Monday, September 23, 2024

HH Bharati teertha Mahaswamigal on his guru HH Abhinava Vidyateertha Mahaswamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

நம் ஆசார்யபாதர் ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீ சங்கர பகவத்பாதாரால் நிர்ணயிக்கப்பட்ட எல்லாத் தகுதிகளையும் கொண்டவராக பிரகாசித்தார். நம் ஆச்சார்யபாதரின் சீரிய குணங்களையும், பூர்ணமான ஜிதேந்திரியத்வத்தையும், வியக்கத்தக்க அறிவாற்றலையும் சரியாக எடுத்துக் கூற எனக்கு ஆற்றலில்லை என்றுதான் எண்ணுகிறேன். நம் குருநாதர் ஞானிகளுள் தலைசிறந்தவர். ஆதிசங்கரரைப் போலவே நம் ஆசார்யரும் சிறுவயதிலேயே சந்யாசம் மேற்கொண்டதனால், 3-வது புருஷார்த்தமான 'காமம்' என்பதை அறவே அறியாதவராயும் 4-வது புருஷார்த்தமான 'மோக்ஷ' மொன்றையே அறிந்தவராயுமிருந்தார்.

அவர் ஸித்தியடைந்தது நமக்கெல்லாம் ஒரு மகத்தான இழப்புதான். நான் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கண்ட பூனா நகரத்திலிருந்து விரைந்து வந்தது உங்களுக்கு தெரியும். எனக்கு சந்யாச தீக்ஷை கொடுத்து கமண்டலத்தையும் அருளின அதே இடத்தில் அதே கமண்டலத்தால் அவர் உடலுக்கு
அபிஷேகம் செய்ய நேரிட்டபோது என்னதான் முயன்றும் என் துயரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ரொம்பவும் சிரமப்பட்டு என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

நம் குரு சொல்வார் - "இந்த சரீரம் மரிக்கும் போது உங்கள் துயரம் தாளமுடியாமல்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் (மாமிசபிண்டங்களான) எல்லா சரீரங்களுமே அந்த கதியை அடைய வேண்டியதுதான்". இதையேதான் ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ சுவாமி அவருடைய சிஷ்யர் ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ஹ பாரதீ சுவாமிகளுக்கும்  கூறினார்.  நம் குருவின் பிரத்யக்ஷ சரீரம் இல்லாமை நம்மை வெகுவாக பாதிக்கத்தான் செய்கிறது. மஹான் பாணபட்டர் ஓரிடத்தில் " பகவத் சங்கல்பத்துக்கு முன்னால் நாம் சக்தியற்றவர்களாகவே இருக்கிறோம்" என்று கூறுகிறார்.

இந்த மாதிரி நினைத்துத்தான் நாம் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும். ஸ்ரீ சாரதாபரமேஸ்வரியின் அருளாலும் நம் குருநாதரின் அனுக்ரஹத்தாலும் அவர் நமக்கிட்ட கடமைகளைச் சரிவரச் செய்வதே நாம் அவர் நினைவுக்குச் செய்யும் சேவையும் அஞ்சலியுமாகும்.

No comments:

Post a Comment