Monday, June 14, 2021

Nammazhwar

இடம்: திருக்கோளூர்
நேரம்: ஒரு இனிய மாலை நேரம்
(ஒரு வைணவப் பெரியவர், தன் சீடர்களோடு ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். ஊர் எல்லை அருகே, ஒரு இளம் பெண் கையில் சில மூட்டைகளுடன் எதிரே வந்து கொண்டிருக்கிறாள். இதைக் கவனித்த அந்தப் பெரியவருக்கு, ஒரு விநாடி குழப்பம், பின்னர் ஐயம்! நேரே அந்தப் பெண்ணிடம் செல்கிறார் ...)
பெரியவர்: பெண்ணே! மூட்டைகளுடன் எங்கு சென்று கொண்டிருக்கிறாய், இரவு துவங்கும் இந்த வேளையிலே?
பெண் (அந்தப் பெரியவரை வணங்கி): இந்த ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கிறேன்!
பெரியவர் ('சந்தேகப் பட்டது சரிதான்' என்று நினைத்து): ஏனம்மா?
பெண்: இந்த ஊரில் இனிமேல் என்னால் இருக்க முடியாது!
பெரியவர் (அதிர்ச்சியுடன்): இந்த ஊரை விட்டு யாரும் போகமாட்டார்கள் என்று நம்மாழ்வார் சொன்னது பொய்யோ?
பெண்: என்ன? நம்மாழ்வார் உங்களிடம் சொன்னாரா?
பெரியவர்: 'எல்லோரும் திருக்கோளூருக்கு வருவார்கள்' என்று நம்மாழ்வார் சொன்னதால் தானே அடியேனும் சீடர்களும் இங்கு வந்தோம்! இங்கு வந்தால் வேறு விதமாய் இருக்கின்றதே?
பெண் (சற்றுக் குழம்பி): நம்மாழ்வார் பரமபதம் சென்று பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதே? அவர் உங்களிடம் எப்படிச் சொல்லி இருக்க முடியும்?
பெரியவர்: இல்லையம்மா! அவர் தானே தன் பாசுரத்தில், 'திருக்கோளூருக்கு எல்லோரும் வருவார்கள், ஆனால் செல்ல மாட்டார்கள்!' என்றாரே?
(பாசுரத்தைச் சொல்கின்றார் பெரியவர் ...)
*உண்ணும் சோறு பருகு நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்* எம்பெருமான் என்றென்றே* கண்கள் நீர் மல்கி*
மண்ணினுள் அவன் சீர்* வளம் மிக்க அவனூர் வினவி*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே!
திருவாய்மொழி 6-7-1
பெரியவர்: அதுவும், பெண்கள் புகும் ஊர் (இளமான் புகும் ஊர்) என்றாரே ஆழ்வார்! பெண்கள் 'வெளியே செல்லும் ஊர்' என்று சொல்லவே இல்லையே?
(பாசுரத்தைக் கேட்ட அந்தப் பெண், சற்றுத் தயங்கி நிற்கின்றாள் ...)
பெரியவர்: சரி ... நீ எதற்கு இந்த ஊரில் இருக்க முடியாது என்கின்றாய்?
பெண்: இந்த ஊரில் இருக்க எனக்குத் தகுதியே இல்லை!
பெரியவர்: அப்படி என்ன தகுதி வேண்டும், திருக்கோளூரில் இருப்பதற்கு?
(அந்தப் பெண் சொல்லத் துவங்குகின்றாள் - 81 வரிகள் ...)
அழைத்துவரச் சென்றேனோ அக்ரூரரைப் போலே!
...
பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
...
ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
...
இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
...
(இதைக் கேட்கின்ற பெரியவர் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய, பிரமை பிடித்து நிற்கின்றார் - அந்தப் பெண் முடித்த பின்பும், வெகு நேரம் வரை!
அந்தப் பெண் மீண்டும் உரக்கக் கூப்பிட்டவுடன் தான், பெரியவருக்கு நினைவு திரும்புகின்றது ...)
பெண் (வருத்தத்துடன்): பெரியவரே! முனிவர்களும், ஆழ்வார்களும், ஆசாரியர்களும், அடியவர்களும் செய்ததில் ஒன்று கூட அடியேன் செய்யவில்லையே! எனவே, அவர்களும், வைத்த மாநிதியும் இருக்கும் இந்தப் புகழ் பெற்ற திருக்கோளூரிலே அடியேன் இருப்பதற்குத் தகுதியே இல்லை! எனவே இங்கிருந்து புறப்பட முடிவு செய்துள்ளேன்!
(திகைத்து நிற்கின்றார் அந்தப் பெரியவர் ...)
உண்மையிலேயே அந்தப் பெண்ணிற்குத் தகுதி இல்லையா?
இந்தப் பெண்ணின் மன நிலையும், திருமாலை அருளிச் செய்யும்போது, தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு இருந்த மன நிலையும் சற்றே ஒத்து நோக்கத் தக்கது.
'என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை; எனவே எம்பெருமான் எனக்குக் காட்சி தரப் போவதில்லை!' என்று அடிப்பொடியார், அரங்கன் சன்னிதியில் இருந்து விலகிச் செல்கின்றார் [...வெள்கி, போய், விலவறச் சிரித்திட்டேனே - திருமாலை-34].
எங்கே இருக்கின்ற உண்மையான ஒரே தொண்டனும் விலகிச் சென்று விடுவானோ என்று பயந்து, அரங்கன் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் கூவி அழைத்தானாம்!
"ஆழ்வீர்! போகோதீர்! திரும்பி வாரும்! எப்போது நீர் 'எனக்குத் தகுதியில்லை' என்று நினைக்கும் நிலைக்கு வந்து விட்டீரோ, அப்போதே உமக்கு எம்மை அடையத் தகுதி வந்தது" என்று கூறுகின்றான்.
தான் உலகளந்த கோலத்தை அவருக்குக் காட்டி, அவரைத் தன் பக்கம் சேர்த்துக் கொள்கின்றான்.
அரங்கனைக் கண்டு கொண்ட ஆழ்வார், அடுத்த பாசுரத்தில் தான் உலகளந்த காட்சியைப் பாடி மகிழ்கிறார் [தாவி அன்று உலகமெல்லாம் தலை விழாக் கொண்ட எந்தாய் ...' - திருமாலை 35])
இந்தப் பெண்ணின் தகுதிக்கு வருவோம் ...
தொண்டரடிப்பொடி ஆழ்வார் போலவே, 'எனக்குத் தகுதியே இல்லை' எனும் மன நிலை வந்தவுடனேயே அந்தப் பெண்ணுக்கும் அவனை அடையத் தகுதி வந்து விட்டது!
ஆனால், எம்பெருமான் வரவில்லை! பதிலாக, எம்பெருமானார் வந்து விட்டார்!
ஆம்! அந்த வைணவப் பெரியவர் வேறு யாருமல்ல! ஸ்ரீ இராமாநுஜர்!
அந்தப் பெண்ணின் பெயர் குறிக்கப்படாவிட்டாலும், அவள் கூறிய 81 அழகான வரிகள், 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்' என்று அழைக்கப் படுகின்றது ('திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்' என்றும் கூறப்படுவதுண்டு)! வைணவத்தின் சாரம் என்றே இதனைக் குறிப்பிடலாம்!
(இருவரில் யார் முதலில் வரவேண்டும்? எம்பெருமானா, எம்பெருமானாரா?
நாம் தவறு செய்யும் நேரங்களில், நம் உள்ளே இருக்கும் அவன் [ஆத்மா/மனசாட்சி/...], 'இது இவன் விதி, முன் வினைப் பயன்; அனுபவிக்கிறான்' என்று எதுவும் செய்யாது இருந்து விடுவான். ஆனால், நம் ஆசானோ, நாம் செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டி, நம்மை நல்வழிப் படுத்துகின்றார்! எனவே, உள்ளே இருக்கும் அவனை விட, வெளியே இருக்கும் ஆசானே நன்று!)
இந்தப் பெண் ஊரை விட்டுச் செல்வது கண்டு பொறுக்காத வைத்த மாநிதிப் பெருமானே இவளுக்கு ஆசானாக, எம்பெருமானாரையே அனுப்பி வைக்கின்றான்!
ஆசானே எதிரே வந்து ஆட்கொள்ளும்படி இருந்த அந்தப் பெண் புண்ணியம் செய்தவள் தானே?

No comments:

Post a Comment