Wednesday, June 2, 2021

Kamakshi - Periyavaa

காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !

மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். 

राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता

मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् ।

श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सतां

एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥

ராகா சந்திர ஸமான காந்தி வதனா நாகாதி ராஜஸ்துதா

மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஷ வாக்வைபவம்

ஸ்ரீ காஞ்சீநகரீ விஹார ரஸிகா ஷோகாபஹன்த்ரி ஸதாம்

ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே

மகாபெரியவா விளக்கம்

இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவென்றால், "ராகா சந்திர ஸமான காந்தி வதனா" – "முழுநிலவினை போன்ற காந்தி கொண்ட முகம், அம்பாளுடைய முகம். இது ஒரு பூரணமான உவமை, ஒரு உவமை சொல்வதென்றால் , ஒரு உவமை இருக்கவேண்டும், உவமைஉருபு இருக்கவேண்டும், உவமேயம் இருக்கவேண்டும், அந்த உவமை பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும், அப்படி இந்த "ராகா சந்திர ஸமான காந்தி வதனா " அப்படி என்றால், பூரண சந்திரன், பௌர்ணமி அன்று வரக்கூடிய முழுநிலவினை போல காந்தி, கொண்ட முகம், அம்பாளுடைய முகம். காஞ்சிபுரம் சென்றால், அன்னை காமாக்ஷியின் முகம், அந்த சிலை கருப்பு சிலையாக இருந்தாலும் கூட, பால் நிலவு போன்ற அந்த காந்தி நிரம்பியதாக இருப்பதை தான் இந்த பாட்டில் சொல்கிறார்.

"நாகாதி ராஜஸ்துதா", சொர்கத்திற்கு அதிபதியான இந்திராதி தேவர்களெல்லாம் அம்பாளை ஸ்தோத்ரம் செய்கின்றனர்.

அம்பாள் பக்தர்களுக்கே ஒரு வழக்கம் என்னவென்றால் எல்லா தெய்வங்களும் எங்கள் காமாக்ஷியைத் தான் நமஸ்காரம் செய்கிறார்கள், ஸ்தோத்திரம் செய்கிறார்கள் என்று கூறுவதில் ஒரு உத்சாகம், ஒரு சந்தோஷம். அது வாஸ்தவம் தானே, காஞ்சிபுரத்தில், காமாக்ஷி தான் ராஜராஜேஸ்வரி. அங்கே வேறு எந்த சிவன் கோவிலிலும் அம்பாள் சன்னதி தனியாக கிடையாது. அங்கு நூற்றியெட்டு சிவன் கோவில் இருக்கிறது என்று சொல்வார்கள். பிரதானமான பெரிய சிவன் கோவில்களே இருபது, இருபத்திஐந்து இருக்கின்றன. எல்லா சிவன் கோவில்களுக்கும் அம்பாள் சன்னதி காமாக்ஷி தான். ஏகாம்பரேஸ்வரர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், அங்கு வரதராஜ பெருமாள் கோவில் வரைக்கும், அந்த க்ஷேத்ரத்தில் இருக்கிற எந்த கோவிலில் ஒரு உத்சவம் நடந்தாலும், அந்த ஸ்வாமி புறப்பாடு செய்து காமாக்ஷி கோவில் வந்து, காமாக்ஷி அம்மன் கோவில் சுற்றி உள்ள நாலு மாட வீதிகளிலும் பிரதக்ஷணம் செய்து கொண்டு செல்வார்கள். அப்படி ஒரு வைபவம் காமாக்ஷி அம்பாளுக்கு.

அதனால் அம்பாளை எல்லாருக்கும் மேலாக இப்படி கூறுவதில், அம்பாள் பக்தர்களுக்கு ஒரு உத்சாகம். சங்கரர் கூட "பிரம்மா விஷ்ணு எல்லாரும் பிரளயத்தில் லயமாகிவிடும் போது, ஆலஹால விஷத்தினை உண்ட பின்னும் பரமேஸ்வரன் எப்படி தீர்காயுளடன் இருக்கிறார் என்றால், ஹே அம்மா, நீ காதில் அணிந்துள்ள பனை ஓலை தானே காரணம்" என்று கூறுகிறார். அதாவது, "தவ ஜனனி தாடங்க மஹிமா", அம்பாளுடைய மாங்கல்ய பலம் என்று கூறுவார்களே, அந்த பதிவ்ரத்யத்தால், தபசினால் பரமேஸ்வரன் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று கூறுகிறார். ஆதி சங்கரர்.

இதேபோல, ஆனந்த சாகரஸ்த்வம் என்று ஒரு ஸ்லோகம். நீலகண்ட தீக்ஷிதர் என்று ஒரு மஹான் பண்ணினது. அப்பைய தீக்ஷிதருடைய தம்பி பேரர் அவர். அவர் மீனாக்ஷி தேவியின் பக்தர். அவர் மிகவும் வேடிக்கையாக சொல்வார். இந்த காமனை எரித்தார் என்று பரமேஸ்வரனுக்கு பெயர். ஆனால், காமனை எரித்தார் என்றால், நீதான் அவரது பாதி உருவம். நெற்றிக்கண்ணில் இடது பக்கம் உனக்கு தந்துவிட்டார். அப்படி இருக்க காமனை எரித்தார் என்கிற பெயரில் பாதி புகழ் உனக்குத்தானே வரவேண்டும். சரி அதுவாவது போகட்டும், இந்த காலனை காலால் உதைத்தார் என்கிற பெயரை அவருக்கு எப்படி தரமுடியும்? இடதுகாலால் தானே உதைத்தார், அந்த பெருமை முழுதும் உனக்குத்தானே வரவேண்டும் என்று கூறுகிறார். இது போல, அம்பாள் பக்தர்களுக்கு அம்பாளுக்கு தான் எல்லா பெருமைகளும் வரவேண்டும், எல்லாரும் அம்பாளுக்கு தான் நமஸ்காரம் செய்கிறார்கள் என்று கூறுவதில் ஒரு சந்தோஷம்.

அடுத்த வரி "மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஷ வாக்வைபவம்" ஸுரதுநீ என்றால் கங்கா தேவி, எப்படி கங்கை பிரவாகமாக போகிறாளோ, அது போல ஒரு ஊமையை கூட, கங்கா பிரவாகம் போல பேச வைக்கும் அந்த அனுக்ரஹம் அம்பாளால் பண்ண முடியும். இந்த இடத்தில் மூக கவி தன்னுடைய அனுபவத்தினை கூறுகிறார். அவர் ஊமையாக இருந்து இப்பேற்பட்ட கவிதைகளை பண்ணக்கூடிய அனுக்ரஹம் அம்பாளினால் தானே அவருக்கு கிடைத்தது.

"ஸ்ரீ காஞ்சீநகரீ விஹார ரஸிகா", காஞ்சி நகரத்தில் வசிப்பதிலேயும், விளையாடல்கள் பண்ணுவதிலேயும், மிகவும் ரஸிகா. சந்தோஷாமாக அந்த காஞ்சிபுரத்தில் அம்பாள் இருக்கிறாள்.

"ஷோகாபஹன்த்ரி ஸதாம்", சாதுக்களுக்கு ஏதாவது ஒரு வினையினால் ஒரு துக்கம் வந்ததென்றால், "ஜகதம்பா, காப்பாற்று" என்று சொல்லி காமாக்ஷிக்கு ஒரு நமஸ்காரம் செய்தால், அதனை போக்கிவிடுவாள். "ஸதாம்" சாதுக்களுக்கு சோகத்தினை போக்குகிறாள் என்பதை, அபிராம பட்டரும், அபிராமி அந்தாதியில் "தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்" என்ற பாட்டில் கூறும்போது, "அன்பர் என்பவர்க்கே" என்று கூறுகிறார். அது போல நாமும் ஒரே ஒரு முயற்சி செய்யவேண்டும், அந்த அம்பாளுடைய சரணாரவிந்தங்களை பிடித்து கொள்வது என்பது நாம் செய்யவேண்டும். அந்த அன்பை நாம் காண்பிக்க வேண்டும். அப்போ நமது கஷ்டங்ககளை போக்கிவிடுவாள்.

"ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே" அம்பாளுடைய பெருமையை சொல்லும் போது, "ஏகா புண்ய பரம்பரா பசுபதே:" அந்த பசுபதியானவர், நிரம்ப புண்யம் செய்து, நிறைய தபஸ் செய்து, அந்த புண்யம், தபசுக்கு அவருக்கு கிடைத்த பலன் தான் காமாக்ஷி என்று கூறுகிறார். "ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே" அந்த புண்யமெல்லாம் சேர்ந்து ஒரு உருவம் எடுத்தது, அது தான் காமாக்ஷி, காஞ்சிபுரத்தில் விளங்குகிறது, வந்து பாருங்கள் என்று கூறுகிறார்.

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி  உமையவளே !

No comments:

Post a Comment