Sunday, November 19, 2023

manidweepam

மணித்வீபம்   -    நங்கநல்லூர்   J K  SIVAN 

சிவனுக்குக் கைலாசம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் மாதிரி லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. மற்றவர்களுக்கு ஒன்று  என்றால் அம்பாளுக்கு  ரெண்டு வாச ஸ்தலங்கள். ஒன்று பிரம்மாண்டம்.  அதில் தான் எல்லா  க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி,  மத்தியிலிருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது.  ரெண்டாவது த ப்ரஹ்மாண்டத்தில்  உட்படாத  தனி லோகம். அதைத் தானே ஸ்ரிஷ்டி செய்து, அதற்குள் ஒரு தீவு அமைத்து  அதில் வசிப்பவள் . "ஸுதா ஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ, காமதாயிநீ" என்று  ஸஹஸ்ரநாமத்தில்  இந்த அம்ருத சாகர இருப்பிடத்தைக்  குறிப்பிட்டிருக்கிறது.  காமாக்ஷி இருக்கும் இடம் அது.   அந்த தீவின் பெயர் 'மணித்வீபம்'  ஆச்சார்யாள் இதை வர்ணித்துள்ளார்.  

மேரு மத்தியானாலும் சரி, அம்ருத ஸாகரமானாலும் சரி.  அவள் தனது  தீவுக்குப்  போய் விட்டால் அங்கே ஒன்றும் வித்தியாசமில்லை. வெளிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான  ப்ராஹாரங்கள், வனங்கள், தடாகங்கள், பரிவாரங்கள்தான்.  இருபத்தைந்து கோட்டைகளும் ப்ரஹாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பு, அப்புறம் கடைசியில் ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு  உலோகத்தாலும்  ஒவ்வொரு கோட்டை.  அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும்  செங்கல் மாதிரி இணைத்துக் கட்டப்பட்ட கோட்டை. இப்படியே ஸூக்ஷ்மமாகப் போய் மனத்தாலேயே ஆன கோட்டை,  புத்தியாலேயே ஆன கோட்டை, அஹங்காரத்தாலான கோட்டை எல்லாம் கூட உண்டு. கடைசியில் சூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மன்மத தேஜஸ் இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை.
இப்படிப்பட்ட  கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல ஆரண்யங்கள், காடுகள்,  பல நீர்  ஓடைகள்.   இதை எல்லாம்  தாண்டிப் போனால் இருபத்தைந்தாவது ஆவரணத்தில் (சுற்றில், அதாவது  ப்ரஹாரத்தில்)  மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த தடாகம்  வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கற்களையே வைத்துக் கட்டப்பட்ட  அம்பாளின் அரண்மனை தெரியும். அம்பாளின் வீட்டுக்குப் பெயர்  'சிந்தாமணி க்ரஹம்'.

ஸௌந்தர்ய லஹரி முதல் பாகமான  சிவானந்த லஹரியில் 8வது ஸ்லோகம் ஏற்கனவே உங்களுக்கு அளித்திருக்கிறேன். மீண்டும் அதை எழுதுகிறேன்.  

8.  சிந்தாமணி க்ரஹம்
सुधासिन्धोर्मध्ये सुरविटपिवाटीपरिवृते मणिद्वीपे नीपोपवनवति चिन्तामणिगृहे ।
शिवाकारे मञ्चे परमशिवपर्यङ्कनिलयां भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्दलहरीम् ॥8॥

sudhāsindhōrmadhyē suraviṭapivāṭīparivṛtē maṇidvīpē nīpōpavanavati chintāmaṇigṛhē ।
śivākārē mañchē paramaśivaparyaṅkanilayāṃ bhajanti tvāṃ dhanyāḥ katichana chidānandalaharīm ॥ 8 ॥

ஸுதா ஸிந்த்தோர் மத்த்யே ஸுரவிடபி வடீ பரிவ்ருதே மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவ பாயாங்க நிலயாம் பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம்.

பகவானுடைய அனுக்ரஹம் இல்லாமல் நம்மால் மனஸை அடக்கவோ, ஞானமார்கத்தில் செல்லவோ முடியாது என்பது வாஸ்தவம். அதை அடைந்தவனுக்கு எல்லாம் ஒன்றே. அது அவனே. வித்யாசமே எதிலும் கிடையாது. அதைதான் அத்வைத வாஸனா என்பது. மாயை தான் ஒவ்வொருவரையும் தன் வழியில் நம்மை இழுத்துச் செல்வது. அதை உணர்ந்து அதன் பிடியில் சிக்காதவன் ஞானி. சர்வ சக்தியாக எல்லாமும் தானேயானவள் அம்பாள் மஹா த்ரிபுர சுந்தரி என்று ஞானி அறிந்தவன், 
ஸர்வ வியாபியான பரமேஸ்வரியின் இருப்பிடம், அமிர்தக் கடலின் நடுவில் கல்பகவிருக்ஷங்கள் நிறைய சூழ்ந்து இருக்கும் ரத்ன மயத் தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான நந்தவனத்தில் தோன்றும் சிந்தாமணி க்ரஹத்தில். அங்கே அவள் பரம மங்கல வடிவமான சிம்மாஸனத்தில் பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கிறாள். அவள் ஞானானந்தக் கடலின் அலை போன்றவள் . ஆனந்த லஹரி எவ்வளவு அழகாக வர்ணிக்கப்படுகிறது! அம்மா தாயே, உன்னை புண்ணியவான்களான சிலரே வழிபடுகிறார்கள் ஏனென்றால் அவர் பாக்யம் பண்ணியவர்கள். புண்யசாலிகள்.
நமக்கு எல்லாம் வீடு இருப்பது போல் இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் க்ரஹத்தை அழகாக காட்டி யிருக்கிறது. அம்பிகையின் வாசஸ்தானமான சிந்தாமணி க்ருஹம் ஸகல அண்ட ப்ரம்மாண் டங்களுக்கும் அப்பால் அமிருதஸாகரத்தின் மத்தியில் ரத்தினத்தீவில் இருக்கிறது என்கிறார். அதன் வெளி ப்ரஹாரங்கள் ஒன்று ரெண்டல்ல. இருபத்தைந்து: அவை எதனால் ஆனது தெரியுமா? (1) இரும்பு (2) எஃகு (3) செம்பு (4) வெள்ளீயம் (5) பித்தளை (6) பஞ்சலோகம் (7) வெள்ளி (8) தங்கம் (9) புஷ்பராகம் (10) பத்மராகம் (11) கோமேதகம் (12) வஜ்ரம் (13) வைடூரியம் (14) இந்திரநீலம் (15) முத்து (16) மரகதம் (17) பவழம் (18) நவரத்தினம் (19) நானாரத்தினம் . இதோடு கூடம் நமது (20) மனம் (21) புத்தி (22) அஹங்காரம் (23) சூரியனின் தேஜஸ் (24) சந்திரனின் தேஜஸ் (25) மன்மதனின் தேஜஸ் . போதுமா?
இந்த 25 ப்ரஹாரங்களில் எட்டாவது தான் மேலே சொன்ன கதம்பவனம் –இதில் யார் காணப்படுகிறார்? லலிதாம்பிகையின் மந்திரிணியான ஸ்யாமளாதேவி வசிக்கும் ஸ்தலம்.
பதினைந்தாவது ப்ரஹாரத்தில் அஷ்ட்திக்பாலர்கள் இருக்கிறார்கள். பதினாறாவது ப்ரஹாரத்தில் ஸேனா நாயகி தண்டினி, இன்னொரு பெயர் வாராஹி இருக்கிறாள். இங்கேயும் ஸ்யாமளாதேவி காணப்படுகிறாள்.
பதினேழாவதில் முழுக்க முழுக்க யோகினிகள். பதினெட்டில் மஹாவிஷ்ணு; பத்தொன்பதில் ஈசானன். இருபதில் தாரா தேவி, இருபத்தொன்றில் வாருணி. இருபத்திரண்டாவது ப்ரஹாரம் அஹங்காரக் கோட்டை. அதில் வசிப்பவள் குருகுல்லா தேவி. இருபத்துமூன்றாவது சூரிய ப்ரஹாரம் அதில் இருப்பவர் தான் மார்த்தாண்ட பைரவர். இருபத்துநான்காவது ப்ரஹாரம் சந்திரன் இருக்கும் ஸ்தலம். கடைசியாக 25வது ஸ்ருங்கார வனம். அழகு மிகுந்தது. அதில் இருப்பவன் தான் மன்மதன்.
இதற்குள் மஹாபத்ம வனமும் கற்பகவிருக்ஷத் தோப்பும், அதன் நடுவில் சிந்தாமணிக்கிருஹமும் இருக்கிறதும். அம்பாளின் சிந்தாமணி க்ரஹம் எப்படி இருக்கிறது! வாஸ்து மாதிரி அந்த சிந்தா மணி க்ருஹத்தின் அக்னிமூலையில் சிதக்கினி குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபுறமும் மந்த்ரிணி, தண்டினி தேவிகளின் கிருஹங்கள் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருப்பர். இது தான் அவள் கோட்டை, அதன் செக்யூரிட்டி ஏற்பாடுகள். இதை தான் நவாவரணம் அழகாக சொல்ழும் ஸ்ரீசக்கரம். இந்த ஸ்ரீசக்ரத்தின் நடுவில் ஸர்வானந்தமயம் என்னும் பிந்துபீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாத்ரிபுரஸுந்தரி எழுந்தருளியிருப்பாள்.

பஞ்சப் பிரம்மாஸனம் என்பது என்ன? பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகிய நாலு பேரும் நாலு சிம்மாசன கால்கள். அதன் பீடம் ஸதாசிவனுடைய மடி, எனும் மேல் பலகை கொண்ட கட்டில் . இதுவே " அ-உ-ம-அர்த்த, AUM எனும் ஓங்காரம். பிந்து" வடிவான ஓங்கார மஞ்சம்.

தேவர்களுக்கெல்லாம் மேலே ராஜ தர்பார் நடத்துகிற ராணிஅம்பாள்.  அம்ருத சாகர மத்தியிலே உத்தமமான சாதகர்களுக்குக் காமேஸ்வர பதிவ்ரதையான   தாயாகவும்  காட்சி தருகிறாள்.   அப்படிப்பட்ட அம்பாளுடைய வாசத்தைத்தான் அம்ருத சாகரத்திலிருந்து ஆரம்பித்துக் காமேஸ்வரனுடைய மடி வரையில் சுருக்கமாக ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார்.
நீபம் என்ற மரங்களைக் கொண்ட உபவனத்திலே – (கதம்பத்தின் இன்னொரு பெயர் நீபம் ) ஆனந்தமாக அம்பாள் சஞ்சாரம் பண்ணுபவள்.  மதுரையில் கதம்ப வனம், மணித்வீபத்தில்  இப்படி ஒரு உபவனம்.  ஒரு குட்டி  ஆரண்யம். காடு

ஆதி சங்கரர்  செளந்தரிய லஹரியில் ஒரு ஸ்லோகத்தில்  அம்பாளின்  தாடங்க மஹிமையை  வர்ணிக்கிறார். உன்னால் ஹாலஹால  விஷத்தை உண்டும் சிவபெருமான் அழிவில்லாதவராக, நீலகண்டனாக  என்றும்  இருக்கிறார் என்று அந்த ஸ்லோகம் சொல்லும். கைலாசபதியாகிய பரமேசுவரனத் தன் பதியாகப் பெற்ற அம்பிகை எப்போதும் கணங்குழையை அணிந்தவளாக, நித்திய மங்கலமுடையவளாக, விளங்குகிருள்.   அம்பாளுக்கு  'ஸுமங்கலி' என்று ஒரு பெயர்.
சிந்தாமணி க்ரஹத்தைச் சுற்றிக் கதம்பவனம். அது  இருக்கும் இடம் மணித்வீபம்.சுற்றிலும்  கற்பகக் காடு/  எல்லாமே  அம்ருத சமுத்திரத்தின் நடுவில் அமைந்தவை.

தொடரும்

No comments:

Post a Comment