Tuesday, January 30, 2024

Why one should not eat outside?

*ஸந்த்யாவந்தனத்தை கை விடுவதற்கு ஆஹாரம் காரணமா?*

1. பொதுவாக, கோபத்தில், *உப்பு போட்டுதானே சாப்ட்றே ? சோத்த தானே திங்கறே?* போன்ற வினாக்கள் எழ கேட்டிருக்கிறோம் அல்லவா?

இதன் உள் அர்த்தம் என்ன?

நற் பண்புகள் அல்லாத செயல்களைக் காணும் போது, இம்மாதிரியான கேள்விகள் பொதுவாக கேட்கப் படுகின்றன !

ஆக, நாம் உட்கொள்ளும் உணவு, நமது எண்ணங்களோடும் செயல்களோடும் சம்பந்தம் உடையவை என்பதாகிறது.

மது அருந்துவோரின் மாற்றமடைந்த எண்ணங்களும் செயல்களும், உடனடியாகவே தெரிய வரும் அல்லவா ? அது போலத் தான், அனைத்து ஆஹாரத்தின் விளைவு களும் ; காலப்போக்கில் எண்ணங் களிலும் செயல்களிலும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணும் !

இதனால் தான் நம் முன்னோர்கள் *பரான்னத்தை* முற்றிலுமாக நிராகரித்தனர்.

2 சாஸ்த்திரமும் இதையே உரைக்கிறது.

இதனை சாந்தோக்ய உபநிஷத்,

*ஆஹார சுத்தௌ ஸத்வசுத்தி: ஸத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி:*

என்கிறது; அதாவது – உணவு சுத்தமாக இருந்தால் மனம் சுத்தமாகும்; மனம் தூய்மையானால், சாஸ்த்திர விஹித எண்ணங்களும் செயல்களும் கைகூடும்.

3. சம்சாரி ஜீவர்களின் குணங்களும் மற்றும் மனத்தின் செயல்பாடுகளும், அவர்களிடம் உள்ள சரீரத்தினால் ஏற்படுகின்றன. 

ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று குணங்களை கொண்டவை இந்த ஜீவர்களின் சரீரம்.

வேத வ்யாஸர் அருளிய, ஐந்தாவது வேதமாகப் போற்றப் படும், மஹாபாரதத்தில்

*தம: சூத்ரே ரஜ: க்ஷத்ரே ப்ராம்மணே ஸத்வமுத்தமம்*

என அருளினார். அதாவது, *ப்ராம்மணனுக்கு* தேவை ஸத்வ குணமும், *க்ஷத்ரியனுக்கு* ரஜோ குணமும், *வேளாளனுக்கு* தமோ குணமும், என்பதாகிறது. 

# சரீரத்தில் இருக்கும் *ஸத்வ குணமாவது*,  சாஸ்த்திர விஷயங்களில் மன ஈடுபாடு, சுலபத்தில் க்ரஹிக்கும் தன்மை போன்றவைகளை வளர்க்க கூடியது; ஆகையால் தான் அந்தணன், தான் கற்று, மற்றவர்களுக்கு கற்றுவிக்க, தகுதி உடையவனாகிறான்.

# *ராஜஸ குணமாவது*, உலக விஷயத்தில் ஆசையையும், போர்களத்தில் தேவையான கோபம், பகை உணர்வு போன்றவைகளை வளர்க்க கூடியது; ஆகையால் க்ஷத்ரியன் நாட்டை பாதுகாக்க தகுதி உடையவனாகிறான்.

# *தாமஸ குணமாவது* விஷயங்களை அறிவதில் தெளிவு தேவையற்று, உடலினால் கடினமான செயல்களைச் செய்வதில் ஆர்வம் போன்றவைகளை வளர்க்க கூடியது. ஆகையால் வேளாளன் உடல் வலிமையினால் கடுமையாக உழைக்க தகுதி உடையவனாகிறான்.

# இந்த சரீரத்தில்,  ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்கள் பிணைந்து இருந்தாலும், அவரவர்கள் உட்கொள்ளும் ஆஹாரங்கள், அவர்களுக்குத் தேவையான குணங்களை வளர்க்கிறது. 

தமோ குணமும் ரஜோ குணமும் வளர்வதற்கு உதவும் ஆஹாரங்களை ஒரு ப்ராஹ்மணன் சாப்பிடும் போது, அவனது எண்ணங்களும் செயல்களும் சாஸ்த்திர கோட்பாட்டிலிருந்து விலகுகின்றன !

4. நம் முன்னோர்களால் செய்யப் பட்டு வந்த, ஸந்த்யாவந்தனம் போன்ற வைகளை,  சாஸ்த்திர விரோதமாக, கை விடும் அளவிற்கு, நம் குடும்பங்களில் காணும் மன மாற்றத்தை, உட் கொள்ளும் ஆஹாரமே உண்டாக்குகிறது  !

சாஸ்த்திர நம்பிக்கை இல்லாததற்கும், மனம் போன படி ஆஸ்திக்யத்துக்கு விளக்கமளிப்பதற்கும், பெருமளவில், *தாமஸ ஆஹாரமே* காரணம் ஆகும்.

இந்த தாமஸ ஆஹாரம் எது என்றால்,

# தளிகை பண்ண ஆஹாரத்தை *பல காலம் குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து உண்பது*.பால், தயிர், வெண்ணெய், நெய், ஊறுகாய், பக்ஷணம் போன்றவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து, அக்நி சம்பந்தத்தோடு ஆக்கப்பட்ட ஆஹாரங்கள், ஓர் இரவைத் தாண்டி உண்பது தாமஸ எண்ணங்களை வளர்க்கக் கூடியவை.

# *மற்றவரின் எச்சில் உணவு* (குடும்பத்தினராகவே இருந்தாலும்) தாமஸ எண்ணங்களை வளர்க்கக் கூடியவை.

ஆனால், தாமஸ ஆஹாரத்தை  பொதுவாகவே ஏற்க பழகி விட்டதால், ப்ராஹ்மண சமூகத்தில், சாஸ்த்திர விஹித அனுஷ்டானங்களான ஸந்த்யாவந்தனம், ஏகாதசி வ்ரதம், தர்ப்பணாதிகளில் ஸ்ரத்தை பலரிடம் அகன்று இருப்பதைக் காண்கிறோம்.

5.  ஸர்வேஸ்வரனான கண்ணனின் பகவத் கீதையில்,

*யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்  உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்*

என அருளினான்.

பழைய உணவு, சுவையை இழந்த உணவு, கெட்டுவிட்ட உணவு, மற்றவர்களின் எச்சில் உணவு, ஸர்வேஸ்வரனுக்கு அர்ப்பணிக்காத உணவு  இவைகளாகும் தாமஸ குணத்தை வளர்க்கும் ஆஹாரம்,
என்கிறான்.

தற்போது, க்ருஹங்களில் தாமஸ ஆஹாரமான, குளிர வைத்த பழைய ஆஹாரங்கள், பெருமளவில் உபயோகத்தில் உள்ளன ; எச்சில் என்கிற பதமே, இக்காலத்து ப்ராஹ்மண குழந்தைகள், அறிவதில்லை! 

ஒரே மேஜையை, ஒரே நேரத்தில்,  அனைவரும் உபயோகித்து, இடது கையாலும் வலது கையாலும், எச்சிலைப் பொருட்படுத்தாமல், அனைத்தையும் எடுத்து உண்ணும் பழக்கமே இதற்கு காரணம் ! 

மேலும், வெளியிலிருந்து பெறப்படும், தளிகை செய்யப்பட்ட ஆஹாரங்களில், பழையது மற்றும் எச்சில் பரிபூரணமாக நிறைந்திருக்கின்றன.

அதனால், க்ருஹஸ்த ஸ்த்ரீகள்,  குடும்பத்தில் ஸத்வ குணம், பெருக முயற்சிக்க வேண்டும் ; முடிந்த வரையில், பழைய உணவு மற்றும் எச்சிலை விலக்க வேண்டும் ; அவர்கள் *சாஸ்த்திரம் விதித்த கர்மங்களான ஸந்த்யாவந்தனம் போன்றவைகளை அனுஷ்டிக்க* புருஷர்களை வழி நடத்த வேண்டும். அதனால், குடும்பத்தில் அனைவரும் பகவத் ப்ரீதியை சம்பாதிக்க இயலும்

No comments:

Post a Comment