"சந்திர மொளலீஸ்வரர் கைங்கர்யம்டா... "
ஸ்ரீ கணேஸ சர்மா அவர்களின் உபந்யாஸத்திலிருந்து.....
மாப்பிள்ளை ராமமூர்த்திங்கிற பக்தர். அவர்தான் காஞ்சி மடத்து பூஜைகட்டில சந்திர மொளலீஸ்வரர் நைவேத்திய, பூஜை பாத்திரங்களை தேய்க்கிறவர்.
ரொம்ப பரிதாபமா இருக்கும். மடத்தில பார்த்தேள்னா அண்டா, அண்டாவா எல்லாத்தையும் சமைக்கணும். கரி அடுப்பு, பித்தளை பாத்திரம். பூஜை எல்லாம் முடியரத்தே 3 மணி, 4 மணி ஆயிடும். சாப்பிட்டு, சித்த தலையை சாச்சா போதும்னு இருக்கும். அது ஆச்சோ இல்லையோ சாயந்திர பூஜைக்கு ரெடி ஆகணும். ராத்திரி பூஜை எவ்வளவு மணிக்கு முடியும்னு தெரியாது. அதுக்கப்பறம் கிளீன் பண்ணிட்டு படுத்துண்டா பொழுது விடிஞ்சுடும்.
ஒரு நாள் மத்யானம், நல்ல வெய்யில். கிணத்தடியில உக்காந்துண்டு எல்லா பாத்திரத்தையும் போட்டுண்டு தேச்சிண்டிருக்கார் ராமமூர்த்தி. இத்தனை பாத்திரங்களையும் கரி போக தேய்த்து அலம்பி வைக்கணும். இந்த காலம் போல ஸ்விட்ச் போட்டா தண்ணி வர காலம் இல்லை. கிணத்திலிருந்து தண்ணி இழுக்கணும், அலம்பி வைக்கணும்.
ராமமூர்த்தி ரொம்ப சாது. வாயே திறக்க மாட்டார். அப்படி இருக்கும் போது பார்த்தா, யாரோ நடந்து வர சப்தம். பாரத்தா பெரியவா.
"ராமமூர்த்தி உன்னை பார்த்தா பாவமா இருக்குடா; இத்தனை பாத்திரம் தேச்சுண்டு இருக்கே; ஒண்ணு பண்ணுடா, நீ எல்லாத்தையும் தேச்சு, தேச்சு வை; நான் கிணத்திலிருந்து தண்ணி இழுத்து அலம்பி உள்ளே எடுத்துண்டு போய் கவுத்து வைக்கிறேண்டா!"
ராமமூர்த்தி நடுநடுங்கிப் போய்விட்டார். தலையெழுத்தா பெரியவாளுக்கு? எதுக்கு நாங்க இருக்கோம்? இது பெரியவா பண்ற காரியம் இல்லை.
"ஏண்டா! நான் பண்ணக் கூடாதா? சந்திர மொளலீஸ்வரர் கைங்கர்யம்டா? பூஜை பண்ணினாதான் கைங்கர்யமா? நீ ஒண்டிக் கட்டையா இருக்க; இத்தனை பாத்திரத்தையும் தேய்த்து அலம்பி வைக்கணும். வெய்யிலா வேற இருக்கு. தண்ணி இழுத்து அலம்பி உள்ள கொண்டு போய் கவுக்குறேன்டா! நீ பண்ற அந்த கைங்கர்யம் ஒரு நாள் எனக்கு பாக்யம், நானும் பண்றேனே!"
சொல்லிவிட்டு சும்மா நிற்கவில்லை. தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி பாத்திரங்களை உள்ளே எடுத்துண்டு போய் கவுத்து வைக்கிறார்.
🙏
No comments:
Post a Comment