Monday, September 30, 2024

Magizhancheri Natarajar - Unmatta nadanam

சங்கராம்ருதம் - 84

மஹா ஸ்வாமிகளின் முன், கைகட்டி நின்றார் சுந்தரேசன்

"நீ, மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?

புதுடில்லி சுந்தரேசனுக்கு நடராஜப்ஹா பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடு. நடராஜ தத்துவம் அவருடைய அறிவுக்கு விருந்த என்றால், நடராஜர் சிலைகள் அவருடைய கண்களுக்கும நெஞ்சத்துக்கும் விருந்து.

'கோனேரிராஜபுரம் நடராஜர் சிலையில் என்ன சிறப்பு? திருவாலங்காட்டு நடராஜர் எப்படிப்பட்டவர்? தில்லை நடராஜத் திருமேனியின் தனித்தன்மை என்ன? உலகிலேயே பெரிய நடராஜர் விக்ரஹம் நெய்வேலியில் தான் இருக்கிறது' என்பது போன்ற ஏராளமான தகவல்களை அவர் கூறுவார்.

ஆடிக் கொண்டேயிருக்கும் தெய்வத்திடம் ஆராத பக்திகொண்ட சுந்தரேசருக்கு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் மகாப்பெரியவாளிடமும் அசைக்க முடியாத பக்தி.

மகாசுவாமிகள் முன், கைகட்டி நின்றார் சுந்தரேசன்

"நீ, மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?

நடராஜரிடம் எனக்கு அந்தரங்கமான ஈடுபாடு என்று நான், பெரியவாளிடம் சொன்னதில்லையே? பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?"

'இல்லை' என்று சொன்னார், சுந்தரேசன்.

'பனங்குடிக்குப் பக்கத்திலே இருக்கு, மகிழஞ்சேரி, அந்த கிராமத்திலே என்ன விசேஷம் தெரியுமோ? பெருமாள் கோவில்ல நித்யவாசம் பண்ணிண்டிருக்கார், நடராஜர் சிவம்! சிதம்பரத்தைக் காட்டிலும் அற்புதமான விக்ரஹம், போய்ப்பார் பார்த்துட்டு வந்து, என்ன ஸ்பெஷல்னு சொல்லு'

மறுநாளே மகிழஞ்சேரிக்குப் போன சுந்தரேசன், பட்டாசாரியரை அழைத்துக்கொண்டு பெருமாள் கோவிலுக்குப் போனார்.'பெரியவாள் உத்திரவு' என்ற சொல்லைக் கேட்டதும், சுந்தரேசனை நடராஜரோடு ஐக்கியப்படுத்திவிட்டார் அவர்.

ஒவ்வொரு அங்குலமாக திருவாசி, விரிந்தசடை, உடுக்கு ஏந்திய கை, அனல்பறக்கும் திருக்கரம்,ஆனந்தப் புன்னகை நெளிந்தோடும் அழகு முகம் துடி இடை,தூக்கிய திருவடி, தரையில் பதிந்த பாதம் என்றிவ்வாறு துல்லியமாகப் பார்த்தார் சுந்தரேசன்.'பார்த்துட்டு வந்து என்ன ஸ்பெஷெல்னு
சொல்லு என்றல்லவா, உத்தரவு?

பெரியவாளிடம் சொல்லணுமே?

ஓ! அந்த ஊமத்தம்பூ! அதுதான், சிலையின் தலைப்பகுதியில் தலைகீழாகக் கிடக்கிறது? அது நேராக இருப்பது தானே, நியாயம்? முன்னுச்சியைத் தொடுகிறாப் போல் சரிந்து காணப்படுகிறதே? ஏன்?

பத்து அடி தள்ளிநின்று பார்த்தார்,சுந்தரேசன். பின்புறம் சென்று, பின்னழகைக் கண்டு சொக்கிப்போனார். ஆனந்தத் தாண்டவத்தின் மெய்மறந்த நிலையை உணர்த்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஆகா!

பெரியவாள் எதிரில் சுந்தரேசன்.

'மகிழஞ்சேரி நடராஜர், மெய்மறந்து தாண்டவம் ஆடுகிறமாதிரி இல்லை?'

'ஆமாம் தலையில் ஊமத்தம்பூ கூட நழுவி விழுகிறாப் போல, தத்ரூபமாக இருக்கு'

பேஷ்! நன்னா கவனிச்சிருக்கே! நடராஜர், ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடியிருக்கிறார். மகிழஞ்சேரியில், உன்மத்த நடனம் என்ற அபூர்வமான நடனம்?'

கேட்டுக் கொண்டிருந்த அன்பர்கள் மெய்மறந்து போனர்கள். ஆனால், பெரியவாள், மெய் உணர்ந்து, சிவானந்தப் பெருவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்!

No comments:

Post a Comment