Friday, November 25, 2022

Mahabharatam part 77 in Tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-77
..
சபா பர்வம்
..
சூதாட்டத்தை நிறுத்தும்படி அறிவுரை கூறிய விதுரன்
..
வைசம்பாயனர் சொன்னார்,
 "நிச்சயம் (யுதிஷ்டிரனுக்கு) முழு நாசத்தைக் கொண்டு வரப்போகும் சூதாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அனைத்து ஐயங்களையும் சிதறடிப்பவனான விதுரன், திருதராஷ்டிரனிடம்,
"ஓ பெரும் மன்னா, ஓ பாரத குலத்தவரே, நோய்வாய்ப்பட்டுத் தனது இறுதி மூச்சை சுவாசிக்கும் ஒருவனுக்கு மருந்தைப் போன்ற என் வார்த்தைகளில் உமக்கு ஏற்பில்லை என்றாலும், நான் சொல்வதைக் கவனிப்பீராக.
எப்போது தீய எண்ணம் கொண்ட இந்தத் துரியோதனன் தான் பிறந்த உடனேயே, பொருந்தாத குள்ளநரி போல ஊளையிட்டானோ
 அப்போதே பாரத குலத்தின் அழிவுக்காக இவன் {துரியோதனன்} விதிக்கப்பட்டிருக்கிறான் என்று அனைவராலும் அறியப்பட்டது.
 ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உங்கள் அனைவரின் மரணத்திற்கும் இவன் {துரியோதனன்} காரணமாவான் என்பதை அறிந்து கொள்வீராக. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, துரியோதனன் என்ற வடிவத்தில், உமது வீட்டில் ஒரு குள்ளநரி வாழ்ந்து வருகிறது. உமது அறியாமையின் {மடமையின்} காரணமாக நீர் அதை அறியவில்லை. நான் சொல்லப்போகும் கவிஞனின் (சுக்கிரனின்) வார்த்தைகளை இப்போது கேட்பீராக.
(மலைகளில்) தேனைச் சேகரிப்போர், தாங்கள் தேடியது {தேன்} கிடைத்ததும், தாங்கள் கீழே விழப்போவதை கவனிப்பதில்லை. அபாயகரமான உயரங்களை ஏறி, தாங்கள் தேடும் பொருளிலேயே எண்ணத்தையும் நோக்கத்தையும் கொண்டு, கீழே விழுந்து, அழிவைச் சந்திக்கின்றனர்.
 இந்தத் துரியோதனன், பகடையாட்ட வெறியில், தேன் சேகரிப்போர் போல, விளைவுகளைக் கருதாமல் தான் தேடுவதை அடைவதிலேயே நோக்கமாக இருக்கிறான். பெரும் போர்வீரர்களை எதிரிகளாக்கிக் கொண்டு, தன் முன் இருக்கும் வீழ்ச்சியைக் காண்கிறான் இல்லை.
ஓ பெரும் ஞானம் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, போஜர்களில், தங்கள் குடிமக்களின் நன்மைக்காக, தங்கள் குலத்துக்குப் பொருந்தாத தகுதியற்ற மகனை {அஸமஞ்சனைக்} கைவிட்டனர் என்பதை நீர் அறிவீர்.
 அந்தகர்களும், யாதவர்களும், போஜர்களும் ஒன்றுகூடி, கம்சனைக் கைவிட்டனர். அதன் பிறகு, அந்த முழு குலத்தாலும் கட்டளையிடப்பட்டு, அதே கம்சன் எதிரிகளைக் கொல்லும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதால்,
அந்த குலத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் நூறு வருடங்களுக்கு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எனவே உமது கட்டளையின் பேரில், அர்ஜுனன் இந்த சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்லட்டும்.
இந்தப் பாவியைக் கொல்வதன் விளைவால், குருக்கள் மகிழ்ந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியில் களிப்பார்கள். ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு காக்கையைக் கொடுத்து, அதற்கு மாற்றாக பாண்டவர்களான இந்த மயில்களை வாங்கிக் கொள்வீராக. ஒரு குள்ளநரியைக் கொடுத்து, அதற்கு மாற்றாக இந்த புலிகளை வாங்கிக் கொள்வீராக. துன்பக்கடலில் மூழ்காதீர்.
ஒரு குடும்பத்திற்காக ஒரு {குடும்ப} உறுப்பினரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு மாநிலத்துக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். ஒருவனின் ஆன்மாவுக்காக இந்த மொத்த பூமியையும் தியாகம் செய்யலாம்.
 இப்படிச் சொல்லித்தான், அனைத்து உயிர்களின் எண்ணங்களையும், எதிரிகள் அனைவருடைய பயங்கரத்தின் மூலங்களையும் அறிந்த, எங்கும் உள்ள காவியர் {சுக்கிரன்}, ஜம்பன் {அசுரன்} பிறந்தபோது பெரும் அசுரர்களிடம், அவனை {அசுரன் ஜம்பனை} கைவிடுமாறு தூண்டினார்
ஒரு குறிப்பிட்ட மன்னன், தங்கம் கக்கிய சில காட்டுப்பறவைகளை, தனது வசிப்பிடத்திற்கு எடுத்துச் சென்று, பிறகு சபலத்தால் {பேராசையால்} அவற்றைக் கொன்றான். ஓ எதிரிகளைக் கொல்பவரே,
சபலத்தால் குருடாகி, மகிழ்ச்சியை விரும்பி, தங்கத்துக்காக, ஒரே நேரத்தில், தனது தற்கால மற்றும் எதிர்கால லாபங்களை அந்த மன்னன் அழித்துக் கொண்டான். எனவே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கதையில் வரும் மன்னனைப் போல லாபத்தில் விருப்பம் கொண்டு பாண்டவர்களைத் தண்டிக்காதீர்.
பிறகு, ஓ பரதனின் வழித்தோன்றலே, அறியாமையால் குருடாகி, அந்தப் பறவைகளைக் கொன்ற மனிதன் போலவே பின்பு வருத்தப்பட வேண்டியிருக்கும். தான் தினமும் பாசத்துடன் பராமரிக்கும் தோட்டத்தில் இருக்கும் மரங்களில் இருந்து (நிறைய பூக்களைப்) பறிக்கும் பூ வியாபாரி போல, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தினம் தினம் பாண்டவர்களிடம் இருந்து பூக்களைப் பறிக்கலாம். அனைத்தையும் கரித்துண்டாக்கிவிடும் நெருப்பை உற்பத்தி செய்யும் தென்றல் போல அவர்களை வேர் வரை எரித்துவிடாதீர். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன்களுடனும் உமது துருப்புகளுடனும் யமனின் உலகத்துக்குச் செல்லாதீர்.
 ஒன்றாக இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகன்களை அங்கே எதிர்க்கும் வல்லமை யாருக்கு இருக்கிறது? மற்றவர்களைக் குறித்துப் பேசாதீர், தேவர்களின் தலைவனால் கூட அதைச் செய்ய முடியுமா?" என்றான் {விதுரன்}.
விதுரன்,
"சூதாட்டமே வேற்றுமைகளின் வேராகும். அது ஒற்றுமையின்மையைக் கொண்டு வருகிறது. விளைவுகளால் அது பயங்கரமானது. இருப்பினும், இந்த வழியைக் கொண்டு, திருதராஷ்டிரனின் மகன் துரியோதனன் தனக்கு பயங்கரமான பகையை உண்டாக்கிக் கொள்கிறான்
பிரதீபன் மற்றும் சந்தனுவின் சந்ததியினர் தங்கள் பயங்கரமான துருப்புகளுடனும், பாஹ்லீகர்களான தங்கள் கூட்டாளிகளுடனும், துரியோதனனின் பாவங்களுக்காக அழிவைச் சந்திக்கப் போகின்றனர்
துரியோதனன் கொண்டிருக்கும் இந்த போதையின் விளைவு, கோபம் கொண்ட காளை, தனது கொம்புகளையே உடைத்துக் கொள்வது போல, நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக அதிஷ்டத்தையும் செழிப்பையும் விரட்டும்.
 கற்ற துணிச்சலுள்ள ஒரு மனிதர், தனது முன்னுணர்தலைக் {தீர்க்கதரிசனத்தை - பின் வருவதை முன்பே அறிதலைக்} கருதாமல், இன்னொரு மனிதனின் இதயத்தைத் {சிந்தனையைத்} தொடர்ந்தானானால், சிறுவனால் வழிநடத்தப்பட்ட படகில் கடலில் சஞ்சரித்து மூழ்குவது போல துயரத்தில் மூழ்குவான்.
துரியோதனன், பாண்டுவின் மகனோடு {யுதிஷ்டிரனோடு} சூதாடுகிறான், நீரோ! அவன் வெல்கிறான் என்று பேரானந்தத்தில் இருக்கிறீர். இது போரை உண்டாக்கும் வெற்றி, இதன் முடிவு மனிதர்களின் அழிவாக இருக்கும்.
உங்களால் நன்கு திட்டமிடப்பட்ட இந்தக் கவர்ச்சி விளையாட்டு, கொடிய முடிவுகளையே கொடுக்கும். நீர் செய்த இந்த ஆலோசனைகளால் பெரும் துயரத்தையே நீர் கொண்டு வந்திருக்கிறீர். உம்முடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள யுதிஷ்டிரனுடனான உமது இந்த சண்டையை நீர் முன்னுணரவில்லை என்றாலும், அது உமக்கு ஏற்புடையதாகவே இருக்கிறது.
சந்தனுவின் மகன்களே, பிரதீபனின் சந்ததியினரே கேளுங்கள், கௌரவர்களின் இந்தச் சபையில் இருப்பவர்களே, விவேகத்தின் வார்த்தைகளைக் கேளுங்கள். இந்தப் பாவியைத் தொடர்ந்து சென்று சுடர்விட்டு எரியும் நெருப்புக்குள் நுழையாதீர்கள்.
பகடையில் போதையுண்டிருக்கும் பாண்டுவின் மகனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, எப்போது கோபத்துக்கு ஆட்படுவானோ, விருகோதரனும் {பீமனும்}, அர்ஜுனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} எப்போது கோபத்துக்கு ஆட்படுவார்களோ, அந்த குழப்பமான சூழ்நிலையில், உங்களுக்குப் புகலிடமாக இருப்பவன் எவன்?
ஒ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே},
நீரே ஒரு செல்வச் சுரங்கம். சூதாட்டத்தில் கிடைப்பது போல, நீர் விரும்பிய அளவு பெரும் செல்வத்தை (வேறு வழிகளில்) உம்மால் அடைய முடியும். பாண்டவர்களின் பெரும் செல்வத்தை வெல்வதனால் உமக்கு என்ன லாபம்? பாண்டவர்களையே செல்வமாக அடைந்தால், அது இந்தச் செல்வங்களைவிட எல்லாம் பெரிதாகும்.
 நாம் அனைவரும் இந்த விளையாட்டில் சுபலனுக்கு {சகுனி} இருக்கும் நிபுணத்துவத்தை அறிவோம். இந்த மலை நாட்டு மன்னன் {காந்தார மன்னன் சகுனி} சூதாடுவதில் கொடிய வழிகளை அறிந்தவன். சகுனி எங்கிருந்து வந்தானோ அங்கேயே செல்லட்டும். ஓ பாரதரா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு போரிடாதீர்!" என்றான் {விதுரன்}
துரியோதனன் சொன்னான்,
 "ஓ க்ஷத்தரே {விதுரரே}, நீர் எப்போதும் நமது எதிரிகளின் புகழைப் பெருமையாகவும், திருதராஷ்டிரர் மகன்களை தாழ்த்தியுமே பேசி வருகிறீர். ஓ விதுரரே, உமக்கு யாரைப் பிடிக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் எப்போதும் எங்களை சிறுவர்களாகவே தாழ்த்திக் கருதி
உமக்கு நெருக்கமானவர்களின் வெற்றியை விரும்பி, உமக்கு விருப்பமில்லாவதவர்களின் தோல்வியையும் விரும்பி வருபவர் ஆவீர். உமது நாவும் மனமும் உமது இதயத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. உமது பேச்சில் நீர் காட்டும் பகைமை, உமது இதயத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது
பாம்பைப் போன்ற உம்மை எங்கள் மடியில் வைத்துப் பேணி வளர்த்திருக்கிறோம். வளர்ப்பவருக்கு தீமையை விரும்பும் பூனையைப் போன்றவர் நீர். முதலாளியைக் {எஜமானைக்} காயப்படுத்துவதைவிட கொடும்பாவம் ஏதுமில்லை என்பது ஞானமுள்ளோர் வாக்காகும். ஓ க்ஷத்தரே, எப்படி இந்தப் பாவத்திற்கு நீர் அஞ்சாமல் இருக்கிறீர்?
எங்கள் எதிரிகளை வீழ்த்தியதால் நாங்கள் பெரும் நன்மைகளை அடைந்துள்ளோம். எங்களைக் குறித்து கடும் வார்த்தைகளைப் பயன் படுத்தாதீர். நீர் எப்போதும் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் விருப்பத்திலேயே இருக்கிறீர். இந்த காரணத்திற்காகவே நீர் எங்களை எப்போதும் வெறுக்கிறீர்.
 மன்னிக்க முடியாத வார்த்தைகளைப் பேசுவதால் ஒரு மனிதன் பகைவனாகிறான். மேலும் எதிரியைப் புகழ்ந்து, ஒருவனது சொந்த அணியின் ரகசியங்களைப் பகிரங்கப்படுத்தக்கூடாது. (எப்படியிருந்தாலும் நீர், இந்த விதியை மீறிவிட்டீர்). எனவே, ஓ ஒட்டுண்ணியே {விதுரரே}, நீர் ஏன் இப்படி எங்களைத் தடுக்கிறீர்? நீர் விரும்பியதை எல்லாம் சொல்கிறீர்.
ஓ விதுரரே, எங்களை அவமதிக்காதீர். உமது மனத்தை நாங்கள் அறிவோம். சென்று முதியவர்களின் பாதங்கள் அருகே அமர்ந்து கற்றுக்கொள்வீராக. நீர் அடைந்திருக்கும் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வீராக. மற்றவர்கள் காரியங்களில் கூப்பிடாமலே தலையிடாதீர்
எங்களின் தலைவராக உம்மை நீரே நினைத்துக் கொள்ளாதீர். ஓ விதுரரே, எங்களிடம் எப்போதும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லாதீர். எங்களுக்கு எது நன்மை என்று நாங்கள் உம்மிடம் கேட்கவில்லை. ஓ க்ஷத்தரே, உமது கரங்களில் நிறைய அனுபவித்த எங்களை எரிச்சல் படுத்தாமல் பேசுவதை நிறுத்துவீராக.
ஒரு கட்டுப்பாட்டாளனே உண்டு. இரண்டாமவன் கிடையாது. அவன் தாயின் கருவறையில் இருக்கும் சிசுவையும் கட்டுப்படுத்துவான். நானும் அவனாலேயே கட்டுப்படுத்தப் படுகிறேன். தாழ்ந்த நிலைகளை நோக்கிப் பாயும் நீரைப் போல, அவன் என்னை இயக்கும் வழியில் நான் துல்லியமாகச் செயல்படுகிறேன்.
 கற்சுவற்றில் தனது தலையை மோதி உடைத்துக் கொள்பவரும், பாம்புக்கு தீனி கொடுப்பவரும், தங்கள் சொந்த அறிவின் வழிகாட்டுதல்படி அந்தச் செயல்களில் ஈடுபடுகின்றனர். (ஆகையல், இந்தக் காரியத்தில் எனது அறிவாலேயே நான் வழிகாட்டப்படுகிறேன்). அடுத்தவரை பலவந்தமாகக் கட்டுப்படுத்த முயலும் ஒருவன் பகைவனாகிறான்.
நட்பு ரீதியாகக் கொடுக்கப்படும் ஆலோசனையாக இருப்பின், கற்றவர்களை அதைத் தாங்கிக் கொள்வர். எளிதில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய கற்பூரம் போன்ற பொருளுக்குத் தீயிடுபவன், அதை அணைக்க விரைவாக ஓடினாலும், அதன் சாம்பலைக்கூடக் காண்பதில்லை.
தனது எதிரியின் நண்பனுக்கோ, தனது காப்பாளன் குறித்து எப்போதும் பொறாமையுடன் இருப்பவனுக்கோ, அல்லது தீய மனமுடைய ஒருவனுக்கோ அடைக்கலம் கொடுக்கக்கூடாது. எனவே, ஓ விதுரரே, நீங்கள் எங்கு விரும்புகிறீரோ அங்கு செல்லும். கற்பற்ற மனைவியை, என்னதான் நன்றாக நடத்தினாலும், அவள் தனது கணவனை கைவிட்டுவிடுவாள்" என்றான் {துரியோதனன்}.
விதுரர் திருதராஷ்டிரனிடம், "ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்கு அறிவுறுத்தியதால், தனது தொண்டர்களைக் கைவிடும் மனிதர்களின் நடத்தை குறித்து நீர் என்ன நினைக்கிறீர் என்று (பாகுபாடில்லாமல்) சாட்சி போல இருந்து எங்களுக்குச் சொல்லும். உண்மையில், மன்னர்களின் இதயங்கள் மிக நிலையற்றன ஆகும். முதலில் பாதுகாப்பைக் கொடுத்து, கடைசியாகத் தங்கள் கதாயுதங்களால் அடிப்பார்கள்.
ஓ இளவரசனே (துரியோதனா}, அறிவாற்றலில் முதிர்ச்சியுடையவனாக உன்னை நீ கருதிக் கொள்கிறாய், மேலும், ஓ தீய இதயம் கொண்டவனே, என்னை நீ சிறுபிள்ளையாகக் கருதுகிறாய். ஆனால், முதலில் ஒருவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு பிறகு அவனிடம் தொடர்ந்து குறை கண்டு கொண்டிருப்பவனையே சிறுவனாகக் கருத வேண்டும். நற்குலத்தில் பிறந்த மனிதனின் வீட்டில் இருக்கும் கற்பற்ற மனைவி போல, தீய இதயம் கொண்ட மனிதனை நேர்மையான பாதைக்குக் கொண்டு வர முடியாது. இளம் மங்கையின் அறுபது வயது கணவனுக்கு எப்படி அறிவுரைகள் ஏற்புடையதாக இருக்காதோ அப்படி இந்த பாரதகுலத்தின் காளைக்கும் {துரியோதனனுக்கு} நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே},
 இதன்பிறகும், செயல்களின் நன்மை தீமை குறித்து, நீர் உமக்கு ஏற்புடைய சொற்களைக் கேட்க விரும்பினால், பெண்களிடமும், முட்டாள்களிடமும், முடவர்களிடமும், மேலும் இது போன்ற விளக்கங்களுக்குப் பொருந்தும் மனிதர்களிடமும் கேட்டுக் கொள்வீராக.
ஏற்றுக் கொள்ளும் வார்த்தைகளைப் பேசும் பாவியை இந்த உலகம் பெற்றிருக்கிறது. ஆனால், ஏற்பில்லா வார்த்தைகள் மருந்துகள் போல இருந்தாலும், அதைப் பேசுபவனும், அதைக் கேட்பவனும் மிக அரிதானவர்களாகவே உள்ளனர்.
 உண்மையில், தனது முதலாளிக்கு ஏற்போ, ஏற்பில்லையோ, அதைக் கருதில் கொள்ளாமல், அறம்சார்ந்து நின்று மருந்து போல இருக்கும் ஏற்பில்லாத கருத்தைச் சொல்பவனே ஒரு மன்னனின் உண்மையான கூட்டாளியாவான்.
ஓ பெரும் மன்னா,
நேர்மையாளர்கள் குடிக்கும், நேர்மையற்றவர்கள் தவிர்க்கும் கசப்பான, காரமான, எரிச்சலுள்ள, போதையற்ற, ஏற்பில்லாத, கலகம் செய்யும் மருந்தான அடக்கம் என்ற பானத்தைக் குடிப்பீராக. அதைக் குடித்து, ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீர் உமது புகழை மீட்டெடுப்பீராக.
நான் எப்போதும் திருதராஷ்டிரருக்கும் அவரது மகன்களும் செல்வாக்கையும் புகழையுமே விரும்புபவன். இவை உமக்கு நடக்கட்டும், நான் உம்மைப் பணிகிறேன் (நான் விடைபெறுகிறேன்). பிராமணர்கள் எனக்கு நன்மையை வாழ்த்தட்டும்.
 ஓ குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ள ஒருவன், பார்வையிலேயே விஷம் கொண்ட பாம்புகளை கோபப்படுத்தக்கூடாது. இதுவே நான் என் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கும் பாடம்" என்றான் {விதுரன்}
..
தொடரும்
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment