Friday, September 27, 2024

Gold kavaca to Kamakshi - Periyavaa

*"சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா ? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?.."*

நான் கோவில் பொறுப்பு ஏற்றபோது (காமாக்ஷி கோவில் ஸ்ரீகார்யம்) வருமானமே இல்லை. உண்டியல் வைத்தால், ஸ்தானீகர்களுக்குப் பாதித் தொகை போயிடும். அதனாலே, நித்யபூஜா தர்ம உண்டியல்-என்று வைத்தோம். வருஷத்துக்கு ஒரு தடவை உண்டியலைத் திறப்போம். முப்பதாயிரம், நாப்பதாயிரம் தான் இருக்கும். மளிகைக் கடை, பூக்கடைக்கு அப்போ தான் பாக்கிப் பணம் பட்டுவாடா செய்வோம். அதுவரை அவர்களும் பொறுமையா இருப்பா.

ஒரு சமயம் பெரியவாகிட்ட, 
"கோவில் செலவுக்குப் பணம் போறல்லையே? நுழைவுக் கட்டணம் வைக்கட்டுமா?"ன்னு
கேட்டேன். பெரியவாளுக்குக் கோபமான கோபம்!

காசு தொடாத சந்யாஸி, அம்பாள் தரிசனத்துக்கு வந்தா, பணத்துக்கு எங்கே போவார்?

"சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா ? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?..
நியாயமேயில்லை. 'என்ட்ரன்ஸ் கட்டணம் வாங்கக் கூடாது' என்று கண்டிப்பா சொல்லிட்டா.

காமாக்ஷிக்கு லலிதா ஸஹஸ்ரநாம தங்கக்
காசுமாலை இருக்கு. பெரியவா பண்ணிப் போட்டா. எப்படிப் பண்ணினா, தெரியுமோ? ஒரு விளம்பரம் கிடையாது. வாய் வார்த்தையா ஒவ்வொருத்தரையா
கேட்டுக் கேட்டே, பண்ணினா!

"ஜானகிராமா, காசுமாலை ரொம்பக் கனமா இருக்குமே?

காமாக்ஷிக்குத் தோளில் போட்டா, வலிக்கும் இல்லையா?

அதனாலே, திருவாசியில் கொக்கி போட்டு மாட்டும்படி ஏற்பாடு செய்.."

சிலா மூர்த்தமாக இருந்து அருள் பாலிக்கும் காமாக்ஷிக்குக் கனக்கும்-என்று, பெரியவாளின் மிருதுவான உள்ளம் கவலைப்பட்டது. சாட்சாத் அம்பாளாகவே, மூர்த்தத்தைத் தரிசித்தவர் தானே, ஸ்ரீசரணர்கள்.

இதைக் கேளுங்கோ. இதே மாதிரி இன்னொரு சம்பவம்.

சின்னக் காஞ்சிபுரம் ஆனைக்கட்டித் தெரு மடத்தில் இருந்தபோது, பெரியவாளுக்குக் கனகாபிஷேகம் நடந்தது. அந்தத் தங்கத்தைக் கொண்டு, காமாக்ஷியின் தாமரைத் திருவடிகளுக்கு ஸ்வர்ண கவசம், மற்றும் ஆதிசங்கரர் மூர்த்தத்துக்குக் கவசம் செய்ய உத்திரவாயிற்று.

பொதுவாக, தங்கக் கவசம் என்றால், செம்பினால் கவசம் அளவாகச் செய்து, அதன்மேல் தங்கரேக்குப் பதிப்பார்கள்- பக்தர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக. ஆனால், மகா ஸ்வாமிகள் என்ன செய்தார்?

"ஜானகிராமா, ஆசார்யாள் மேனியிலே ஸ்வர்ணம் படணும். அதனால் செப்புக் கவசத்துக்கு உட்புறத்திலேயும் தங்கரேக்கு பதிக்கச் சொல்லு.

"ஆம் அத்தனை குருபக்தி!

காமாக்ஷி கோவில் ஆதிசங்கரர் சிலாமூர்த்திக்கு ஸ்வர்ண கவசம், பெரியவா உத்திரவுப்படியே தான்
செய்யப்பட்டது. உள்ளும் புறமும் ஸ்வர்ணம்.

*kn*

No comments:

Post a Comment