ப்ராணாயாமம்:
நம் ஸரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவான ப்ராணனை அடக்குவது ப்ராணாயாமம். ப்ராணாயாமம் செய்யசெய்ய நம் பாபம் விலகுகிறது. தர்ம ஶாஸ்த்ரம் "ப்ராணாயாமத்தை ப்ரதி தினம் 12 (அல்லது 16) முறை செய்பவர் ஸகல பாபங்களும் அகன்று சுத்தமாவர்" என்று கூறுகிறது. கல்பஸூத்ரம் ' ப்ராயச்சித்தம் ப்ராணாயாம" என்று இதை ஒரு ப்ராயச்சித்தமாக வர்ணிக்கிறது. இது நம் நாடிகளில் உள்ள தோஷங்களை நீக்குகிறது.
ஸங்கல்பத்தில் 1, அர்க்யஸங்கல்பத்தில் 1, ஆதித்ய உபாஸனையில் 1, ஜபஸங்கல்பத்தில் 1, காயத்ரிக்கு முன்பு 10, உபஸ்தாந ஆரம்பத்தில் 1, ஆக 15 ப்ராணாயாமம், ஒவ்வொரு வேளையிலும் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய மந்த்ரத்துடன் மூச்சை அடக்குவது ஸகர்ப்ப ப்ராணாயாமம். இது கர்ம அங்கமாகச் செய்வது;
ஜபம், தியானம் இல்லாமல் மூச்சை மாத்ரம் அடக்குவது அகர்ப்ப ப்ராணாயாமம். இது மனத்தை அடக்கச் செய்வது.
கந்தமூலம் என்ற மூலாதாரத்திலிருந்து கிளம்பி உடலில் சிறிதும் பெரிதுமான 72000 நாடிகள் இருக்கின்றன. வீணாதண்டம் எனப்படும் முதுகுத் தண்டின் அடியிலிருந்து கிளம்பி சிரஸ்ஸுக்குப் போகிற ஸுஷும்னா நாடியின் இடது பக்கம் செல்வது இடா நாடி, வலது பக்கம் செல்வது பிங்களா நாடி. இவை இரண்டும் கந்தமூலத்திலிருந்து புருவம் வரை நேராக வருகின்றன. அங்கிருந்து இடா இடது நாஸிகையையும், பிங்களா வலது நாஸிகையையும் வந்தடைகின்றன.
- இடது மூக்கு வழியாக மூச்சை இழுத்து பூரகம் செய்து, ஸுஷும்னையில் நிறுத்தி கும்பகம் செய்து, வலது மூக்கு வழியாக மூச்சை விட்டு ரேசக ப்ராணாயாமம் செய்யவேண்டும். இம்மூன்றும் சேர்ந்தே ஒரு ப்ராணாயாமம் ஆகும். இப்படிச்செய்ய இயலாதவர் இரு நாஸிகளையும் அடைத்து ப்ராணாயாம மந்திரத்தை ஜபித்துக் கும்பக ப்ராணாயாமமாவது செய்ய வேண்டும்.
- பூரகத்திலும் ரேசகத்திலும் மெதுவாக சப்தம் கேளாமல் வாயுவை இழுத்து விடவேண்டும்.
- பூரகம் செய்யும்போது நாபியின் நடுவில் ப்ரஹ்மாவையும், கும்பகத்தில் ஹ்ருதயத்தில் விஷ்ணுவையும், ரேசகத்தில் நெற்றியில் சிவனையும் த்யானம் செய்யவேண்டும்.
- ப்ராணாயாமம் செய்யும்போது , ஆள்காட்டிவிரலையும், நடுவிரலையும் மடக்கிக்கொண்டு, கட்டைவிரலால் வலது நாஸியையும், மோதிரவிரல், சுண்டுவிரல்களால் இடது நாஸியையும் பிடித்துக்கொண்டு செய்ய வேண்டும். ஓவ்வொரு ப்ராணாயாமம் முடிந்தபின் வலது காதைத் தொடவேண்டும். வலது காதில் கங்கை உள்ளதால், கங்காஜலத்தால் கையைச் சுத்தமாக்கிக் கொள்கிறோம்.
- ப்ராணாயாமம் செய்யும்போது கூறும் மந்திரத்தால்:
- ப்ரணவத்தால், ப்ரஹ்மனையும்,
- ஏழு வ்யாஹ்ருதிகளால், பரமனால் படைக்கப்பட்டு பரமனாகவே உள்ள ஏழு லோகங்களையும்,
- காயத்ரியால், நமது புத்திக்குச் சக்தியளிக்கும் பரமாத்மாவையும்,
- காயத்ரீசிரஸ் மூலமாக, ஜ்யோதிஸ்ஸாகவும், ரஸமாகவும், முவ்வுலகமாயுள்ள பரப்ரஹ்மத்தையும்
த்யானம் செய்கிறோம். இச்சிறந்த பரமாத்ம ஸ்வரூப த்யானத்தால் ஸகல பாபங்களும் அகலும்.
No comments:
Post a Comment