Tuesday, September 3, 2024

9th day night oh Mahabharat war - Bhishma trapped by his words

குருக்ஷேத்ரத்தில் 9ம் நாள் இரவு..
  நங்கநல்லூர் J K SIVAN 
மஹா பாரதத்தில் பீஷ்மன் ஒரு ஆச்சர்யமான பாத்திரம். பீஷ்மனின் வைராக்யத்துக்கும், சபதத் துக்கும் தனிப் பெருமை. பீஷ்மன் வைராக்கியத்துக்கு சிறந்த உதாரணம். பீஷ்மன் முன் ஜென்மத்தில் அஷ்டவசுக்களில் ஒருவன் ப்ரபாஸன். அவன் வசிஷ்டர் சாபத்தால் பூமியில், கங்கையின் மகனாக பிறந்தவன். சந்தனு மஹாராஜாவின் புத்ரன். மஹா வீரன். தனது மரணத்தை வேண்டும் போது அடையும் வரம் பெற்ற வன். கௌரவர்கள், பாண்டவர்களின் பிதாமகன். மஹா பாரத யுத்தத்தின் போது கௌரவர் களைக் காப்பேன், அவர்களுக்ககாக என் உயிரையே விடு வேன்'' என்று சபதம் செய்தவன். 
யுத்தம் ஆரம்பிக்கும் முன் யுதிஷ்டிரன் பிதாமகர் அருகே சென்று வணங்கியபோது ''விஜயீபவ'' வெற்றி பெறுவாய் என்று ஆசிர்வாதம் பீஷ்மரிடம் பெற்றவன். 
பாரத யுத்தத்தில் பீஷ்மன் சேனைத்தலைவனாக இருக்கும் வரை கௌரவர்களை வெல்வது இயலாத காரியம் என்று கிருஷ்ணனுக்கு தெரியும். முதல் ஒன்பது நாட்கள் யுத்தம் பீஷ்மர் தலைமையில் நடந்தபோது, அதிக பக்ஷ சேதம் பாண்டவ சைன்யத் துக்கு தான். அர்ஜுனன் பீமன் ஆகியோர் கௌரவ சேனையைக் குலைத்து த்வம்சம் செய்தாலும் கிருஷ்ணனுக்கு அதில் திருப்தி இல்லை. 
''நாலு நாளிலேயே பாண்டவர்களை பீஷ்மர் கொன்றி ருக்கவேண்டும். ஏன் இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது இந்த யுத்தம்?'' என்று துரியோதனனுக்கு கோபம்,கவலை. பீஷ்மரை மனம் நோகப் பேசி விட்டான். பாண்டவர்களைக் கொல்வதற்கு விசேஷ மாக ஐந்து அம்புகளை பீஷ்மர் தயார் செய்து வைத்தி ருந்தார். அவற்றை வாங்கிக் கொண்டு போய்விட்டான். 
''தாத்தா, உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை, கர்ணன் இருந்தால் யுத்தத்தை முடித்திருப்பான். அவனையும் பங்கேற்காதபடி சபதம்செய்ய வைத்து விட்டீர்கள். நீங்கள் பாண்டவர்கள் மேல் உள்ளூர கொண்டுள்ள அன்பு, பாசம் தான் காரணம் நீங்கள் எனக்கு செய்யும்தரோகம் '' என்று சொல்லி விட்டான். 
ஒன்போதாம் நாள் காலையில் பீஷ்மரை மறுபடி கடிந்து கொண்டபோது அவர் மனம் ஒடிந்து, நொந்து, கோபம் தாங்காமல் ஒரு ப்ரதிஞை செய்தார். 
''துரியோதனா , நாளை யுத்தத்தில் அனைத்து பாண் டவர்களை நான் ஒருவனே என் கையால் அழிப் பேன்,அதுவரை எந்த தடையும் இன்றி நான் போரிட் டால் '' என்று திரும்ப அந்த ஐந்து விசேஷ அஸ்திரங்க ளை வாங்கிக் கொண்டு விட்டார். பீஷ்மர் சபதம் செய்துவிட்டால் அது முடிந்த மாதிரி என்று எல்லோ ருக்கும் தெரியுமே. எல்லா வீரர்களும் சங்கநாதம் ஹாஹாகாரம் எழுப்பியதில் பீஷ்மர் கடைசியாக சொல்லிய .....''எந்த தடையும் இன்றி நான் போரிட்டால்'' என்ற வார்த்தை எவர் காதிலும் விழவில்லை.ஒரே ஒருவன் காதில் மட்டும் நன்றாக விழுந்தது அது இதை எதிர்பார்த்து காத்திருந்த கிருஷ்ணன். 
அன்று இரவு போர் முடிந்து பாண்டவர் சேனைக்கு பெருத்த உயிர்ச்சேதம். கிருஷ்ணன் யுதிஷ்டிரன் கூடாரத்துக்குச் சென்றான். 
''யுதிஷ்டிரா இனி போரில் நீ வெற்றி பெறுவது இயலாத காரியம், என்மீது பார் எத்தனை அம்பு காயங்கள். அத்தனையும் பீஷ்மரால் நேர்ந்தவை. அவை அர்ஜுன ன் மேல் படாமல் அவன் உயிரைப் பறிக்காமல் நான் தடுத்தவை. நாளை யுத்தம் தான் கடைசி நாள் போல இருக்கிறது... கௌரவர்கள் வெற்றி பெற''
''கிருஷ்ணா.. என்ன நீயே இப்படி மனம்குன்றி விட் டாய். எங்களை உற்சாகப் படுத்துபவன் நீயே இப்படி சொல்கிறாயே.
''ஆமாம், பேச இனி நேரம் இல்லை. முதலில் நீங்கள் நாளை உயிரோடு இருந்தால் தானே பாண்டவர்களுக்கு வெற்றி என்று சொல்லலாம். இப்போது முதலில் திரௌபதியை உடனே என்னுடன் பேசாமல் அனுப்பு '
மறுவார்த்தை பேசாமல் திரௌபதி கிருஷ்ணனோடு 
பீஷ்மர் கூடாரத்துக்கு சென்றாள் .
''நீ மட்டும் உள்ளே போ. போய் பீஷ்மருக்கு நமஸ்காரம் பண்ணு''  
''நீயும் வா கிருஷ்ணா'''
'இல்லை நான் வெளியே இங்கே இருக்கிறேன். நான் சொன்னபடி செய்''
பீஷ்மர் தனது கூடாரத்துக்குள் ஒரு பெண் நுழைவதை பார்த்து வியந்தார். போர்க்களத்தில், அதுவும் பெண்
களு டனே பேசாத தன்னை யார் இங்கே வந்து சந்திப்பது?? எதற்கு?
திரௌபதி அவர் முன் விழுந்து வணங்கினாள் . என்னை மனமார ஆசீர்வாதம் பண்ணுங்கள்'' என்றாள் .
''தீர்க்க சுமங்கலி பவா '' என்று அவரிடம் ஐந்து முறை வணங்கி ஆசி பெற்றவளை அப்போது தான் திரும்பி பார்த்தார் பீஷ்மர். 
''திரௌபதி நீயா? உன்னை யார் இங்கே அழைத்து வந்தது ?'
''கிருஷ்ணன்''
'பீஷ்மர் விடுவிடுவென்று வெளியே வந்து பார்த்தபோது தனது பீதாம்பரத்தை தலையில் போட்டுக்கொண்டு கிருஷ்ணன் உட்கார்ந்திருப்பதை பார்த்தார். பீதாம்பரத் தையும் மீறி வெளியே மயிலிறகு தெரிந்ததும், ஓஹோ .கிருஷ்ணன் வந்திருக்கிறான் என்று அவருக்கு ஆனந்தம்
''கிருஷ்ணா, நீ வந்தது எனக்கு சந்தோஷம். எதற்கு என்னை ஏமாற்றி என்னிடம் திரௌபதியை ஆசி வாங்க செய்தாய்?''
'பீஷ்மரே , நான் எவரையும் எப்போதும் ஏமாற்றியதாக சரித்திரமே கிடையாது. நீங்கள் ஏமாந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?. உங்களை யார் முகத்தை பார்க்காமல் ஒரு பெண்ணுக்கு ஆசி வழங்கச்சொன் னது?. அதுவும் ஒரு பெண் ஐந்து முறை வணங்கி ஐந்து முறை ஆசி வேண்டும்போது முதலில் அவள் யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டாமா?
என் மீது எதற்கு வீண்பழி சுமத்துகிறீர்?'
'நீ சொல்வது வாஸ்தவம் கிருஷ்ணா ''
''ஐந்து கணவர்கள் பாண்டவர்களை மணந்த திரௌபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க பாண்டவர்கள் ஐவரும் உயிரோடு இருக்கவேண்டும். இது சத்யம். உங்கள் வாக்கு மீறாத வாக்கு. ஏற்கனவே பாண்டவர்களை நாளைக்குள் கொல்வேன் என்று இன்று காலை துரி யோத னனுக்கு சத்தியம் செய்தீர்கள் அது மறந்து விட்டதா? 
 உங்களின் ரெண்டு வாக்கில் எது இனி நிறைவேறும்?ஒன்றுக்கொன்று எதிர்மறையான வரங்களல்லவா?''
''ஆமாம் கிருஷ்ணா. நீ சொல்வது ஞாயம். இரண்டும் நிறை வேறாமல் போகக்கூடாது.ஒன்று நிறைவேறினால் மற்றது பொய்யானதாகிவிடுமே ? என் செய்வேன்?''
''ஆஹா. இப்போது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இன்று காலை யுத்த களத்தில் உங்களையறியாமல்
 நீங்கள் செய்த சபதத்தில் ஒரு வார்த்தை இருந்ததே ஞாபகமிருக்கிறதா?''
''என்ன சொன்னேன் நான்"
'''நான் எந்த தடையுமின்றி போரிட்டால்...'
'''ஆமாம் கிருஷ்ணா ஏதோ என்னை அப்படி பேசவைத்
தது''
'அது தான் சிகண்டி.. அது தான் தடை, இடையூறு. நீங்கள் அவளுக்கு செய்த துரோகத்துக்கு உங்களைக் கொல்ல வேண்டும் என்றே தவம் செய்து சிகண்டி யாக அவதரித்தவள் அம்பை'' . 
சிகண்டி துடித்துக் கொண்டிருக்கிறான் பாண்டவ ஸைன்யத்தில் உங்களோடு நேரில் யுத்தம் செய்ய. அவனை நாளை உங்கள் முன் நிறுத்துவேன்.  
''எந்த பெண்ணோடும் நான் போரிடமாட்டேன் என்ற உங்கள் சபதம் வேறு நாளை நிறைவேறட்டும்... அம்பை விடும் அஸ்திரங்களை நீங்கள் தடுக்கமாட்டீர்கள், திருப்பித் தாக்க மாட்டீர்கள். அவற்றினூடே அர்ஜுனன் பாணங்களும் உங்களை துளைக்கும்.'' துரியோதன னுக்காக உயிரையே கொடுப்பேன் என்று நீங்கள் சொன்ன சபதமும் ஒரே சமயத்தில் பலிக்கும். எந்த தடையும் இல்லாமல் நான் போர் புரிந்தால்'' என்ற வார்த்தையும் பலிக்கும்.' 
'இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்தோ தெரியா
மலோ, கிருஷ்ணா, என் மரணத்துக்கு காரணமாக சிகண்டி இருப்பான்(ள்) என்று யுதிஷ்டிரனிடம் நான் ரஹஸ்யத்தைச் சொல்லி இருக்கிறேன்''.  
''அது மட்டும் இல்லைபீஷ்மரே . இந்த யுத்தம் ஆரம்பிக் கு முன் உங்களை மரியாதையோடு முதலில் பணிந்து வணங்கி யுத்தம் துவங்க வந்த யுதிஷ்டிரனிடம் 'தர்மம் வெல்லும். ஜெயவிஜயீபவ '' உனக்கு வெற்றி கிடைக் கட்டும்'' என்று வேறு வாழ்த்தினீர்கள். அதெல்லாமும் பலிக்கட்டும்.''
''அதெல்லாம் அப்படியே நடக்கட்டும். என் முடிவு நெருங்கியது எனக்கு தெரிகிறது.என் வார்த்தைகளில் அத்தனையுமே நிறைவேறும். நான் துரியோதனனுக் காகவே என் உயிரை விடுவேன் என்று சொன்னதும் நாளை நிறைவேறும்.''  
பீஷ்மர் கண்களில் நீரோடு கிருஷ்ணனை வணங்கி னார்..அப்புறம் நடந்ததை பாரத இதிகாசம் விவரிக்கிறது.  
முடிவும் நமக்கு தெரிந்தது தானே.

No comments:

Post a Comment