Wednesday, January 24, 2024

Mahabharatam in tamil 316

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-316
துரோண பர்வம்
….
கௌரவப்படையை முறியடித்த மூவர்
...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்துச் சென்றான்.(1) தன் உறுதிமிக்க வில்லைப் பற்றிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நாண்கயிறை இழுத்த அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துரோணரின் தேரை நோக்கி விரைந்தான்.(2) திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அவனைச் {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(3) ஆசான்களில் முதன்மையானவரான துரோணர் இப்படித் தாக்கப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், தீர்மானத்துடன் போரில் ஈடுபட்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரைக் காத்தனர்.(4) பிறகு, அந்த இரவில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட கடலெனும் இரு துருப்புகளும், சூறாவளியால் மூர்க்கமாகத் தாக்கப்படுபவையும், மிகவும் கலங்கடிக்கப்படும் உயிரினங்களுடன் கூடியவையுமான பயங்கரமான இரண்டு கடல்களைப் போலத் தெரிந்தன.(5)


அப்போது அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் துரோணரின் மார்பை விரைவாகத் துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(6) எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இருபத்தைந்து கணைகளால் எதிரியைத் துளைத்து, மற்றொரு பல்லத்தால் அவனது {திருஷ்டத்யும்னனின்} பிரகாசமிக்க வில்லையும் அறுத்தார்.(7) துரோணரால் பலமாகத் துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் வில்லை விரைவாக வைத்துவிட்டு, சினத்தால் தன் (கீழ்) உதட்டைக் கடித்தான்.(8) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்க மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(9)

பகைவீரர்களைக் கொல்பவனும், பெருமழகுடன் கூடியவனுமான அந்தப் போர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உறுதிமிக்க வில்லைத் தன் காதுவரை இழுத்து, துரோணரின் உயிரை எடுக்கவல்ல ஒரு பயங்கரக் கணையை ஏவினான்.(10) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் வலிமைமிக்க அந்த இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} இப்படி ஏவப்பட்ட அந்தக் கணையானது, உதயச் சூரியனைப் போல மொத்தப்படைக்கும் ஒளியூட்டியது.(11) அந்தப் பயங்கரக் கணையைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, "துரோணருக்குச் செழிப்புண்டாகட்டும் {மங்கலம் உண்டாகட்டும்}" என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(12) எனினும் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கரத்தின் பெரும் நளினத்தை வெளிக்காட்டியபடி, ஆசானின் {துரோணரின்} தேரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கணையைப் பனிரெண்டு துண்டுகளாக வெட்டினான்.(13) திருஷ்டத்யும்னனின் அந்தக் கணையானது, ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படிப் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, நஞ்சற்ற பாம்பொன்றைப் போலப் பூமியில் வேகமாக விழுந்தது.(14)

அந்தப் போரில், நேரான தன் கணைகளால் திருஷ்டத்யும்னனின் கணைகளை வெட்டிய கர்ணன், பிறகு, கூரிய கணைகள் பலவற்றால் திருஷ்டத்யும்னனையும் துளைத்தான்.(15) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஐந்தாலும், துரோணர் ஐந்தாலும், சல்லியன் ஒன்பதாலும், துச்சாசனன் மூன்றாலும் அவனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர்.(16) துரியோதனன் இருபது கணைகளாலும், சகுனி ஐந்தாலும் அவனை {திருதஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும், அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} வேகமாகத் துளைத்தனர்.(17) இப்படியே அவன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரைக் காக்க முயன்ற அந்த ஏழுவீரர்களாலும் அந்தப் போரில் துளைக்கப்பட்டான். எனினும் அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(18) உண்மையில் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் துரோணர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் உமது மகன் {துரியோதனன்} ஆகியோரை வேகமாகத் துளைத்தான்.(19) அந்த வில்லாளியால் {திருஷ்டத்யும்னனால்} இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து போரிட்டு, உரக்க முழங்கியபடியே மீண்டும் அம்மோதலில் திருஷ்டத்யும்னனைத் துளைத்தனர்.(20)

அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துருமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த கணை ஒன்றால் அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(21) அந்த இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய அவன் {துருமசேனன்}, "நில், நிற்பாயாக" என்றான். பிறகு திருஷ்டத்யும்னன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், ஏவப்படுபவரின் உயிரையே எடுக்கவல்லவையுமான மூன்று நேரான கணைகளால் அம்மோதலில் துருமசேனனைப் பதிலுக்குத் துளைத்தான்.(22)  பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரகாசமான தங்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட துருமசேனனின் தலையை மற்றொரு பல்லத்தால் பின்னவனின் {துருமசேனனின்} உடலில் இருந்து வெட்டினான்.(23) (சினத்தால்) (கீழ்) உதடு கடிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தத் தலையானது, பலமான காற்றின் செயல்பாட்டால், குலையில் இருந்து உதிர்ந்து விழும் பழுத்த பனம்பழத்தைப் போலத் தரையில் விழுந்தது.(24)

மீண்டும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் துளைத்த அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, போர் முறைகள் அனைத்தையும் அறிந்த போர்வீரனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} வில்லைச் சில பல்லங்களால் அறுத்தான்.(25) கடுஞ்சிங்கம் ஒன்று தன் வால் அறுபட்டத்தைப் பொறுத்துக் கொள்ளாததைப் போல, கர்ணனால் தன் வில் அறுபட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(26) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், சினத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டு, வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைக் கணை மேகங்களால் மறைத்தான்.(27) சினத்தால் தூண்டப்பட்ட கர்ணனைக் கண்டவர்களும், தேர்வீரர்களில் காளையருமான அந்த ஆறு வீரர்கள், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கொல்லும் விருப்பத்தால் விரைவாக அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(28) உமது தரப்பின் முதன்மையான ஆறு தேர்வீரர்களுக்கு முன்பு நிற்கும் பின்னவனை {திருஷ்டத்யும்னனைக்} கண்ட துருப்புகள் அனைத்தும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவன் காலனின் கோரப் பற்களுக்கிடையில் விழுந்துவிட்டதாகவே கருதினர்.(29)

அதே வேளையில் தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சாத்யகி, தன் கணைகளை இறைத்தபடியே வீரத் திருஷ்டத்யும்னன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.(30) சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத போர்வீரன் வருவதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவனைப் பத்து கணைகளால் துளைத்தான்.(31) பிறகு சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, அவனிடம் {கர்ணனிடம்}, "ஓடாமல் என் முன்னே நிற்பாயாக" என்றான்.(32) அப்போது வலிமைமிக்கச் சாத்யகிக்கும், வெல்லப்பட முடியாத கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) பலிக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததற்கு ஒப்பாக இருந்தது.(33) க்ஷத்திரியர்களில் காளையான அந்தச் சாத்யகி, தன் தேரின் சடசடப்பொலியால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டே, தாமரைக் கண் கொண்ட கர்ணனை (பல கணைகளால்) துளைத்தான்.(34)

அந்த வலிமைமிக்கச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாணொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சாத்யகியோடு போரிட்டுக் கொண்டிருந்தான்.(35) உண்மையில் கர்ணன், நீண்டவை {நாராசங்கள்}, முள்பதித்தவை {கர்ணிகள்}, கூர்முனை கொண்டவை {விபாண்டங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்ஸதந்தங்கள்}, கத்தி போன்ற தலை கொண்டவை {க்ஷுரங்கள்} போன்ற கணைகளாலும், இன்னும் பிற நூற்றுக்கணக்கான கணைகளாலும் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(36) அதே போல விருஷ்ணி குலத்தில் முதன்மையான யுயுதானனும், அந்தப் போரில் கர்ணனைத் தன் கணைகளால் மறைத்தான். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் போர் சமமாகவே நடந்தது.(37) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்ட உமது மகன்கள் அனைவரும் சாத்யகியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் துளைத்தனர்.(38)

அவர்கள் அனைவரின் ஆயுதங்களையும், கர்ணனின் ஆயுதங்களையும் தடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனனை {கர்ணனின் மகனை} வேகமாக நடுமார்பில் துளைத்தான்.(39) அந்தக் கணையால் துளைக்கப்பட்டவனும், பெரும் காந்தி கொண்டவனுமான வீர விருஷசேனன், தன் வில்லை விட்டுவிட்டு வேகமாகத் தன் தேரில் விழுந்தான்.(40) வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன் கொல்லப்பட்டதாக நம்பிய கர்ணன், தன் மகன் இறந்த துயரால் எரிந்து, பெரும் பலத்துடன் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான்.(41) இப்படிக் கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் யுயுதானன் {சாத்யகி}, பெரும் வேகத்துடன், பல கணைகளால் கர்ணனை மீண்டும் மீண்டும் துளைத்தான்.(42) மீண்டும் கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை ஐந்தாலும் துளைத்த அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தந்தை, மகன் ஆகிய இருவரின் தோலுறைகளையும், விற்களையும் அறுத்தான்.(43) பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும், எதிரிகளை அச்சத்தால் தூண்டவல்ல வேறு இரண்டு விற்களுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் யுயுதானனை {சாத்யகியைத்} துளைக்கத் தொடங்கினர்.(44)

வீரர்களுக்கு இப்படி அழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து ஒலிகளையும் விஞ்சும்படி காண்டீவத்தின் ஒலி கேட்கப்பட்டது.(45) அர்ஜுனனுடைய தேரின் சடசடப்பொலியையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) "கௌரவ வீரப் போராளிகளில் முதன்மையானோரையும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரையும், நமது மொத்த படையையும் கொன்றபடியே அர்ஜுனன் தன் வில்லில் உரத்த நாணொலியை எழுப்புகிறான்.(47) இடியின் முழக்கத்திற்கு ஒப்பான அவனது {அர்ஜுனனின்} தேரின் சடசடப்பொலியும் கேட்கிறது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனக்குத் தகுந்த சாதனைகளை அடைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(48) பிருதையின் இந்த மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது பெரிய படையைக் கலங்கடித்துவிடுவான். நம் துருப்புகளில் பல ஏற்கனவே பிளந்து கொண்டிருக்கின்றன. எவரும் போரில் நிற்கவில்லை {நிலைக்க முடியவில்லை}.(49) உண்மையில், காற்றால் கலைக்கப்படும் மேகத்திரள்களைப் போல நமது படையும் கலைக்கப்படுகிறது. அர்ஜுனனோடு மோதும் நமது படை, கடலில் படகு பிளப்பதைப் போலப் பிளக்கிறது.(50)

ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் விளைவால் போர்க்களத்தில் இருந்து ஓடவோ, கீழே விழவோ செய்யும் முதன்மையான வீரர்களின் உரத்த ஓலங்கள் கேட்கப்படுகின்றன.(51) ஓ! தேர்வீரர்களில் புலியே {துரியோதனா}, ஆகாயத்தில் கேட்கப்படும் இடி முழக்கத்தைப் போல, இந்த நள்ளிரவில், அர்ஜுனனின் தேர் அருகில் துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியைக் கேட்பாயாக.(52) அர்ஜுனனின் தேர் அருகே (பீடிக்கப்படும் போராளிகளால்) எழுப்பப்படும் உரத்த ஓலங்களையும், மகத்தான சிங்க முழக்கங்களையும், பல்வேறு பிற ஒலிகளையும் கேட்பாயாக.(53)

எனினும் இங்கே, நம் மத்தியில் சாத்வத குலத்தில் முதன்மையான இந்தச் சாத்யகி இருக்கிறான். இந்த நமது நோக்குப் பொருளை {சாத்யகியைத்} தாக்கி வீழ்த்த முடியுமேயானால், நம் எதிரிகளை அனைவரையும் நம்மால் வெல்ல முடியும்.(54) அதேபோலப் பாஞ்சால மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரிடம் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் {திருஷ்டத்யும்னன்}, தேர்வீரர்களில் முதன்மையான பல வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கிறான்.(55) நம்மால் சாத்யகியையும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனையும் கொல்ல முடிந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, வெற்றி நமதே என்பதில் ஐயமிருக்காது.(56)

சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்த விருஷ்ணி குலமகனையும் {சாத்யகியையும்}, இந்தப் பிருஷதன் மகனையும் {திருஷ்டத்யும்னனையும்} சூழ்ந்து கொண்டு, வீரர்களான இவ்விருரையும் நாம் கொல்ல முயல்வோம் [1].(57) சாத்யகி, குருக்களில் காளையர் பலருடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து, ஓ! பாரதா {துரியோதனா}, சவ்யசச்சின் {அர்ஜுனன்}, நம் முன் துரோணரின் இந்தப் படைப்பிரிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.(58) பலரால் சூழப்பட்ட சாத்யகியைப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்க முடியாதவாறு, அங்கே {அர்ஜுனன் வரும் வழியில்} நமது முதன்மையான தேர்வீரர்களைப் பெருமளவில் அனுப்ப வேண்டும்.(59) மதுகுலத்தின் சாத்யகியை விரைவில் யமனுலகு அனுப்ப, இந்தப் பெரும் வீரர்கள், பெரும் பலத்துடன் கணை மேகங்களை ஏவட்டும்" என்றான் கர்ணன்.(60)

[1] வேறொரு பதிப்பில், "அபிமன்யுவைச் சூழ்ந்தது போலச் சூரர்களும், மகாரதர்களுமான அந்த விருஷ்ணி வீரனையும், பார்ஷதனையும் சூழ்ந்து கொண்டு கொல்வதற்கு நாம் முயற்சி செய்வோம்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "முறையே விருஷ்ணி மற்றும் பிருஷத குலங்களின் வழித்தோன்றல்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான இவ்விரு வீரர்களையும், சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே, கூரான ஆயுதங்களால் துளைத்து அவர்களைக் கொல்ல முயல்வோம்" என்றிருக்கிறது.

இதையே கர்ணனின் கருத்தாக உறுதிசெய்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, விஷ்ணுவிடம் பேசும் இந்திரனைப் போல அந்தப் போரில் சுபலனின் மகனிடம் {சகனியிடம்},(61) "பின்வாங்காத பத்தாயிரம் யானைகள் மற்றும் பத்தாயிரம் தேர்களுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வீராக.(62) துச்சாசனன், துர்விசாஹன், சுபாகு, துஷ்பிரதர்ஷணன் ஆகியோர் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையினர் சூழ உம்மைப் பின்தொடர்வார்கள்.(63) ஓ! அம்மானே {மாமனான சகுனியே}, பெரும் வில்லாளிகளான இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்களையும்} மற்றும் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் மற்றும் பாண்டுவின் மகனான பீமனையும் கொல்வீராக.(64) தேவர்களின் வெற்றி இந்திரனைச் சார்ந்திருப்பதைப் போல எனது வெற்றி உம்மையே சார்ந்திருக்கிறது. ஓ! அம்மானே, பாவகனின் {அக்னியின்} மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே நீர் குந்தியின் மகன்களைக் கொல்வீராக" என்றான் {துரியோதனன்}.(65)

இப்படிச் சொல்லி உமது மகனால் தூண்டப்பட்ட சகுனி, கவசம் தரித்துக் கொண்டு, பெரும்படையாலும், உமது மகன்களாலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டுவின் மகன்களை எரிப்பதற்காகப் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். அப்போது உமது படைக்கும், எதிரிக்கும் இடையில் ஒரு பெரும்போர் தொடங்கியது.(66,67) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) சுபலனின் மகன் {சகுனி} பாண்டவர்களை எதிர்த்துச் சென்ற போது, சூதனின் மகன் {கர்ணன்} ஒரு பெரும்படையின் துணையுடன், பல நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே சாத்யகியை எதிர்த்து விரைவாகச் சென்றான். உண்மையில், உமது போர் வீரர்கள் ஒன்றாகக்கூடி சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(68,69) அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, அந்த நள்ளிரவில் திருஷ்டத்யும்னனின் தேரை எதிர்த்துச் சென்று, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துணிவுமிக்கத் திருஷ்டத்யும்னனுடனும், பாஞ்சாலர்களுடனும் அற்புதமானதும், கடுமையானதுமான ஒரு போரைச் செய்தார்" {என்றான் சஞ்சயன்}.(70)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, எளிதில் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களும், உமது படையைச் சேர்ந்தவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும், ({சாத்யகியின்} சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாமல் யுயுதானனின் {சாத்யகியின்} தேரை எதிர்த்து கோபத்துடன் சென்றனர்.(1) அவர்கள், {ஆயுதங்களால்} நன்கு தரிக்கப்பட்டவையும், தங்கம் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் ஏறி, குதிரைப் படை மற்றும் யானைப்படை ஆகியவற்றின் துணையுடன் சென்று அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(2) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த வீரனை {சாத்யகியை} அறைகூவியழைத்து சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(3) மதுகுலத்தோனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பிய அந்தப் பெரும் வீரர்கள், வெல்லப்படமுடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் மீது தங்கள் கூர்முனை கணைகளைப் பொழிந்தனர்.(4)


தன்னை நோக்கி இப்படி வேகமாக வந்து கொண்டிருந்த அவர்களைக் கண்டவனும், எதிரிப்படைகளைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} பல கணைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஏவினான்.(5) வீரனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகி, நேரான தன் கடுங்கணைகளால் பலரின் தலைகளைத் துண்டித்தான்.(6) மேலும் அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பல யானைகளின் துதிக்கைகளையும், பல குதிரைகளின் கழுத்துகளையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்கள் பலரின் கரங்கள் ஆகியவற்றையும் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டினான்.(7) விழுந்து கிடந்த வெண்சாமரங்கள் மற்றும் வெண்குடைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர்க்களம், ஓ! பாரதரே, கிட்டத்தட்ட நிறைந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களுடன் கூடிய ஆகாயத்தைப் போல விளங்கியது.(8) யுயுதானனால் {சாத்யகியால்} போரில் இப்படிக் கொல்லப்பட்ட படையின் ஓலமானது, {நரகத்தில்) பிசாசுகளின் அலறலைப் போலப் பேரொலியாக இருந்தது.(9) அந்த ஆரவாரப் பேரொலியால் பூமி நிறைந்ததால், அந்த இரவானது மேலும் கொடூரமானதாகவும், மேலும் பயங்கரமானதாகவும் ஆனது.(10)

தன் படையானது, யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, பிளக்கப்படுவதைக் கண்டும், அந்த நள்ளிரவில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும்,(11) வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, தன் தேரோட்டியிடம் மீண்டும் மீண்டும், "இந்த ஆரவாரம் எங்கிருந்து வருகிறதோ அந்த இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக" என்றான்.(12) பிறகு, உறுதிமிக்க வில்லாளியும், களைப்பினை அறியாதவனும், கரங்களில் பெரும் நளினம் கொண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மன்னன் துரியோதனன், யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்.(13) மாதவன் {சாத்யகி}, தன் வில்லை முழுமையாக வளைத்து, குருதி குடிக்கும் கணைகள் பனிரெண்டால் துரியோதனனைத் துளைத்தான்.(14) இப்படி யுயுதானனின் கணைகளால் முதலில் பீடிக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பத்துக் கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(15) அதே வேளையில் பாஞ்சாலர்களுக்கும், உமது துருப்புகள் அனைத்திற்கும் இடையில் நடந்த போர் மிக அற்புமாகக் காட்சியளித்தது.(16)

அப்போது, சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனை} எண்பது {80} கணைகளால் மார்பில் துளைத்தான்.(17) பிறகு அவன் வேறு பிற கணைகளால் துரியோதனனின் குதிரைகளை யமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {சாத்யகி}, விரைவாகத் தனது எதிராளியின் {துரியோதனனின்} சாரதியைத் தேரில் இருந்து வீழ்த்தினான்.(18) உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டே சாத்யகியின் தேரை நோக்கி பல கூரிய கணைகளை ஏவினான்.(19) எனினும், பெருங்கர நளினத்தை வெளிப்படுத்திய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனால் ஏவப்பட்ட அந்த ஐம்பது கணைகளையும் வெட்டினான்.(20) பிறகு மாதவன் {சாத்யகி}, அம்மோதலில் திடீரென ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} உறுதிமிக்க வில்லை, அதன் கைப்பிடியில் அறுத்தான்.(21) தன் தேர், வில் ஆகியவற்றை இழந்தவனும், பலமிக்க மனிதர்களின் ஆட்சியாளனுமான அவன் {துரியோதனன்}, கிருதவர்மனின் பிரகாசமிக்கத் தேரில் விரைவாக ஏறினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பின்வாங்கியதும்,  அந்த நள்ளிரவில் சிநியின் பேரன் {சாத்யகி}, உமது படையைப் பீடித்து முறியடித்தான்.(23)

அதே வேளையில் சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களாலும், பல்லாயிரம் யானைகளாலும், பல்லாயிரம் குதிரைகளாலும் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு, தீர்மானத்துடன் போரிடத் தொடங்கினான். அவர்களில் பலர் அர்ஜுனனை நோக்கி பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களை ஏவினர்.(24,25) உண்மையில் அந்த க்ஷத்திரியர்கள் நிச்சயம் மரணமடைய {மரணமடைவோம் என்ற தீர்மானத்தோடே} அர்ஜுனனோடு போரிட்டனர். எனினும் சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தடுத்து, இறுதியில் அந்த எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தான். சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளைக் கொல்பவனான அந்த அர்ஜுனனை இருபது கணைகளால ஆழத் துளைத்தான். மேலும் அவன் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பெருந்தேரின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(26-28) பிறகு அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் இருபது கணைகளால் சகுனியைத் துளைத்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வில்லாளிகளில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(29) தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் சக்தியைதக் கொண்ட அற்புதக் கணைகளால் உமது படையின் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்ட கணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான (இறந்தோரின்) உடல்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, மலர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) உண்மையில், கிரீடங்களாலும், அழகிய மூக்குகளாலும், அழகிய காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், சினத்தால் (கீழ்) உதடுகளைக் கடித்துக் கொண்டிருந்தவையும், கண்களை அகல விரித்தவையும், சூடாமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், உயிரோடு இருந்தபோது, ரத்தினங்களால் மகுடம் சூட்டப்பட்டவையும், இனிய வார்த்தைகளைப் பேசியவையுமான க்ஷத்திரியர்களின் தலைகளால் விரவிக் கிடந்த அந்தப் பூமியானது, சம்பக {சம்பங்கி} மலர்கள் பரவிய குன்றுகளால் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(32,33) அந்தக் கடும் சாதனையை அடைந்து, ஐந்து நேரான கணைகளால் சகுனியை மீண்டும் துளைத்தவனும், கடும் ஆற்றல் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் உலூகனை மீண்டும் ஒருகணையால் தாக்கினான்.(34) அவனது {உலூகனது} தந்தையான சுபலனின் மகன் {சகுனியின்} முன்னிலையிலேயே இப்படி உலூகனைத் துளைத்த அர்ஜுனன், சிங்க முழக்கம் செய்து, அதனால் {அவ்வொலியால்} உலகத்தையே நிறைத்தான். பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, சகுனியின் வில்லை அறுத்தான்.(36)

பிறகு அவன் {அர்ஜுனன்}, அவனது {சகுனியின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பினான். பிறகு அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து குதித்து,(37) விரைவாகச் சென்று {தன் மகனான} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அந்தத் தந்தையும், மகனும் ஒரே தேரில் சென்று,(38) மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அந்த இரு போர்வீரர்களையும் துளைத்து,(39) பீடித்து உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான். காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்படும் வலிமைமிக்க மேகத் திரள் ஒன்றைப் போல,(40) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படை அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்பட்டது. உண்மையில் அந்தப் படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் இப்படிக் கொல்லப்பட்டு,(41) (அவர்களது) தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. தாங்கள் ஏறிச்சென்ற விலங்குகளைப் பலர் கைவிட்டனர், பிறரோ, தங்கள் விலங்குகளை அதிக வேகத்தில் தூண்டி,(42) கடுமையான அந்த இருண்ட நேரத்தில், அச்சத்தால் தூண்டப்பட்டுப் போரில் இருந்து பின்வாங்கினர். இப்படி உமது போர்வீர்ரர்களை வென்ற வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} மகிழ்ச்சிகரமாகத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(43)

திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்ரரே}, மூன்று கணைகளால் துரோணரைத் துளைத்து, கூரிய கணை ஒன்றால் பின்னவருடைய வில்லின் நாணையும் விரைவாக அறுத்தான்.(44) க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான அந்த வீரத் துரோணர், அந்த வில்லைப் பூமியில் தூக்கி வீசிவிட்டு, பெரும் உறுதியும், பலமும் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார்.(45) திருஷ்டத்யும்னனை ஐந்து கணைகளால் துளைத்த துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தார்.(46) தன் கணைகளால் துரோணரைத் தடுத்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், அசுரப் படையை அழிக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல அந்தக் கௌரவப் படையை அழிக்கத் தொடங்கினான்.(47)

உமது மகனின் {துரியோதனின்} படை கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குருதியையே ஓடையாகக் கொண்ட ஒரு பயங்கர ஆறு அங்கே பாயத் தொடங்கியது.(48) மேலும் அது, இரண்டு படைகளுக்கும் இடையில் மனிதர்களையும், குதிரைகளையும், யானைகளையும் சுமந்து சென்றபடி ஓடிக் கொண்டிருந்தது.(49) அது {அந்த ஆறு}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதிகளை நோக்கிப் பாயும் வைதரணீக்கு ஒப்பானதாக இருந்தது. உமது படையைக் கலங்கடித்து அதை முறியடித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வீரத் திருஷ்டத்யும்னன், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போலச் சுடர்விட்டெரிந்தான்.(50) பிறகு திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் தங்கள் பெரிய சங்குகளை முழக்கினர், அதே போலவே, இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), யுயுதானனும் {சாத்யகியும்}, பாண்டுவின் மகனான விருகோதரனும் {பீமனும்} {தங்கள் சங்குகளை} முழக்கினார்கள்.(51) உமது தரப்பைச் சேர்ந்தவர்களும், பெரும் சக்தியையுடையவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களை வென்ற கடும் போர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, கர்ணன், வீரத் துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் சிங்க முழக்கம் செய்தனர்" {என்றான் சஞ்சயன்}.(52,53)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் கொல்லப்படும் தன் படையானது சிதறடிக்கப்படுவதைக் கண்டவனும், சொற்களை நன்கு அறிந்தவனுமான {பேசத்தெரிந்தவனுமான} உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடமும், போரில் வெல்வோர் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரிடமும் விரைவாகச் சென்று, கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1,2) "சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்டு சினம் கொண்ட உங்கள் இருவராலேயே இந்தப் போர் {இந்த இரவுப் போர்} தொடங்கப்பட்டது.(3) உங்கள் இருவருக்கும் பாண்டவப்படைகளை வெல்லும் சக்தி முழுமையாக இருந்தும், அந்தப் படைகளால் என் படைகள் கொல்லப்படுகையில் நீங்கள் எந்த அக்கறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.(4) நீங்கள் இருவரும் இப்போது என்னைக் கைவிடுவதாக இருந்தால், அதைத் தொடக்கத்திலே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். கௌரவங்களை அளிப்பவர்களே, "நாங்கள் இருவரும் போரில் பாண்டு மகன்களை வெல்வோம்" என்ற இந்த வார்த்தைகளையே அப்போது நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். இந்த உங்கள் வார்த்தைகளைக் கேட்டே நான் இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தேன். (நீங்கள் வேறு மாதிரியாக என்னிடம் சொல்லியிருந்தால்), வீரப்போராளிகளை இந்த அளவுக்கு அழிக்கவல்லவையான பார்த்தர்களுடனான இந்தப் பகைமைகளை நான் ஒரு போதும் தூண்டியிருக்க மாட்டேன்.(5,6) நான் உங்கள் இருவராலும் கைவிடத் தகாதவன் என்றால், மனிதர்களில் காளையரே, பெரும் ஆற்றலைக் கொண்ட வீரர்களே, நீங்கள் உங்கள் உண்மையான அளவு ஆற்றலுடன் போரிடுவீராக" என்றான் {துரியோதனன்}.(7)


உமது மகனின் {துரியோதனனின்} வார்த்தைக் குறடால் இப்படித் துளைக்கப்பட்ட அந்த வீரர்கள் இருவரும் {துரோணரும், கர்ணனும்}, தடிகளால் விரட்டப்பட்ட இரு பாம்புகளைப் போல மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(8) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையானவர்களுமான அவ்விருவரும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} தலைமை தாங்கப்பட்ட பார்த்தர்களையும், இன்னும் பிறரையும் எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போலப் தங்கள் துருப்புகள் அனைத்துடன் ஒன்றுசேர்ந்த பார்த்தர்களும், தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்த அந்த இரு வீரர்களையும் எதிர்த்து சென்றனர்.(10)

அப்போது, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் வில்லாளியுமான துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, பத்து கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையை {சாத்யகியத்} துளைத்தார்.(11) கர்ணன் அவனைப் {சாத்யகியைப்} பத்து கணைகளாலும், உமது மகன் {துரியோதனன்} ஏழாலும், விருஷசேனன் பத்தாலும், சுபலனின் மகன் {சகுனி} ஏழாலும் {சாத்யகியைத்} துளைத்தனர்.(12) சிநியின் பேரனை {சாத்யகியைச்} சுற்றியிருந்த கௌரவர்களின் ஊடுருவப்பட முடியாத சுவரில், இவர்களும் நிலைகொண்டு அவனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் போரில் பாண்டவப்படையைக் கொன்றும் வரும் துரோணரைக் கண்ட சோமகர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவரைக் கணை மாரியால் துளைத்தனர்.(13) அப்போது துரோணர், இருளைத் தன் கதிர்களால் அழிக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் உயிரை எடுக்கத் தொடங்கினார்.(14)

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்படும்போது ஒருவரையொருவர் அழைத்த பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஆரவாரத்தை நாங்கள் கேட்டோம். சிலர் தங்கள் மகன்களைக் கைவிட்டும், சிலர் தந்தைகளை, சிலர் சகோதரர்களை, சில மாமன்களை, சிலர் தங்கள் சகோதரியின் மகன்களை, சிலர் நண்பர்களை, சிலர் தங்கள் உற்றார் உறவினரைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடினர்.(15-17) மேலும் சிலர் தங்கள் உணர்வுகளை இழந்து துரோணரை எதிர்த்து ஓடினர். உண்மையில், அப்போது பாண்டவப்படையில் வேறு உலகத்திற்கு அனுப்பப்பட்ட போராளிகள் பலராக இருந்தனர்.(18) அந்தச் சிறப்புமிக்க வீரரால் {துரோணரால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாண்டவப் படையினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரவில் பீமசேனன், அர்ஜுனன், கிருஷ்ணன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதிஷ்டிரன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடர்மிக்கத் தங்கள் தீப்பந்தங்களைச் சுற்றிலும் எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர்.(19,20)

உலகம் இருளில் மூழ்கியிருந்ததால், எதையும் காண முடியவில்லை. கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்த விளக்குகளின் காரணமாக எதிரி ஓடுவதை உறுதிசெய்து கொள்ள முடிந்தது.(21) எண்ணற்ற கணைகளை இறைத்தபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும், ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22) கொல்லப்பட்டு முறியடிக்கப்பட்ட பாஞ்சாலர்களைக் கண்டு உற்சாகத்தை இழந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(23) "பாஞ்சாலர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், கணைகள் பலவற்றை ஏவியபடியே பெரும் வில்லாளிகளான துரோணரையும், கர்ணனையும் எதிர்த்து சென்றனர்.(24) இந்த நமது பெரும்படை (அவர்களின்) கணைமாரியால் பிளக்கப்பட்டு முறியடிக்கப்படுகிறது. அவர்கள் ஓடுவது தடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அவர்களை மீண்டும் அணிதிரட்டுவது இயலாததாகும்" என்றான் {கிருஷ்ணன்}.(25)

அந்தப் படை ஓடுவதைக் கண்ட கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் அந்தத் துருப்புகளிடம், "அச்சத்தால் ஓடாதீர். பாண்டவ வீரர்களே உங்கள் அச்சங்களை விலக்குங்கள்.(26) படைகள் அனைத்தையும் நல்ல முறையில் அணிவகுத்துக் கொண்டு, உயர்த்திய ஆயுதங்களுடன் துரோணரையும், சூதனின் மகனையும் {கர்ணனையும்} எதிர்த்து நிற்பதற்காக நாங்கள் இருவரும் இப்போது செல்கிறோம்" என்றனர்.(27) அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, முன்னேறிச் செல்லும் விருகோதரனை {பீமனைக்} கண்டு, மீண்டும் பாண்டுவின் மகனான அர்ஜுனனிடம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வது போல இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(28) "அதோ, போரில் மகிழ்ச்சி கொள்ளும் பீமர், சோமகர்கள் மற்றும் பாண்டவர்களால் சூழபட்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரையும் கர்ணனையும் எதிர்த்து வருகிறார்.(29) உன் துருப்புகள் அனைத்தும் உறுதிகொள்ளும் பொருட்டு, ஓ !பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவராலும் {பீமராலும்}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு இப்போது போரிடுவாயாக" என்றான் {கிருஷ்ணன்} [1].30 அப்போது மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மதுகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், துரோணரையும், கர்ணனையும் அடைந்து, போரின் முன்னணியில் தங்கள் நிலையை எடுத்துக் கொண்டனர்."(31)

[1] "கல்கத்தா பதிப்பில் 30வது சுலோகத்தின் இரண்டாவது வரி வேறுமாதிரியாக உரைக்கப்பட்டிருக்கிறது. {இங்கு பம்பாய் பதிப்பையே கையாண்டிருக்கிறேன்}. அந்த இரண்டு அச்சுபதிப்புகளில் உள்ள சில வேறுபாடுகளின் விளைவாக, கல்கத்தா உரையின் 30வது சுலோகம் பாம்பாய் உரையில் 32வது சுலோகமாக உள்ளது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில், "பாண்டு நந்தன, எல்லாச் சைனிகளுக்கும் தேறுதலுண்டாகும்பொருட்டு இந்தப் பீமனோடும், மகாரதர்களான பாஞ்சாலர்களோடும் சேர்ந்து கொண்டு யுத்தம் செய்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் 30வது சுலோகம், "உன் துருப்புகள் உறுதியடையும்பொருட்டு, ஓ பாண்டுவை மகிழச் செய்பவனே {அர்ஜுனா}, இவர்களாலும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்களாலும் ஆதரிக்கப்பட்டுப் போரிடச் செல்வாயாக" என்று இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அப்போது, யுதிஷ்டிரனின் அந்தப் பரந்த படையானது, போரில் துரோணரும், கர்ணனும் எந்த இடத்தில் தங்கள் எதிரிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தனரோ அங்கே மீண்டும் போரிடுவதற்காகத் திரும்பியது.(32) சந்திரன் உதிக்கும் வேளையில் பொங்கும் இரு கடல்களுக்கிடையில் நடப்பதைப் போல அந்த நள்ளிரவில் ஒரு கடும் மோதல் நடந்தது.(33) பிறகு உமது படையின் போர்வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த சுடர்மிக்க விளக்குகளை எறிந்துவிட்டு, அச்சமற்ற வகையில் வெறிகொண்டு பாண்டவர்களுடன் போரிட்டனர்.(34) இருட்டாலும், புழுதியாலும் உலகம் மறைக்கப்பட்டிருந்த அந்தப் பயங்கர இரவில், போராளிகள், தாங்கள் சொன்ன பெயர்களால் வழிநடத்தப்பட்டே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(35) போரிடும் மன்னர்களால் சொல்லப்பட்ட பெயர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு சுயம்வரத்தில் நடப்பதைப் போலவே கேட்கப்பட்டன.(36)

திடீரெனப் போர்க்களமெங்கும் அமைதி பரவி, அஃது ஒருக்கணம் நீடித்தது. பிறகு வென்ற, வெல்லப்பட்ட கோபக்கார போராளிகளால் உண்டாக்கப்பட்ட உரத்த ஆரவாரம் மீண்டும் கேட்டது.(37) எங்கே சுடர்மிக்க விளக்குகள் தென்பட்டனவோ, ஓ! குருக்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே (சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும்) பூச்சிகளைப் போல அந்த வீரர்கள் விரைந்தனர்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களைச் சுற்றிலும் இரவின் இருள் அடர்த்தியடைந்திருந்தது" {என்றான் சஞ்சயன்}.(39)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான கர்ணன், போரில் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கண்டு, முக்கிய அங்கங்களுக்குள் ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான்.(1) அந்தப் பெரும்போரில் திருஷ்டத்யும்னனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் கர்ணனை வேகமாகத் துளைத்து, அவனிடம், "நில், நிற்பாயாக" என்றான்.(2) அந்தப் பயங்கரப்போரில் ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்று முழுதாக வளைக்கப்பட்ட தங்கள் விற்களில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் மீண்டும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(3) அப்போது அந்தப் போரில் கர்ணன், பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(4) பிறகு அவன் {கர்ணன்}, தன் முதன்மையான எதிரியின் வில்லைக் கூரிய கணைகளால் அறுத்து, மேலும் ஒரு பல்லத்தால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியைத் தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(5)


தேர், குதிரைகள் ஆகியவற்றையும் சாரதியையும் இழந்த வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்தான்.(6) கர்ணனின் நேரான கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டு வந்தாலும், கர்ணனை அணுகிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பின்னவனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) படைகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பிறகு, வேகமாகத் திரும்பி தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்தத் தேரில் ஏறி, கர்ணனை நோக்கிச் செல்லவே விரும்பினான்.(8) எனினும், தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்) அவனை {திருஷ்டத்யும்னனை} விலகிச் செல்லச் செய்தான் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்த இடம் முற்றிலும் வேறு விதமாக வர்ணிக்கப்படுகிறது. அது பின்வருமாறு: "ரதத்தையும், குதிரைகளையும், சாரதியையும் இழந்த திருஷ்டத்யும்னனோ கோரமான பரிகாயுதத்தைக் கையிலெடுத்துக் கர்ணனுடைய குதிரைகளை அடித்தான். அந்தக் கர்ணனாலே சர்ப்பங்களுக்கொப்பான அனேக அம்புகளால் அடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், பிறகு யுதிஷ்டிரருடைய சேனையை நோக்கிக் கால்களாலேயே நடந்து சென்றான். ஐயா! திருஷ்டத்யும்னன் தர்மபுத்திரராலே தடுக்கப்படும் கர்ணனை எதிர்த்துச் செல்ல விரும்பி ஸஹதேவனுடைய ரதத்தின் மீது ஏறினான்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

அப்போது, பெரும் சக்தி கொண்ட கர்ணன், தன் சிங்கமுழக்கங்களுடன் கலந்த உரத்த நாணொலியைத் தன் வில்லில் எழுப்பி, பெரும் சக்தியுடன் தன் சங்கையும் முழக்கினான். பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} போரில் வெல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான(9,10) பாஞ்சாலர்களும், சோமகர்களும், சினத்தால் தூண்டப்பட்டு, அனைத்து வகை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, மரணத்தையே தங்கள் இலட்சியமாகக் கொண்டு, கர்ணனைக் கொல்லும் விருப்பத்தில் அவனை நோக்கிச் சென்றனர். அதே வேளையில், கர்ணனின் சாரதியானவன், சங்கு போல வெண்மையாக இருந்தவையும், பெரும் வேகம் கொண்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நல்ல பலம்கொண்டவையுமான வேறு பிற குதிரைகளைத் தன் தலைவனின் {கர்ணனின்} தேரில் பூட்டினான்.(11,12) துல்லியமான குறியைக் கொண்ட கர்ணன், வீரத்துடன் போராடி, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பாஞ்சாலர்களைத் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாஞ்சாலப் படையானது, சிங்கத்தால் அச்சமடைந்த பெண் மானைப் போல, அச்சத்துடன் தப்பி ஓடியது.(13,14)

குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்து விழுவது அங்கே காணப்பட்டது, யானைப் பாகர்கள் தங்கள் யானைகளில் இருந்தும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும் சுற்றிலும் விழுந்து கொண்டிருந்தனர். அந்தப் பயங்கரப் போரில் கர்ணன், ஓடிக் கொண்டிருக்கும் போராளிகளின் கரங்கள் மற்றும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சிரங்கள் ஆகியவற்றைத் தன் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், அல்லது குதிரைகளின் முதுகுகள், அல்லது பூமியில் இருந்த பிறரின் தொடைகளையும் அவன் {கர்ணன்} அறுத்தான்.(15-17) அந்தப் போரில் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்கள் ஓடுகையில் தங்கள் உறுப்புகளை இழந்ததையோ, தங்கள் விலங்குகள் காயமடைந்ததையோ கூட உணரவில்லை. பயங்கரக் கணைகளால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் (அவர்கள் கொண்ட பேரச்சத்தால்) அது கர்ணன் என்றே எடுத்துக் கொண்டனர்.(18,19) தங்கள் உணர்வுகளை இழந்த அந்தப் போர்வீரர்கள், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களையே கர்ணன் என்று நினைத்து, அவர்களிடம் இருந்து அச்சத்தால் விலகி ஓடினர். கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அணிபிளந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றான். உண்மையில், அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்து ஓடிக் கொண்டிருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.(20-22) சிறப்புமிக்க வீரனான அந்தக் கர்ணனின் வலிமைமிக்க ஆயுதங்களால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களால் எந்த நிலையையும் ஏற்க {எங்கும் நிற்க} இயலவில்லை.(23) துரோணரால் பார்க்க மட்டுமே செய்யப்பட்ட பிறர், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர் {துரோணரின் பார்வையைக் கண்டே பிறர் ஓடிவிட்டனர்}.

அப்போது தன் படை ஓடுவதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(24) பின்வாங்குவதே அறிவுடைமை என்று கருதி பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, "வில்லுடன் கூடிய ருத்ரனைப் போல அங்கே நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்க வில்லாளியான கர்ணனைப் பார்.(25) உக்கிர காலமான இந்த நள்ளிரவில், சுடர்மிக்கச் சூரியனைப் போல அனைத்தையும் அவன் {கர்ணன்} எரித்துக் கொண்டிருப்பதைப் பார். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களுமான உன் நண்பர்களின் ஓலங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிபார்ப்பது மற்றும் தன் கணைகளை விடுவது ஆகிய கர்ணனின் இரண்டு செயல்களுக்கிடையில் எந்த இடைவெளியையும் காணமுடியவில்லை. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இவன் {கர்ணன்} நம் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிடுவான். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன் தீர்மானத்தின் படி அடுத்து செய்யப்பட வேண்டியதும், செய்யப்படும் நேரம் வாய்த்துவிட்டதுமான கர்ணனின் கொலைக்குத் தேவையானவற்றை இப்போதே செய்வாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

(யுதிஷ்டிரனால்) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம்,(26-29) "தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரர்}, இன்று கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சுகிறார். கர்ணனின் படைப்பிரிவானது (நம்மிடம்) மீண்டும் மீண்டும் இப்படியே நடந்து கொள்ளும்போது, எவ்வழி பின்பற்றப்பட வேண்டுமோ அதை விரைவாகப் பின்பற்றுவாயாக. நமது படை ஓடுகிறது. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, துரோணரால் பிளக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், கர்ணனால் அச்சுறுத்தப்பட்டும் உள்ள நமது துருப்புகளால் நிற்கவும் இயலவில்லை. கர்ணன் அச்சமற்றுத் திரிவதை நான் காண்கிறேன்.(30-32) நமது தேர்வீரர்களில் முதன்மையானோர் ஓடுகின்றனர். கர்ணன் தன் கூரிய கணைகளை இறைக்கிறான். மனிதனால் உடலில் மிதிக்கப்பட்டு அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாம்பொன்றைப் போல, ஓ! விருஷ்ணி குலத்தின் புலியே {கிருஷ்ணா}, போரின் முன்னணியில் என் கண்களுக்கு முன்பாகவே இவன் {கர்ணன்} இப்படித் திரிவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஒன்று நான் அவனைக் {கர்ணனைக்} கொல்வேன், அல்லது அவன் {கர்ணன்} என்னைக் கொல்லட்டும்" என்றான் {அர்ஜுனன்}.(33,34)

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மனிதர்களில் புலியும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கொண்ட போர்வீரனுமான கர்ணன், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவே போரில் திரிவதை நான் காண்கிறேன்.(35) ஓ! தனஞ்சயா, ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உன்னையும், ராட்சசன் கடோத்கசனையும் தவிரப் போரில் அவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்ல வல்லவர் எவரும் இல்லை.(36) எனினும், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, போரில் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} நீ மோதக்கூடிய நேரம் இன்னும் வாய்க்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.(37) வாசவனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும், பெரும் விண்கல்லுக்கு ஒப்பானதும், சூதன் மகனால் {கர்ணனால்} உனக்காகவே கவனமாக வைக்கப்பட்டிருப்பதுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்னும் அவனிடம் {கர்ணனிடம்} இருக்கிறது.(38) தன்னிடம் அந்த ஈட்டியைக் கொண்டுள்ள அவன் {கர்ணன்}, இப்போது பயங்கர வடிவை ஏற்றிருக்கிறான் [2]. கடோத்கசனைப் பொறுத்தவரை, அவன் எப்போதும் உனக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், உன் நன்மையை விரும்புபவனுமாக இருக்கிறான்.(39) வலிமைமிக்கக் கடோத்கசனே {இப்போது} அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்லட்டும். தெய்வீக ஆற்றலைக் கொண்ட அவன் {ராட்சசன் கடோத்கசன்} வலிமைமிக்கப் பீமனால் பெறப்பட்டவனாவான்.(40) தெய்வீக ஆயுதங்களும், ராட்சசர்களும், அசுரர்களும் பயன்படுத்தும் ஆயுதங்களும் அவனிடம் {கடோத்கசனிடம்} இருக்கின்றன. அவன் {கடோத்கசன்} கர்ணனை வெல்வான். அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை" என்றான் {கிருஷ்ணன்}.(41)

[2] வேறு ஒரு பதிப்பில், "சூதபுத்திரனிடத்தில் பிரகாசிக்கின்ற பெரிதான எரிநட்சத்திரம் போல இந்திரனால் கொடுக்கப்பட்ட ஒரு சக்தியாயுதம் இருக்கின்றது. புஜபலமிக்கவனே, யுத்தத்தில் உன்னைக் கொல்வதற்காகவே இந்தச் சக்தியாயுதமானது கர்ணனால் காப்பாற்றப்பட்டு வருகிறது. அது பயங்கர உருவமுள்ளது" என்று உள்ளது. இதில் ஆயுதமே பயங்கரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அவன் அந்தச் சக்தியை {ஈட்டியைப்} பாதுகாக்கிறான்; எனவே, இப்போது அவன் பயங்கரத் தன்மையை அடைந்திருக்கிறான்" என்று, கர்ணன் பயங்கரத்தன்மையை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் "பயங்கரம்" என்ற தன்மை கர்ணனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது {now) பயங்கரத்தை அடைந்திருக்கிறது / அடைந்திருக்கிறான் என்ற சொற்பயன்பாடும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கது.

(கிருஷ்ணனால்) இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த ராட்சசனை {கடோத்கசனை} அழைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, பின்னவன் {கடோத்கசன்}, கவசந்தரித்துக் கொண்டும், வாள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டும் விரைவில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்பு வந்து நின்றான்.(42) கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வணங்கிய அவன் {கடோத்கசன்} பெருமையுடன், "இதோ நான் இருக்கிறேன், எனக்கு ஆணையிடுவீராக" என்றான். அப்போது தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சுடர்மிக்க வாய் {முகம்}, நெருப்பு போன்ற கண்கள், மேகங்களின் நிறத்திலான உடல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஹிடிம்பையின் மகனுமான அந்த ராட்சசனிடம் {கடோத்கசனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) "ஓ! கடோத்கசா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. {இப்போது} உன் ஆற்றலை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. வேறு யாருக்குமில்லை.(45) {துன்பக்கடலில்} மூழ்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களுக்கு இந்தப் போரில் நீ படகாவாயாக. பல்வேறு ஆயுதங்களும், பல வகைகளிலான ராட்சச மாயைகளும் உன்னிடம் இருக்கின்றன.(46) ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, மந்தையாளனால் {இடையனால்} அடிக்கப்படும் மாட்டு மந்தையைப் போல, போர்க்களத்தில் பாண்டவர்களின் படை கர்ணனால் அடிக்கப்படுகிறது.(47) அதோ, பெரும் நுண்ணறிவும், உறுதியான ஆற்றலும் கொண்ட வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரித்து வருகிறான்.(48)

வலிமைமிக்கக் கணைகளைப் பொழியும் அந்த உறுதிமிக்க வில்லாளியின் {கர்ணனின்} முன்பு, நெருப்பு போன்ற அவனது கணைகளால் பீடிக்கப்படும் பாண்டவ வீரர்களால் நிலைக்க முடியவில்லை.(49) இந்த நள்ளிரவில் சூதன் மகனின் {கர்ணனின்} கணை மழையால் பீடிக்கப்படும் பாஞ்சாலர்கள், சிங்கத்தால் பீடிக்கப்படும் மான் கூட்டத்தைப் போல ஓடுகின்றனர்.(50) ஓ! பயங்கர ஆற்றலைக் கொண்டவனே {கடோத்கசா}, போரில் இப்படி ஈடுபட்டுவரும் சூதன் மகனை {கர்ணனைத்} தாக்குப் பிடிக்க உன்னைத் தவிர வேறு எவனுமில்லை.(51) உன் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றின் துணை கொண்டு, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, உன் தாய்வழி குலத்திற்கும், உனது தந்தைமாரின் குலத்திற்கும் தகுந்ததைச் சாதிப்பாயாக.(52) இதற்காகவே, ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, இடுக்கண்களில் காக்கப்படவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகிறார்கள். இப்போது நீ உன் இரத்த உறவினர்களைக் காப்பாயாக.(53) ஓ! கடோத்கசா, தங்கள் நோக்கங்களை அடைவதற்காகவே தந்தைமார் மகன்களை விரும்புகின்றனர். நன்மையின் தோற்றுவாயான பிள்ளைகள், இங்கேயும், இதன் பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} தங்கள் தந்தைமாரைக் காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.(54) நீ சிறப்புமிக்கவன், போரில் உன் வலிமை பயங்கரமானதும் ஒப்பற்றதுமாகும். போரில் ஈடுபடுகையில் உனக்கு இணையானவர்கள் எவரும் இல்லை.(55)

ஓ! எதிரிகளை எரிப்பவனே {கடோத்கசா}, இவ்விரவில் கர்ணனின் நேரான கணைகளால் முறியடிக்கப்படுபவர்களும், தார்தராஷ்டிரக் கடலில் இப்போது மூழ்கிக் கொண்டிருப்பவர்களுமான பாண்டவர்கள் கரையைப் பாதுகாப்பாக அடைவதற்கு ஏதுவான வழியாக {படகாக} அவர்களுக்கு இருப்பாயாக.(56) இரவில் ராட்சசர்கள், அளவிலா ஆற்றல் கொண்டவர்களாகவும், பெரும் வலிமையும், பெரும் துணிவும் கொண்டவர்களாக இருக்கின்றனர். (அத்தகு நேரத்தில்) அவர்கள் பெரும் வீரமிக்கவர்களும், வீழ்த்தக் கடினமானவர்களுமான போர்வீரர்களாக ஆகின்றனர்.(57) இந்த நள்ளிரவில் உன் மாயைகளின் துணை கொண்டு போரில் கர்ணனைக் கொல்வாயாக. பார்த்தர்களும், திருஷ்டத்யும்னனும் துரோணரை அகற்றுவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(58)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான ராட்சசன் கடோத்கசனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(59) "ஓ! கடோத்கசா, நீயும், நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, பாண்டுவின் மகனான பீமர் ஆகிய மூவரும், நம் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்கள் என்பது என் தீர்மானம்.(60) இந்த இரவில் சென்று கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி உனது பின்புறத்தைப் பாதுகாப்பான். (தேவர்ப்படைத் தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} துணையோடு, பழங்காலத்தில் தாரகனைக் கொன்ற இந்திரனைப் போல இந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைத்} துணையாகக் கொண்டு, போரில் துணிவுமிக்கக் கர்ணனை நீ கொல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}.(62)

கடோத்கசன் {அர்ஜுனனிடம்}, "ஓ! பாரதரே {அர்ஜுனரே} கர்ணருக்கோ, துரோணருக்கோ, ஆயுதங்களில் சாதித்த சிறப்புமிக்க எந்த க்ஷத்திரியனுக்கோ நான் இணையானவனே.(63) இந்த இரவில் நான் சூதன் மகனுடன் {கர்ணருடன்} மோதப் போகும் போரானது, இவ்வுலகம் நீடித்து உள்ள வரையில் பேசத்தக்கதாக இருக்கும்.(64) இன்றிரவு, துணிச்சல் மிக்கவர் எவரையும், மருட்சியுடையோர் எவரையும், கூப்பிய கரங்களோடு வேண்டுவோர் எவரையும் விட்டு விடாமல், ராட்சச நடைமுறையைக் கைக்கொண்டு, அனைவரையும் கொல்வேன்" என்றான் {கடோத்கசன்}.(65)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, துருப்புகளை அச்சுறுத்தியபடியே அந்தப் பயங்கரப் போரில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(66) மனிதர்களில் புலியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சுடர்மிக்க வாயையும் {முகத்தையும்}, சுடர்மிக்கக் குழல்களையும் {கேசத்தையும்} கொண்ட அந்தக் கோபக்காரப் போர்வீரனை {கடோத்கசனை} இன்முகத்துடன் வரவேற்றான்.(67) ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிய கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.(68)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment