கடவுளின் குரல்: தொகுப்பு - ஹேமா
06 /10 /2021 குமுதம் இதழிலிருந்து....
"" பழுத்த பக்தருக்குப் பரமாசார்யா சொன்ன அறிவுரை!""
ஒரு சமயம், காஞ்சி மகானை தரிசிக்க வந்திருந்தார் வயதில் மிகவும் பழுத்தவரான ஒரு பக்தர்.
அமைதியாக வரிசையில் நின்று மகான் முன் வந்து நின்ற அவர், கைகளைக் கூப்பிக் கொண்டு பேச ஆரம்பித்தார். "பெரியவா நமஸ்காரம்..ஊர்ல என் பேர்ல ஒரு கேஸ் நடந்துண்டு இருக்கு..அதுல எனக்கு சாதகமாகத் தீர்ப்பு....!"
அவர் சொல்லி முடிப்பதற்கு முன்னமேயே, கையை அசைத்து நிறுத்து என்பதுபோல் ஜாடை காட்டினார் மகான். "நான் என்ன ஹைகோர்ட் ஜட்ஜா..ஒனக்கு சாதகமாகத் தீர்ப்பு எழுதறதுக்கு? என்னால உனக்கு சகாயம் பண்ண முடியாது...!" மகாபெரியவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் கோபம் தெரிந்தது.
செய்வது அறியாமல் அந்த பக்தர் நிற்க, சில நிமிடத்துக்குப் பிறகு மகான் பேசத் தொடங்கினார்.
"உன் பையன் அகாலமா போய்ட்டான்..மாட்டுப் பெண் (மருமகள்) தாங்கமுடியாதத் தூக்கத்துல இருக்கா.. கொழந்தைகள் வேற இருக்கு...அவளுக்கு நியாயமா சேரவேண்டியதைக்கூட கிடைக்கவிடாம கோர்ட்டு கேஸுன்னு அலையவிட்டுண்டு இருக்கே..இதுல உன் பக்கம் சாதகமா வரணும்னு வேற கேட்கறே! இது என்ன நியாயம்?
ஒண்ணு தெரிஞ்சுக்கோ..சொத்தோ பத்தோ எதுவும் துணைக்கு வந்து நிக்காது. கூடவும் வராது. பாவ புண்யம்தான் வரும்! இதை எத்தனை தரம் எத்தனை மகான்கள் சொன்னாலும் யாரும் புரிஞ்சுக்கறதே இல்லை!"
கொஞ்சம் அழுத்தமாகவே சொன்ன மகான், யதா ஸ்தானத்தைவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்த பக்தர், ஏதோ நினைத்துக்கொண்டவர் போல அங்கே இருந்து புறப்பட்டுவிட்டார்.
மகான் சொன்ன வார்த்தைகள் மனதைச் சுட்டதில், கோர்ட்டில் போட்டிருந்த வழக்கை வாபஸ் வாங்கியதோடு, மருமகளுக்குச் சேரவேண்டிய நியாயமான பங்கையும் கொடுத்தார்.
அதன் பிறகுதான் பல சம்பவங்கள் நடந்தன! வயதான அந்த பக்தரின் மனைவி அடுத்த சில மாதங்களில் இறைகதி அடைந்துவிட, பக்தரின் உடன் பிறந்த உறவுகள் சொத்து பணத்தையெல்லாம் பங்குபோட்டுக் கொண்டுவிட, செல்லவும் இடமின்றி நிற்கதியாக நின்றார், அந்த முதியவர்.
விஷயம் அறிந்து ஓடோடி வந்தாள், அவரது மருமகள். யாரை விரட்டி விலக்கி வைக்க நினைத்து வழக்குப் போட்டாரோ அந்த மருமகள், இப்போது அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனாள். தகப்பன் ஸ்தானத்தில் வைத்து அவரை ஆதரித்தாள்.
அடுத்த முறை மகானை தரிசிக்க வந்தபோது, இதையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார் அந்த முதியவர். "பெரியவா அன்றைக்கு மட்டும் நீங்கள் எனக்குப் பாடம் புகட்டலைன்னா, இன்றைக்கு நான் மகாபாவியாக இருந்திருப்பேன்!". நாத்தழுதழுக்கச் சொல்லி, பழுத்த முதியவரான அவர், பரமாசார்யா முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தபோது, மகானின் மகிமையை உணர்ந்து சிலிர்த்தார்கள், அங்கே இருந்தவர்கள் எல்லோருமே.
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!"
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"
No comments:
Post a Comment