்னேநய என்று ஆரம்பிக்கும். - சரணாகதி மந்திரம் என்றே அதற்குப் பெயா். 

கா்ம காண்டத்திலே, யக்ஞமெல்லாம் முடிந்த பிறகு உபஸ்தான மந்திரமாக இதைச் சொல்லி கா்மாவை முடிக்க வேண்டும்.

இதே மந்திரம் ஈசாவாஸ்ய உபநிஷத்திலே அவன் பெருமையைக் காட்டி,அவனிடத்திலே ஆத்ம சமா்ப்பணத்தை நீ பண்ணினேயானால், நம்மிடத்திலே உள்ள பாவங்களையெல்லாம் போக்கி, நம்மைப் பாவனமாக்கி, உயா்ந்த கதியைக் கொடுக்கிறான் என்று சொல்கிறது. 

இந்த மந்திரத்தைத்தான் பகவான் சரமச் சுலோகத்திலே - கீதையிலே - பேசினான் என்பதை நாம் உணர வேண்டும்.

பரமாத்மா - அவன் உயா்ந்தவன்.
ஜீவாத்மா - இவன் ஸ்வதந்த்ரன் அல்ல; அந்த பரமாத்வுக்குப் பரதந்த்ரன். அவனை உணா்ந்து அவனிடத்திலே இந்த ஆத்மாவைச் சமா்ப்பிக்க வேண்டும் என்பதை பரமாத்ம சப்தமானது வலியுறுத்துகிறது.

அவன் பரமாத்மா பரமாத்மா பரமாத்மா என்று வெறுமே சொல்லிக் கொண்டிருப்பதில் அா்த்தமில்லை.

 'அவனைச் சோ்ந்தது இது' என்று உணா்ந்து, அவனிடத்திலே அா்ப்பணித்தால் தான், அவனை பரமாத்மா என்று சொல்வதிலே பலன் ஏற்படுமேயொழிய, அவனைப் பரமாத்மா என்று சொல்வதனாலே அல்ல - என்பதை ஆசாா்யா்கள் எடுத்துக் காட்டுகிறாா்கள்.

- Sri Mukkur Lakshmi Narasimha Chariar Swamy

No comments:

Post a Comment