வராக புராணம், நாராயணனைப் பற்றிப் பின்வருமாறு பேசுகிறது.
பூமிதேவி: வராகமே! நாராயணனும் பரப்பிரம்மமும் ஒருவரா? அல்லது பலரா?
வராகம்: இருவரும் ஒருவரே ஆவர். என்றாலும் நாராயணனை நேரடியாக தரிசிப்பது என்பது கடினமான காரியம். அவர் எடுக்கும் பல்வேறு அவதாரங்கள் மூலமே அவரைக் காணமுடியும். பிரம்மனும், சிவனும் நாராயணனின் ஒரு பகுதியே ஆவர். பஞ்ச பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். பிரபஞ்சம் முழுவதுமே நாராயணனின் பல்வேறு சொரூபங்கள் ஆகும்.
அஷ்வசீரா என்ற மன்னன் கபில முனிவரிடம் நெருங்கிப் பழகிக்கொண்டிருந்தான். அவரைப் பெரிய தவமுனிவர் என்று கருதினானே தவிர, அவர் உண்மையில் யார் என்பதை அவன் அறியவில்லை. ஒருநாள் மன்னன் கபிலரிடம் வந்து முனிவரே! நாராயணனை தரிசனம் பண்ண நினைக்கிறேன். அது எப்படி முடியும் என்று கேட்டார். உடனே முனிவர், இரண்டு நாராயணர்கள் இருக்கின்றார்களே, நீ எந்த நாராயணனை தரிசனம் செய்ய விரும்புகிறாய் என்றார். வியப்படைந்த மன்னன், நீங்கள் சொல்லுகின்ற இரண்டாவது நாராயணன் யார் என்றார். கபிலர், அந்த நாராயணனை எளிதில் காணமுடியாது. இதோ என்னைப் பார்க்கிறாய் அல்லவா? நானும் நாராயணன்தான் என்றார். அதுகேட்ட மன்னவன், அது எப்படி முடியும். நான்கு கைகளும், சங்கு சக்கரம், கருடவாகனம் உடையவரல்லவா நாராயணன். இது எதுவுமே உங்களிடம் இல்லையே என்றான் மன்னன். கபிலர் சிரித்துக் கொண்டே அரசனே! என்னை நன்றாகக் கூர்ந்து பார், என்றார். மன்னன் அவரைக் கூர்ந்து பார்க்க. நான்கு கரங்களும், சங்கு சக்கரமும், கருடனும் ஆக கபிலர் காட்சி அளித்தார். வியப்படைந்த மன்னனுக்குக் கபிலர் விளக்கம் கூறுகிறார். "நாராயணனைப் பொறுத்தவரை வெளிப்பட்டு நிற்கும் நிலை, வெளிப்படாது உள்ளடங்கி நிற்கும் நிலை என இரண்டு பகுதிகள் உண்டு. வெளிப்படாத நிலையை யாரும் காணமுடியாது. அது ஒரு பொருளும் அன்று. அதற்கு ஒரு பெயரும் இல்லை, வடிவமும் இல்லை. ஆனால் வெளிப்பட்டு நிற்கும் நிலையில் அவதாரங்களாகத் தோன்றியதோடல்லாமல், பஞ்சபூதங்களாகவும் அவற்றின் பேராற்றல்களாகவும் அவர் காட்சி அளிக்கிறார். அவனை உன்னுள்ளும் காணலாம். வெளியில் உள்ள எப்பொருளிலும் காணலாம். நாராயணனை எல்லாப் பொருளிலும் காண்பதுதான் உண்மையான ஞானம் எனப்படும்."
இப்பொழுது மன்னன் கபிலரைப் பார்த்து ஞானம் சிறந்ததா? செயல் சிறந்ததா? என வினா எழுப்பினான். உடனே கபிலர் ரைவியா, வசு இவர்களின் கதையைச் சொல்லத் துவங்கினார்.
ரைவியாவும் வசுவும்
பிரம்மனின் பரம்பரையில் வந்தவனாகிய வசு என்ற மன்னன் ஒருநாள் தேவகுருவாகிய பிரகஸ்பதியைக் காணப் புறப்பட்டான். அவனை வழியில் சந்தித்த சித்ரவதா என்ற கந்தர்வன், அரசனே! பிரகஸ்பதி இப்பொழுது அவர் வீட்டில் இல்லை. தேவர்களையும், ரிஷிகளையும் ஒரு கூட்டத்திற்கு வருமாறு பிரம்மா அழைத்திருக்கிறார். எனவே பிரகஸ்பதி அக்கூட்டத்திற்குச் சென்றுள்ளார். கூட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வெளியே நீங்கள் காத்திருந்தால், பிரகஸ்பதி வெளியே வரும்பொழுது அவரைச் சந்திக்கலாம் என்று கூறினார். கந்தர்வனின் யோசனையை ஏற்றுக்கொண்ட வசு மன்னன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே பொறுமையோடு காத்திருந்தார். அவன் காத்திருக்கும் நேரத்தில் ரைவியா முனிவனும் பிரகஸ்பதியைக் காணவந்தார். வசு மன்னன் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே முனிவனும் தங்கினான். சற்று நேரத்தில் பிரகஸ்பதி வெளியே வந்தார். இருவரும் எழுந்து மிக்க வணக்கத்தோடு பிரகஸ்பதியைக் கும்பிட்டனர். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்க, இருவரும் ஒரே குரலில், ஞானம் சிறந்ததா செயல் சிறந்ததா என்பதை எங்களுக்குத் தெளிவிக்க வேண்டும் என்று வேண்டினர். அதைக் கேட்ட பிரகஸ்பதி நான் இப்பொழுது ஒரு கதை சொல்லப்போகிறேன். அதிலிருந்து உங்கள் வினாவிற்கு விடையை அறிந்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டுக் கதையைச் சொன்னார்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment