திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்
பாடல்
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)
சீர் பிரித்த பின்
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலம் மிசை நீடு வாழ்வார்.
பொருள்
மலர் மிசை = மலரின் கண்
ஏகினான் = சென்று அடைந்தவனது
மாண் = மாட்சிமை பொருந்திய
அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது
நிலம் மிசை = நிலத்தின் கண்
நீடு வாழ்வார் = நீண்ட நாள் வாழ்வார்
பரிமேல் அழகர் இல்லாமல் இந்த குறளின் உரையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
இதில் என்ன இருக்கிறது என்று நினைப்போம். "மலர் மிசை " = இதில் மிசை என்பது ஒரு அசைச் சொல். அதை விட்டு விடலாம். மலரின் கண். எந்த மலர்? தாமரை, அல்லி , மல்லிகை என்று ஏதாவது ஒரு மலரா என்றால் பரிமேல் அழகர் உரை எடுக்கிறார் பாருங்கள். பிரமிக்க வைக்கும் உரை.
ஒரு கட்சித் தலைவர், ஒரு நிறுவனத்தின் மேலாளார் வருகிறார் என்றால் அவரை வரவேற்று ஒரு நல்ல இடத்தில் அவருக்கு வசதி செய்து கொடுப்பது தானே வழக்கம். ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஒரு சின்ன ரூமில் போய் தங்குவாரா? ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தானே தங்குவார்.
உலகம் அனைத்துக்கும் தலைவரரான இறைவவன் தங்குவது என்றால் எங்கே தங்குவான்?
"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் " என்று பரிமேலழகர் உரை செய்கிறார். அதாவது, மலர் என்றால் சாதாரண மலர் அல்ல. உள்ளக் கமலம் என்கிறார். அதுவும் எல்லோர் உள்ளமும் அல்ல. அன்பால் ஆண்டவனை நினைப்பவரது உள்ளம் என்ற மலரின் கண் என்கிறார். நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா?
சரி. அன்பால் நினைக்கலாம். நாம் நினைக்கும்படி இறைவன் இருப்பானா? அவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை எப்படி நினைப்பது? நினைக்காத போது எப்படி இறைவன் நம் உள்ளக் கமலத்தில் வருவான்? நம்மால் நினைக்கும் படி இருந்தால் இறைவன் நம் அறிவுக்கு உட்பட்டவனாகி விடுவானே? என்ற கேள்விகளுக்கு அவர் உரை செய்கிறார். "அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு"
நமக்கு இறைவன் எப்படி இருப்பான் என்று தெரியாது. நாம் எப்படி நினைத்தாலும் அவன் அப்படியே வருவான். பிள்ளையாராக நினைத்தால் பிள்ளையாராக., ஜோதியாக நினைத்தால் ஜோதியாக, எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். நினைத்த வடிவில் வருவான். கல்லாக நினைத்தால் கல்லாகவே வருவான். மரம், செடி, கொடி , பூ, பழம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எழுத்து தெய்வம், இந்த எழுது கோலும் தெய்வம் என்பான் பாரதி. உலகம் முழுவதும் இறைவன் படைப்பு என்றால், அவனின் அம்சம் எல்லாவற்றிலும் இருக்கும் தானே. அதனால், அன்பர்கள் எந்த வடிவில் நினைக்கிறார்களோ அந்த வடிவில் வருவான்.
சரி, நான் இப்போது நினைக்கிறேன். அவன் எப்போது வருவான்? இன்றே வருவானா ? கொஞ்ச நாள் ஆகுமா? ஆகும் என்றால் எவ்வளவு நாள் ஆகும்? "அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், "
விரைந்து வருவான் என்கிறார்.
"ஏகினான்" என்ற சொல்லைப் போட்டதன் மூலம், இறைவன் விரைவாக வந்து சேருவான் என்பது பெறப் பட்டது என்கிறார் உரை ஆசிரியர். நாம் எந்த ஒரு செயலைச் செய்வதானாலும் அதை மூன்று வழிகளில் செய்யலாம். மனம் அல்லது மொழி அல்லது உடம்பால் செய்வது. மனதில் நினைக்காத ஒன்றை மொழியோ அல்லது உடம்போ செய்யாது. முதலில் மனதில் ஒரு எண்ணம் எழ வேண்டும். அப்படி எழுந்த பின் அது சொல்லாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படும். அறம் செய்ய விரும்பு என்றால் ஔவை. அறம் செய் என்று சொல்லி இருக்கலாமே? விரும்புதல் மனதின் செயல். மனதில் ஒரு இரக்கம் எழ வேண்டும், உதவி செய்யும் அன்பு/கருணை பிறக்க வேண்டும். பின் அறம் தானாக நிகழும். நமது வழிபாடுகளில், பெரும்பாலானவை முடியும் போது சாந்தி, சாந்தி, சாந்தி என்று முடிப்பார்கள். ஏன் மூன்று முறை சொல்லவேண்டும்? மனமும், மொழியும், உடலும் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக மும்முறை சொல்கிறார்கள்.
அது போல, இறைவனையும் மன மொழி மெய்களால் வழி பட வேண்டும். "அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண்" சேர்தல்- இடைவிடாது நினைத்தல்.அது எப்படி இடை விடாமல் நினைக்க முடியும். வேறு வேலை இல்லையா? இல்லறக் கடமைகள் இல்லையா?
முதன் முதலாக பயிற்சி செய்யும் போது ரொம்ப பதற்றமாக இருக்கும்.
Steerring, clutch, brake, accelerator, horn, indicator, revivew mirror mirror, side view mirror, gear shifting, traffic signal, traffic around you...
இப்படி பல விஷயங்களை ஒரே சமயத்தில் கண்காணித்து வண்டி ஓட்ட வேண்டும். தளர்ந்து போவோம்.அதுவே கொஞ்ச நாள் பழகி விட்டால், வண்டி பாட்டுக்கு ஓடும், நீங்கள் கைபேசியில் பேசுவீர்கள், பாட்டை மாற்றுவீர்கள், அருகில் இருப்பவரிடம் பேசிக் கொண்டு இருப்பீர்கள்....இது ஒரு பக்கம் நடக்க, கால் accelerator ஐ அழுத்தும், கை கியரை மாற்றும், இன்னொரு கை horn அடிக்கும், கண் முன்னாலும் பின்னாலும் வரும் போக்குவரத்து நெரிசலை கவனிக்கும். எப்படி முடிகிறது ? பழக்கம். பழகி விட்டால், "இடையாறது நினைக்க முடியும்". "இமைப் பொழுதும் மறக்காமல் நினைக்க முடியும்"."தாவி விளையாடி இரு கை வீசி நடந்தாலும் தாதி மனம் நீர் குடத்தே தான்" என்பார் பட்டினத்தார். பெண்கள் பானையில் நீர் எடுத்து தலையின் மேல் வைத்துக் கொண்டு நடந்து வருவார்கள். கால் நடக்கும், கை வீசி நடப்பார்கள், வாய் பேசிக் கொண்டிருக்கும் இருந்தாலும் மனம் தலையின் மேல் உள்ள பானையை மறக்காது.
பக்தி என்றால் காலையில் ஒரு பத்து நிமிடம், சாயங்காலம் ஒரு பத்து நிமிடம், நாள் கிழமை என்றால் இன்னும் கொஞ்ச நேரம், வருடத்துக்கு ஓரிரண்டு தடவைகள் பெரிய புண்ணிய தலங்களுக்குப் போய் வருவது என்பது அல்ல. இடையறாது நினைத்தல் தான் பக்தி.
பழக்கப் படுத்தி விட்டால், நாம் சொல்லாவிட்டாலும், நாக்கு பாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment