Tuesday, September 17, 2024

Bhagavan Ramanar & animals

ரமணாஸ்ரம விஷயம்  -நங்கநல்லூர் J K SIVAN 

பகவான் ரமணர் அருணாசலத்தில் வாழ்ந்த காலத்தில் தனியாக ஒரு சந்நியாசியாக இருந்தார் என்று சொன்னால் தப்பு.   அவர் ஒரு பெரிய குடும்பத்தோடு தான் வாழ்ந்தார்.  ஆனால் அவர் குடும்பம்  நம்முடைய குடும்பம்  போல் மனிதக்  கூட்டமல்ல.  அவர் ப்ரம்ம ஞானி என்பதால் எல்லா உயிர்களையும் தானாகவே கண்டவர். ஆகவே அவரைச் சுற்றி, ஏராளமான  அணில்கள், நாய்கள், பாம்புகள், பறவைகள்,பசுக்கள்,  குரங்குகள், என்று பல ஜீவராசிகள் முப்பது வருஷங்களுக்கு மேலாக அன்போடு வாழ்ந்தன. எல்லாமே ஆஸ்ரம வாசிகள். முக்கியமாக சில நாய்கள் அவரைச் சுற்றி சுற்றி வரும். அவை அத்தனைக்கும் ஏதோ ஒரு பேர். ஒவ்வொன்றின் தாய் தந்தை தாத்தா  பாட்டி யார் என்றுகூட சொல்வார். அவற்றின் வம்சா வழி அவருக்கு அத்துப்படி.  

அவரைப் பொறுத்தவரை  எந்தெந்த  ஜீவன்கள்  அருணாசலத்தில் வாழ்ந்தனவோ அவை புண்யம் செய்தவை.  அருணாச்சலத்துக்கு போகவேண்டும் என்று வேண்டி தவமிருந்து இங்கே வந்தவை. ஜீவன்களில் மனிதன் மிருகம், பறவை என்ற வேறுபாடே அவருக்கு கிடையாது. அவரைப் போலவே எல்லாம் ஆத்ம விசாரத்தோடு அருணாசலம் வந்தவை. 

சில பக்தர்களிடம் ஒரு நாயைக் காட்டி  ''இந்த கமலா பழையகாலத்துப் பெண்.  அதோ அந்த நீலா,  ஜாக், ரோஸ்  எல்லாமே  அவள் பேரக்  குழந்தைகள்.    கமலா எனும் நாய்  இறக்கும் தருவாயில் இருந்தபோது  அவர்  அந்த நாய்க்குட்டிகளிடம் சென்று , 

''என்ன குட்டிகளா நீங்கள் இங்கே  விளையாடுகிறீர்கள். ஓடுங்கள் போய் உங்கள் பாட்டியைப்  பாருங்கள். இன்னும் சில  மணி நேரத்தில்  அவள் உங்களை விட்டு போகப்போகிறாளே''  என்று அவற்றை கமலாவிடம் போகச் சொல்வார்.

''என்ன ரோஸ், தனியாக உட்கார்ந்திருக்கிறாய். பாட்டி போய்ட்டாள் என்கிற துக்கமா? என்று தடவிக் கொடுப் பார் .நரசிம்ம ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தில் இருந்த  ஒரு பக்தர்.  ''நரசிம்மா, இந்த சின்ன கருப்பன், முழு கருப்பு.  அதுக்கு தான் அவனுக்கு அந்த பேர்''என்பார்.

 விரூபாக்ஷ குகையிலிருந்த  போது  கருப்பன்  மஹரிஷி யைத்   தொடர்ந்து போவான்.யாரிடமும் கிட்டே வரமாட் டான். புதர்களில் அருகே ஒளிந்து ஒளிந்து நடப் பான், அடிக்கடி தலையை நீட்டி பார்ப்பான்  யாருடனும் சேராமல் தனித்து இருக்கும் நாய். அவனுக்கு தட்டில் சாப்பாடு வைத்தால் தான் சாப்பிடுவான்.  

ஒரு நாள்  மகரிஷி முன் ஓடிவந்து முன்கால்கள்  ரெண் டை யும் நீட்டி  அவர் மேல் வைத்து வாலாட்டினான். கண்கள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. குட்டி குட்டியாக என்னவோ சத்தம் முனகுவான். அதில் பாசம் த்வனித்தது. அப்புறம் ஆஸ்ரமவாசியானான். மகரிஷி மடிமேல் உட்கார்வான். ஆஸ்ரமவாசிகள், வரும் பக்தர் கள் எல்லோரிடமும் அன்பாக பழகுவான்.ஒரு சமயம் விரூபாக்ஷ குகை அருகே  ஒரு வில்வமரத்தடியில் ஜபம் செய்து கொண்டிருந்த ஒரு வைதீக பிராமணர் அருகே சென்றான் கருப்பன். நாயைத் தீண்டுவது அனாச்சாரம் என்று அவர் ஒதுங்கிக் கொண்டார் கருப்பனுக்கு அவர் அருகே செல்ல ஆசை.  அருகே செல்ல துடித்தான்.  
 கருப்பன்  அடம்பிடிப்பதை பார்த்த ஆஸ்ரம வாசி  ஈஸ்வரசாமி  என்பவர் ஒரு தடியை எடுத்து கருப்பனை அடித்து விட்டார். சின்ன கருப்பன் ஓடிவிட்டான்.  அப்புறம் அவனை ஆஸ்ரமத்தில் காணோம்.  ரொம்ப ரோஷக்காரன் சின்ன கருப்பன். ஏற்கனவே எல்லோருக் கும் அவனைப் பற்றி தெரியும். தெரிந்தும் அடித்து விட்டார் ஈஸ்வர சாமி. இன்னொரு சம்பவம். பழனிசாமி என்ற ஆஸ்ரமவாசி சின்ன கருப்பனை கண்டபடி திட்டி விட்டார். அன்று மழை கொட்டோ கொட்டு என்று பெய்து கொண்டிருந்தது. சின்ன கருப்பன் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே போய் வெட்டவெளியில் இருந்த ஒரு கரி மூட்டை மேல் மழையில் நனைந்தவாறு படுத்துக் கொண்டான்.  மறுநாள் அவன் எங்கே என்று மஹரிஷி  கேட்டபோது  வேறு யாரோ ஒரு ஆஸ்ரமவாசி  அவனைத்   தேடி பார்த்து சமாதானம் செய்து உள்ளே கூட்டிவந்தார்.   சின்ன கருப்பன் மட்டுமல்ல. ஆஸ்ரமத் தில் மஹரிஷியோடு இருந்த அத்தனை ஜீவன்களும் அப்படிப்பட்டவை. ஆஸ்ரமத்தில் படுத்திரு ந்த  ஒரு சின்ன நாய்க்குட்டியை இப்படி தான்  ஒரு ஆஸ்ரம வாசி கடுமையாக திட்டி விரட்டினார் . அது உடனே சங்க தீர்த்தம் குளத்துக்கு ஓடிச்சென்று  சில மணி  நேரத்தில் அதன் உடல் நீரில் மிதந்து கொண்டிருந்தது. 
இங்கே  எல்லாரும் சமம், ஒவ்வொருவருக்கும் தனித்த  அறிவு, ஞானம் உள்ளது, சிலர் பேசுவார்கள், சிலர் பேசாமல்  மௌனம் சாதிப்பவர்கள். யாரும் எவரிடமும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளவேண்டாம் என்று மகரிஷி அடிக்கடி சொல்வார். 

''எந்த உடலில் எந்த ஆத்மாவோ. தனது கர்ம வினை யைத்   தீர்த்துக்கொள்ள மிருகமாகவோ, பறவையாக வோ, வேறு ஏதாகவோ, இந்த சத்சங்கத்தை நாடி அருணா சலம்  வந்து நம்மோடு இருப்பவை. அவமதிக் கவோ, அவமரியாதை, அதிகாரம் செய்யவோ  வேண்டாம்.''என்பார்.
மகரிஷி சொல்வதை கூர்மையாக கவனித்து அந்த ஜீவன்கள் அவர் சொல்படி நடக்கும். ஆஸ்ரமத்துக்கு
 வரும் பக்தர்களுக்கு  மலையைச் சுற்றி காட்டுவதற்கு, கிரிவலம் வருவதற்கு  வழிகாட்ட  மஹரிஷி  செகப்பன் ,கமலா,கருப்பன்  ஆகிய  நாய்களில்  எது கண்ணில் படுகிறதோ அதைக்  கூப்பிட்டு

 ''நீ கொஞ்சம் இவரோடு போய்  கிரிவலம் போகும் வழி காட்டி அழைச்சுண்டு வா '' என்றவுடன் அவர்களை  அழைத்துக் கொன்டு  ஒவ்வொரு லிங்கமாக காட்டி  விட்டு திரும்பும் பழக்கம் உடையவை . அக்காலத்தில்  சரியான கிரிவல பாதை கிடையாது. கரடும் முரடுமாக  காட்டுப்பாதையில் மரம் செடி கொடிகளுக்கு நடுவே நடக்கவேண்டும். 

ஒரு தடவை மஹரிஷி  மற்றவர்களோடு விரூபாக் ஷ குகையிலிருந்து நடந்து கிரிவலம் வர, எங்கோ காட்டுக்குள் தடம் மாறி சென்றுவிட்டார்கள்.  போகும்போது மஹரிஷி அங்கே படுத்திருந்த ஜாக் எனும் நாயிடம் ''ஜாக்,   நாங்கள் கிரிவலம் போகிறோம் நீ மலையடிவாரத்துக்கு போய்விடு.'' என்று சொல்லி இருந்தார். மஹரிஷியும்  மற்றவர்களும் ஒரு மைல்  தூரம் நடந்தபோது கீழே கிழக்கு நோக்கி ஜாக் ஓடிக் கொண்டி ருப்பதை அவர் பார்த்தார்.ஜாக் மலையடி வாரம் போய்  மஹரிஷிக்காக காத்திருந்து ஏன் வரவில்லை என்று திரும்ப மலை மேலே ஏறி  ஓடி வந்து  அவர்கள் வரும் பாதையில் காத்திருந்தது. 

 ''ஜாக்  நீ எங்களுடன் வரவேண்டாம், கீழே மலையடி வாரம் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ''என்றபோது ஜாக் குக்கு அவரைப் பிரிவதில் இஷ்டம் இல்லை. பணி வாக,நொந்து போய் நடந்து போனது.ஜாக் ஒரு தபஸ்வி, தன்னடக்கமுடையவன். சாந்தி அமைதி விரும்பி.  காலையில் அருணாசலேஸ்வரர் பிரசாதம் தானுணவு.  அர்ச்சகரோடு குகை நமசிவாயராலயம் வரை  வந்து அவரை அங்கே விட்டுவிட்டு விரூபாக்ஷ குகை வரு வான்.  மற்ற நாய்களுடன் சேராது.சண்டை சச்சரவு கிடையாது. குகை நமசிவாயர் ஆலய நைவேத்யம்  காலை 9 -9.30 க்கு நடக்கும்.அப்போது அங்கே இருந்து பிரசாதம் பெற்றுக்கொள்வான். மஹ ரிஷி கொடுப்பதை மட்டும் ஏற்றுக்கொள்வான்.  சில இரவுகளில் கீழே ஓடி   ஒரு தேவதாசி இல்லம்  செல்வான்.அங்கே பிரசாதம் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு  அர்ச்சகருடன் சேனை யார் மடம் சென்று தூங்குவான். ஒரு தடவை ஒரு சிறுத்தை பாய்ந்து வந்து ஜாக்கின்  கழுத்தை கவ்வியது. ஜாக்கின் குரல் கேட்டு அர்ச்சகர் வந்து சத்தம் போட சிறுத்தை ஓடிவிட்டது. திருவண்ணாமலையில் பிளேக் நோய் வந்த போது பலர் வீடுகளை காலிசெய்தார்கள். ஜாக்  அர்ச்சகரோடு மலேமேல் குகைநமசிவாயர் ஆலயத்தில் இருந்தான்.   கடைசி காலத்தில் ஜாக்  மஹரிஷியோடு  விரூபாக்ஷகுகையிலே இருந் தான்.  ஒருநாள் அவனைக் காணோம். ஏதோ சிறுத்தை அவனை தின்றிருக்க வேண்டும். மஹரிஷி  தினமும் முதலில்  நாய்கள், பூனைகள், பசு பறவைகள்  இவற்றுக்குத் தான்  பிரசாதம் அளிப்பார். அப்புறம் தரித்ர நாராயணர்கள்,எனப்படும் பிச்சைக்காரர் களுக்கு.  கடைசியாக  எஞ்சி இருப்பது தான் மஹரி ஷிக்கும்  ஆஸ்ரமவாசிகளுக்கும்.

முதலில் குட்டியாக  ஓடி வந்த கமலாவை மற்றவர்கள் விரட்டிய போது தடுத்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்த மஹரிஷி  பின்னர்  அவள் வம்சாவழி அத் தனை நாய்களுக்கும்  தாத்தாவானார். கமலாவின்  தலைப்  பிரசவத்தின் போது கூடவே இருந்தார். பத்து நாள்  தீட்டு,  புண்யாஹவசனம் நடந்து  ஆஸ்ரமத்தில் எல்லோரும்  வடை பாயசம் சாப்பாடு.  நாய்க் குட்டிகள்  தினம் குளித்து மஞ்சள் பூசி,நெற்றியில் குங்குமத் தோடு கமலா பாட்டியோடு காட்சி அளிக்கும். மரணம் சம்பவித்தால் ஆஸ்ரமத்தில் கிரமப்படி அடக்கம் பண்ணி கல்லறை மேல் ஒரு கல் வைப்பது வழக்கம்.

No comments:

Post a Comment