அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் :-
திருவல்லிக்கேணி.
தன் பக்தனுக்காகத் தேரோட்டி(சாரதி)யாக எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் காட்சி
தந்த திவ்யதேசம்.
மூலவர் 9 அடி உயரத்துடன், சாரதிக்குரிய மீசையுடன், குடும்ப சமேதராக அருள்புரியும் அற்புதத் திவ்யதேசம்.
ஐந்து பெருமாள்களின் கருவறையைக் கொண்ட திருத்தலம் தான்
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் ~
திருவல்லிக்கேணி. வடிவங்களில், ஐந்து சன்னதிகளில் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தனித்தனியாக சேவை சாதிக்கிறார்.
ஐந்து மூலவர்கள் :-
அருள்மிகு வேங்கடகிருஷ்ணர் (பார்த்தசாரதி)
அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்)
அருள்மிகு இராமபிரான்
அருள்மிகு கஜேந்திரவரதர்
அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).
இந்த ஐந்து மூர்த்திகளின் கருவறைகள் மீதும் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவீக விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் அமைந்துள்ளன.
108 திவ்யதேசங்களில் ஐந்து திவ்யதேசங்களைத் தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றது மிகச் சிறந்த ஒன்றாகும். அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகத் தொன்மையானது.
பார்த்தசாரதி :-
மூலவர் : வேங்கடகிருஷ்ணன்
தாயார் : ருக்மணி
உற்சவர் : பார்த்தசாரதி
கோலம் : நின்ற திருக்கோலம்
திசை : கிழக்கு
விமானம் : ஆனந்த விமானம்
தீர்த்தம் : கைரவிணீசரஸ்
மங்களாசாசனம் : திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி : ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கடேகிருஷ்ணாய நமஹ
ஊர் : திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி வரலாறு :-
பகவான் கண்ணன் துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணாவதாரம் எடுத்த நோக்கம் முடிவுற்றதும் வைகுண்டம் செல்கிறார். அப்போது கலியுகம் தோன்றுவதற்கான தூர்நிமித்தங்கள் ஏற்படுகின்றன.
கலியின் கொடுமையால் பூமியில் அதர்மங்கள் தழைத்தோங்கும் என்பதை அறிந்த, "ஆத்ரேய மகரிசி" தனது குருவான வியாச மகிரிசியை சந்தித்து, நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டு உய்யும் வகையைக் கூறுமாறு வேண்டினார்.
அப்போது வியாசர், அதுவரை தாம் ஆராதித்து வந்த பார்த்தசாரதி பெருமாளின் திருமேனி உருவத்தைத் தந்து தென்பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் "விருந்தாரண்யம்" என்று அழைக்கப்பட்டது.
அதன்படியே ஆத்ரேய மகரிசியும், விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்.
கலியின் கொடுமையிலிருந்து பூமியைக் காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமியை இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர்.
வேங்கடவன் திருநாமம் :-
பிற்காலத்தில் "துண்டீரம்" என்ற நாட்டை "சுமதி" என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். துண்டீரம் என்பதே துண்டீர மண்டலம் என ஆகி, அதுவே திரிந்து பிற்காலத்தில் "தொண்டை மண்டலம்" ஆயிற்று என்பர்.
அரசன் "சுமதி" திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள "திருவேங்கடமுடையான்" மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான். இந்த அரசனுக்கு, பார்த்தனுக்கு (அர்ச்சுனனுக்கு) சாரதியாக (தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
எனவே, சுமதி தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான். அவன் பக்திக்கு மனமிறங்கிய "ஏழுமலையான் வெங்கடேசர்" அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.
அதன்படியே மன்னன் சுமதி விருந்தாரண்யம் வந்து ஆத்ரேய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக்வண்டு மனம் குளிர சேவித்தான்.
திருமலையில் உள்ள வேங்கடநாதனே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப் போல் உணர்ந்தான். எனவே, "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான்.
அன்று முதல் இன்று வரை இத்திருக்கோவில் மூலவருக்கு "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.
தரிசனம் பெற்றவர்கள் :-
தியாக முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர்.
அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார் பாரதியார். சங்கீதமேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணிதமேதை இராமானுஜம் ஆகியோர் இத்தல பெருமானை வழிபட்டுள்ளனர்.
வடுக்கள் கொண்ட உற்சவர் :-
தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் முகத்தில் இன்றும் தரிசிக்கலாம். திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.
மீசையுடன் பெருமாள் :-
பார்த்தசாரதி பெருமாள் சாரதிக்கே உண்டான மீசையுடன் காணப்படுகிறார். மீசை வைத்த பெருமாளை நாம் வேறு எங்கும் காண முடியாது. தேரோட்டிக்கு கம்பீரத்தை உணர்த்துவது மீசை. இவருக்கு "மீசை பெருமாள்" என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசிக்கு முன் ஆரம்பிக்கும் பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து நத்தாம்நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.
சக்கரம் இல்லாத சுவாமி :-
பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோவிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி கொடுத்திருந்தார் கிருஷ்ண பரமாத்மா.
எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி கொடுக்கிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். இத்தகைய பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.
பொதுவாக நான்கு கரங்களில் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணராகிய மானிட ரூபத்தில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.
தாயார் தரிசனம் :-
முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிசி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது அங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார்.
அவளுக்கு திருமணப்பருவம் வந்த போது, திருமால் அரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார்.
குளத்திலுள்ள அல்லி மலரில் தோன்றிய தாயார் என்பதால் "திரு + அல்லிக்கேணி - திருவல்லிக்கேணி" என்று ஊர் பெயர் உண்டானது.
குடும்பத்துடன் கிருஷ்ணர் :-
மனிதர்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இங்குள்ள பெருமாள் காட்சி தருகிறார்.
மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணன், அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள் அர்ச்சுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மணி தாயார் இருக்கிறார்.
வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் இருக்கின்றனர்.
அருள்மிகு மனநாதர் சுவாமி :-
பிருகு முனிவர் பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருக்கோலத்தில் வேதவல்லித் தாயாரோடு இத்தலத்திலேயே நிரந்திரமாகக் காட்சி கொடுக்கும்படி வேண்டினார்.
பெருமாளும் அவ்வாறே செய்ய திருவுள்ளம் கொண்டார்.
இதைக் கண்டு மனம் மகிழ்ந்த அன்னை வேதவல்லித் தாயார் திருமாலை "மனநாதன்" என்று அழைத்ததால் சுவாமிக்கு இந்த திருநாமமே உண்டானது.
அருள்மிகு இராமபிரான் சுவாமி :-
ஒரு சமயம் "கார்க்கியர்" என்ற மகரிசி மதுமானின் குடிலுக்கு வந்து, திருமாலின் இராமவதாரத்தைப் பற்றி உபதேசித்தார்.
அதைக் கேட்ட மதுமானுக்கு ராமபிரானையும், சீதா பிராட்டியையும் தம்பிகள் புடைசூழ சேவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அவரின் கனவில் தோன்றிய பரந்தாமன், விருந்தாரண்யம் சென்று தவம் செய்தால் ஆசை நிறைவேறும் என்றார்.
அவன் தவத்திற்கு மனமிறங்கிய திருமால் சீதாபிராட்டியுடன், தம்பிகள் புடைசூழ காட்சி தந்தார்.
மதுமானும் நிரந்தமாக இங்கு அருள்புரியும் படிக் கேட்க பெருமாளும் இராமக் கோலத்தில் அருள்புரிவதாக ஐதீகம்.
👣👣👣👣👣👣
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment