Saturday, November 18, 2023

Umbartaru thirupugazh meaning


 

ஒரு நண்பர் புது முயற்சி தொடங்கப்போறதாச் சொன்னாரு. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்தைச் சொன்னேன்.

எந்தவொரு புதுமுயற்சியிலும் போடுகின்ற உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கனும். அப்பதான் மேல மேல உழைச்சு முன்னேறும் வேகம் வரும்.

அந்த வெற்றி எப்படி வரனும் தெரியுமா?

kalpataru1தேவலோகத்துல அஞ்சு வகையான மரங்கள் இருக்கு. ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வேலை. அதுல ஒன்னு கற்பகம். அதோட வேலை கேட்டதையெல்லாம் கொடுக்குறது. காலைல சட்னி அரைக்கத் தேங்கா இல்லைன்னா, போய்க் கேட்டா.. தேங்காச் சில்லாவோ உடைச்ச தேங்கா மூடியாவோ முழுத்தேங்காயாவோ… அவங்கவங்களுக்கு வேண்டிய மாதிரி கொடுக்கும். கேக்குறவங்களுக்கு உண்மையிலேயே தேங்கா வேணுமா வேண்டாமான்னு யோசிக்காது. ஆனா கேக்குறவங்க மனசுல தேங்கா எப்படி வேணும்னு தோணுதோ அப்படியே கொடுத்துரும். அதுபோல உழைப்புக்கு உண்டான வெற்றி நம்ம மனம் போலக் கிடைக்கனும்.

இந்தத் தேவர்கள் கிட்ட இன்னொன்னும் இருக்கு. அதுதான் காமதேனு. தெய்வப்பசு. காமதேனுவும் கேட்டதெல்லாம் கொடுக்கும். ஆனா ஆள் பாத்துக் கொடுக்கும். வேண்டியவனா வேண்டாதவனா நல்லவனா கெட்டவனான்னு அலசி ஆராய்ஞ்சு கொடுக்கும். பரமசிவன் கூட வரம் கொடுக்க யோசிக்கிறதில்ல. கேட்டா கேட்ட வரம் கொடுத்திருவாரு. ஆனா காமதேனு யோசிக்கும். ஏன்? என்ன வரம் கொடுத்தாலும் அது தப்பான வரமா இருந்தாக் கூட, அதை யார வெச்சு எப்ப எப்படி அழிக்கனும்னு சிவனுக்குத் தெரியும். அதுனாலதான் அவரு சிவனேன்னு இருக்காரு. காமதேனுவால அது முடியாது. யாராவது வந்து காமதேனுவே எனக்கு அடிமையாயிரனும்னு வரம் கேட்டுட்டா? அதுனாலதான் காமதேனு ஆள் பாத்துக் கொடுக்கும். வெற்றி வரும் போது நாம யாருக்கு என்ன கொடுக்குறோம்னு பாத்துப் பாத்துதான் கொடுக்கனும்.

சரி. கற்பக மரத்துக்கிட்ட போய் கற்பக மரமே வேணும்னு கேட்டுட்டா என்னாகும்? கற்பக மரம் யோசிக்கவே யோசிக்காது. சட்டுன்னு இன்னொரு கற்பக மரத்தை உருவாக்கிக் கொடுத்துரும். அதுனால்தான் தேவலோகத்துலயே ஒரேயொரு கற்பகமரம் இருக்குறப்போ, சூரபதுமனுடைய ஊர்ல எல்லா மரமுமே கற்பகமா இருந்துச்சாம். ஒவ்வொரு வாட்டியும் தேவலோகத்துக்குப் போயா வேண்டியதைக் கேட்டுக்கிட்டிருக்கனும்? கற்பகமமரத்தைப் பிடுங்கி எதாவது பிரச்சனை ஆயிருச்சுன்னா? அதான் சூரபதுமன் வீட்டுக்கு வீடு கற்பகமரம் வேணும்னு கேட்டு வாங்கினாரு போல. மரமெலாம் கற்பகம் மலையெலாம் கனகம்னு கச்சியப்பர் கந்தபுராணத்துல சொல்றாரு. அதாவது ஒரு வெற்றி பலப்பல வெற்றிகளா கிளைக்கனும். அதுதான் நல்ல வெற்றி.

இன்னொன்னு இருக்கு. சியமந்தகமணி. அது கேட்டதைக் கொடுக்காது. ஆனா தெனமும் இவ்வளவுன்னு எக்கச்சக்கமா தங்கமும் வெள்ளியும் வைரமும் இரத்தினமுமாக் கொடுத்திரும். அத வெச்சு வேண்டியதை வாங்கிக்கனும். வெற்றியின் பலன் செல்வம். அந்தச் செல்வம் தினமும் தொடர்ந்து நம்ம கிட்ட வந்துக்கிட்டே இருக்கனும். தொழில் நல்லா சீராப் போயிட்டிருக்கும் போது தெனந்தெனம் அக்கவுண்ட் பேலன்ஸ் தானா ஏறும்.

இப்படியெல்லாம் வெற்றி கிடைச்சா நம்ம மனசு எப்படி இருக்கும்?

சில பேருக்கு ஒருபடி வெற்றி கிடைச்சதுமே மிதப்பு வந்துரும். அப்படியே அமெரிக்காவை வாங்கிட்ட மாதிரியும்… ஐரோப்பாவை தோசை மாதிரி திருப்பிப் போட்ட மாதிரியும் மிதமிதப்பு வந்துரும். அது வந்துருச்சுன்னா அவ்வளவுதான். "நிலை உயரும் போது பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும்" என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதும் அதுக்குதான்.

வெற்றி வரனும். அந்த வெற்றியும் தொடர்ந்து வரனும். அந்த நல்ல நேரத்துல யாருக்கு என்ன கொடுக்குறோம்னு பாத்துக் கொடுக்கனும். தினமும் செல்வம் பெருகனும்.

ஆணவமோ திமிரோ இல்லாம மனசு ஜில்லுன்னு இருக்கனும். ஒரு அமைதி. நல்ல நிம்மதி. பெருமை. இரக்கம் இந்த உணர்வெல்லாம் ஊறனும்.

இப்படியான சமயத்துல மனசு அமுதம் மாதிரி தூய்மையாகவும் குளுமையாகவும் இன்பம் ஊறி ஒளி பொருந்தி இருக்கும்.

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
    ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி

உம்பர் தரு(த்) (காம)தேனு (சியமந்தக)மணிக் கசிவாகி
ஒண்(ஒளி) கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி

இப்ப முதல் ரெண்டு வரியின் பொருள் புரிஞ்சிருக்குமே.

வெற்றியும் வெற்றியின் பலனும் நல்ல மனமும் எவ்வளவு காலம் இருக்கனும்? காலகாலத்துக்கும் இருக்கனும். அதுக்கு ஆண்டவன் அருள் வேணும்னு கேக்குறதுதான் அடுத்த ரெண்டு வரி.

Advertisements
REPORT THIS AD

இன்பரசத் தேபருகிப்    பலகாலும்
    என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே

இன்ப இரசத்தே பருகிப் பலகாலும்(காலமும்)
என்றன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே

Pillaiyar3சீர் பிரிச்சுப் படிச்சாலே எவ்வளவு எளிமையா இருக்கு பாத்தீங்களா.

வழக்கமா அருணகிரி முருகனைத்தானே பாடுவாரு. ஆனா இந்தப் பாட்டு பிள்ளையாருக்கானது. இந்தக் குறிப்பிட்ட ஊர் என்று அருணகிரி குறிப்பிடவில்லை. அதுனால இது பொதுத் திருப்புகழ். மொத்தத் திருப்புகழுமே எல்லாருக்கும் பொதுதானே.

பிள்ளையாரைப் பாடினாலும் முருகனோட சேத்துத்தான் பாடுறாரு. வள்ளியைத் திருமணம் செய்ய முருகனுக்கு உதவி செய்யக் காட்டுக்குப் போனவனே. தாய்தந்தையரை வலம் வந்து கனியைப் பெற்றவனே.

தம்பிதனக் காகவனத் தணைவோனே
    தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே

தம்பி தனக்காக வனத்து அணைவோனே
தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே

இந்த இரண்டு நிகழ்வுகளும் முந்தைய இலக்கியங்களில் இல்லைன்னாலும் கச்சியப்பருக்குப் பிறகான இலக்கியங்களில் பிரபலமாகவே இருக்கு. ஸ்ரீவள்ளி திருவிளையாடல் மாதிரியான திரைப்படங்களிலும் வந்திருக்கு.

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
    ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே

அன்பர் தமக்கு ஆன நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து ஆனை முகப் பெருமாளே

அன்பர்கள் அனைவருக்கும் ஆளாகி எப்போதும் நிலைத்து நிற்கும் மெய்ப் பொருளோளே! ஐந்து கரங்களை உடைய ஆனைமுகத்துப் பெருமானே! உம்மை வேண்டிக்கொள்கிறோம். முயற்சிகளுக்கான வழியைக் காட்டு. அந்த வழியிலே கூட்டிச் சென்று விரைந்து வெற்றியைக் காட்டு. அந்த வெற்றியும் தொடர்ந்து பலப்பல வெற்றிகளாகக் கிளைத்தெழும் வகையைக் கூட்டு. வெற்றியைக் கையாளும் மனபலமும் வெற்றியின் பலனான செல்வபலமும் நிறையச் செய். இப்படியான சூழ்நிலையில் மனம் கெட்டுப் போகாமல் அமுதத்தைப் போலத் தூய்மையாகவும் குளுமையாகவும் இன்பமாகவும் நல்ல உணர்வுகள் ஊறியும் இருக்கும்படிச் செய். இந்த அற்புத நிலை காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்பதற்கும் நீயே அருள் செய்து துணை நிற்க வேண்டும்!

Pillaiyar1உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
    ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப்    பலகாலும்
    என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
    தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
    ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே

அன்புடன்,
ஜிரா

No comments:

Post a Comment