ஸ்ரீபாஷ்யகாரரும்,ஸ்ரீபாஷ்ய வ்யாக்யான சிம்மமும் !!!
📖📗📘🔉📢🔊📣
இன்று (26-04-21)சித்திரையில் சித்திரை-
ஸ்ரீமதுரகவி ஆழ்வார்,ஸ்ரீஅனந்தாழ்வான் வரிசையில்,ஸ்ரீபாஷ்ய வ்யாக்யான சிம்மமாக விளங்கிய ஸ்ரீநடாதூரம்மாள் திருநட்சித்திரமும் ஆகும்.நடாதூரம்மாள் தனியன்:
"வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||"
"அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர் நடாதூர் அம்மாள் எனும் வரதாசார்யரை வணங்குகிறேன்."
ஸ்ரீபாஷ்யம் படைத்த ராமானுஜரிடம் இருந்து,ஸ்ரீபாஷ்ய சிம்மாசனத்தைப் பெற்ற நடாதூராழ்வான் என்னும் ஆசார்யரின் திருப்பேரராக காஞ்சிபுரத்தில் அவதரித்தார்
நடாதூரம்மாள் என்று புகழ் பெற்ற வரதராஜன்.(வரதகுரு என்றும் அழைப்பார்கள்)
1.ஊருக்குப் பெருமை சேர்த்த பேராளர்கள்:
👌👍👌👍👌👍👌👍
பூதபுரி/பூதூர் என்னும் என்னும் ஊர் "ஜகதாசார்யர்" அவதாரத்தால் பெரும்பூதூர் ஆயிற்று.கைங்கர்ய ஸ்ரீ/கைங்கர்யம் என்னும் பெருஞ் செல்வத்தைப் பெற்ற ஆதி சேஷன்(முதல் சேவகன்)அவதரித்ததால் ஸ்ரீபெரும் பூதூர் ஆயிற்று.
காஞ்சிக்கு அருகில் உள்ள நடாதூர் என்னும் ஊர் ராமாநுஜரின் பூர்வாஸ்ரம மைத்துனரான(தங்கையின் கணவர்)ஸ்ரீ
மஹாகாருணிகர் என்பவரால் உருவாக்கப்பட்டது.எம்பெருமானார் திருவடிகளை அல்லாது வேறு எதையும் 'நாடாதார்'களான உத்தம ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்த ஊர் என்பதால் நாடாதூர்.அதுவே மருவி 'நடாதூர்' ஆயிற்று.அந்த நாடாதார் வம்சத்தில் அவதரித்து தம் கைங்கர்ய ங்களால் ஊருக்கும், வம்சத்துக்கும் பெருமை சேர்த்தார் நடாதூர் அம்மாள்.
2.பெருமாள் மீது, பொங்கும் பரிவைப் பொழிந்த பெரியோர்கள்:
🙏🙏🌻🌻👏👏🙏🙏
ராமாநுஜர் ஸ்ரீரங்கம் பெரிய கோயில் மடைப்பள்ளிக்குச் சென்று பெருமாளுக்கு நைவேத்யம் ஆகும் அமுதுபடிகள் முறையாக/பெருமாளுக்குப் பாங்காக சமைக்கப்படுகின்றனவா என்று சோதிப்பார்.மடைப்பள்ளியைச் சுத்தம் செய்வார்.கோசாலைக்குச் சென்று பெருமாளுக்கான பால் தரும் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா; சத்துள்ள உணவு அவைகளுக்குத் தரப்படுகிறதா என்று பார்ப்பார். மாடுகளுக்குத் தரும் வைக்கோலை, கரும்புச் சாற்றில் ஊற வைத்துக் கொடுக்கச் சொன்னார்.பாலின் அளவும்,சுவையும் கூடியது.ஒரு முறை பெரியபெருமாளின் திருமுக மண்டலம் வாடியிருக்கக் கண்டு,பெருமாளுக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது என்று அறிந்து,பெரிய கோயில் வைத்தியர் மூலம் காஷாயம் காய்ச்சி, ஏழு நாட்களுக்குப் பெருமாளுக்கு மற்ற அமுதுபடிகளுடன் சேர்த்து, காஷாயத்தையும் அமுது செய்வித்தார்.காஷாய சிகிச்சைக்குப் பின்னர் பெருமாளின் திருமுக மண்டலம் பிரகாசமாக ஒளிர்ந்தது கண்டு உகந்தார்.
ராமாநுஜர் பொங்கும் பரிவால் வகுத்தளித்தபடி தான், இன்றும் ஸ்ரீரங்கத்திலும்,திருமலையிலும் அமுது வகைகள் நைவேத்யம் செய்யப் படுகின்றன.
நடாதூரார் ஒரு நாள் இரவு, காஞ்சியில் தேவப்பெருமாளைச் சேவித்து இருக்கையில்,பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதற்காக மடைப்பள்ளியிலிருந்து காய்ச்சிய பாலமுது கொண்டு வந்தார்கள்.பால் கொதிக்கக் கொதிக்க இருந்ததைப் பார்த்துப் பதறிய நடாதூரார் அந்தப் பாலை வாங்கி நன்றாக ஆற்றிக் கொடுத்து,பெருமாள் திருஅதரத்துக்கு இதமாக அமுது செய்விக்க வைத்தார். இவரது வாத்சல்யத்தால் உகந்த தேவப்பெருமாள் இவருடைய தாயினும் சாலப் பதிவை வியந்து "அம்மா" என்றழைத்தார்.நடாதூர் வரதாசார்யர் "நடாதூர் அம்மாள்"ஆனார்.
அன்றிலிருந்து நித்யமும் வரதருக்குப் பாங்காகப் பால் காய்ச்சிக்,சிறந்த திரவியங்கள் சேர்த்துக் கொடுத்தார்.
இந்த வைபவத்தால் அவர் "வாத்ஸல்ய வரதாசார்யர்" என்றும் அழைக்கப்பட்டார்.
3.ஆசார்யர்கள் புடம் போட்டு மெருகேற்றிய தங்கங்கள்!
⭐🌟🏅🥇🎖🏅🥇🎖🌟⭐
ராமாநுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திர அர்த்தம் கேட்க, ஸ்ரீரங்கத்திலிருந்து,திருக்கோஷ்டியூர்
சென்ற போது,நம்பிகள் அவரைப் பதினெட்டு முறை நடக்க வைத்தார். ஒவ்வொரு முறையும் அவருக்கு ஒரு உபதேச வார்த்தை சொல்லித் திருப்பி அனுப்பினார்.பதினெட்டாவது முறை தான் மந்திர அர்த்தம் சொன்னார்.
ராமாநுஜருக்குத் தகுதி இல்லை யென்றோ,பக்குவம் ஆகவில்வை என்றோ நம்பிகள் அவ்வாறு செய்யவில்லை.ராமாநுஜரின் ஆர்த்தி,வைராக்யம்,ஆசார்ய பக்தி ஆகியவற்றை உலகோருக்கு உணர்த்தவே அப்படிச் செய்தார்.
நடாதூரம்மாள் தம் பாட்டனார் நடாதூர் ஆழ்வானிடம் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் கேட்க விழைந்தார்.ஆனால் அவருக்கு மிக வயதாகி விட்டதால்,திருவெள்ளறை சென்று எங்கள் ஆழ்வானிடம் கேட்கச் சொன்னார்.எங்கள் ஆழ்வான் ராமாநுஜரிடமே நேரடியாக ஸ்ரீபாஷ்யம் கேட்டவர்.கூரத்தாழ்வான் கண் இழந்த பிறகு,ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யம் சொல்ல அதைப் பட்டோலைப் படுத்தினார் இவர்.
காஞ்சியிலிருந்து,திருவெள்ளறை சென்ற நடாதூரார்,ஆழ்வான் திருமாளிகைக் கதவைத் தட்டினார். உள்ளே இருந்த ஆழ்வான் "யார்" என்று கேட்க,"நான் வரதன்" என்றார் இவர் "நான் செத்தபின் வாரும்" என்றார் அவர்.
அம்மாள் ஒன்றும் புரியாமல் திரும்பி காஞ்சிக்கே சென்று,பாட்டனாரிடம் நடந்ததைக் கூறினார்.அவர் 'நான் என்னும் அஹங்காரம் இல்லாமல்(செத்த பின்) வா' என்று விளக்கினார்.உடனே மீண்டும் திருவெள்ளறை வந்து ,
"அடியேன்தாசன்,வரதன்"என்றார்
எங்களாழ்வான் அவரை உகந்து வரவேற்று அவருக்கு ஸ்ரீபாஷ்யம்,அதன் விசேஷ அர்த்தங்களை விரிவாக காலட்சேபம் செய்தார்.அவரை அழைத்துக் கொண்டு பல திவ்யதேசங்களுக்கும் சென்றார்.
திருவெள்ளறையை விட்டு, ராஜபாளையத்துக்குச் சற்றுத் தெற்
கே உள்ள 'கொல்லங்கொண்டான்' என்னும் ஊரில் இருந்தார். நடாதூர் அம்மாள் அங்கும் சென்று அவருக்குக் கைங்கர்யங்கள் செய்து காலட்சேபம் கேட்டார்.
4)ஆசார்யர்கள் பேரிட்டு வளர்த்த சீர்மிகு சீடரும்,சீடர் பேர் ஏற்ற ஆசார்யரும்.
👌👌👌👌👌👌👌👌👌
ராமாநுஜரை ஆளவந்தார்
"ஆம்;முதல்வன்"என்று வியந்தார்.
பெரிய திருமலை நம்பிகள் "இளையாழ்வார்/ராமாநுஜன்"என்று பெயர் சூட்டினார்.
திருக்கோஷ்டியூர் நம்பி
"எம்பெருமானார்"என்று கொண்டாடினார்.
திருமாலை ஆண்டான் "சடகோபமுனி"என்று புகழ்ந்தார்.
நடாதூர் அம்மாளுக்கும்,எங்கள் ஆழ்வானுக்குத் இடையிலான அத்யந்த ஆசார்ய-சீடர் உறவால் எங்கள் ஆழ்வான்
"அம்மாள் ஆசார்யன்" என்று அறியப்படுகிறார்.இன்றும் எங்கள் ஆழ்வான் வம்சத்தில் தோன்றிய ஆசார்யர்கள்"அம்மாள் ஆசார்யன்" என்றே அழைக்கப்படுகின்றனர்.
5.ஸ்ரீபாஷ்ய சிம்மமும்,வியாக்யான சிம்மமும்:
📖📗📘🔉📢🔊📣🔔
தம் ஆசார்யர் ஆளவந்தார் விருப்பப்படி,
வேதவியாசர் தொடுத்த பிரம்ம சூத்திரங்களுக்கு விரிவான விளக்கவுரையாக"ஸ்ரீபாஷ்யம்" என்னும் கிரந்தத்தை இயற்றினார் ராமாநுஜர்.
இந்தக் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ள அர்த்த விசேஷங்களின் மேன்மையைப் போற்றிய ஸ்ரீசரஸ்வதி தேவி ராமாநுஜரை உச்சி முகந்து, கொண்டாடினார் "ஸ்ரீபாஷ்யகாரர்" என்று பட்டம் சூட்டினார்.அந்தக் காலத்தில் வேத அர்த்தங்களைச் சொல்லும் அனைத்து கிரந்தங்களும் சம்ஸ்கிருதத்திலேயே இருந்தன.அவை பெரும்பாலும் தவறான/புறம்பான அர்த்தங்களைப் பரப்பியதால் அவற்றுக்கு மறுப்பாக உண்மைப் பொருளை உரைக்க,ராமாநுஜர் சம்ஸ்கிருதத்திலேயே "ஸ்ரீபாஷ்யம்" செய்தார்.அனைவரும் புரிந்து அறிந்து கொள்வதற்காக ஆசார்யர்கள் பலரும் வ்யாக்யானம் செய்து வந்தனர். உடையவர் காலத்திலேயே,நடாதூர் ஆழ்வானை ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் செய்யுமாறு,அவரே நியமித்தார். கூரத்தாழ்வானைத் தொடர்ந்து, ஸ்ரீபாஷ்யத்தைப் பட்டோலைப் படுத்திய எங்கள் ஆழ்வானும் சிறந்த ஸ்ரீபாஷ்ய வித்வானாகத் திகழ்ந்தார்.
எங்கள் ஆழ்வானிடம் பல ஆண்டுகள் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் கேட்ட நடாதூர் அம்மாள்,ஸ்ரீபாஷ்ய வியாக்யான சிம்மம் என்று கொண்டாடும்படிக்கு சிறந்த வித்வானாகத் திகழ்ந்தார்.மிகப்புகழ் பெற்ற சீடர்கள் சுருதப்பிரகாச பட்டர்(சுதர்சன சூரி),கிடாம்பி அப்பிள்ளார்,வடக்குத் திருவீதிப்பிள்ளை,ஆய்த்ரேய ராமாநுஜர், ஆகியோருக்கு ஸ்ரீபாஷ்யம் காலட்சேபம் செய்தார்.இவரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்ட சுதர்சன சூரி-கூரத்தாழ்வானின் பெரும்பேரன்(வேதவியாச பட்டரின் பேரன்)-என்னும் ஆசார்யர்,ஒவ்வொரு நாளும் தாம் கற்றவற்றை ஓலைச்சுவடிகளில் சீராகப் பதிந்து வந்தார்.அவற்றை நடாதூர் அம்மாளிடம் காட்டிய போது,அவர் பெரிதும் பாராட்டினார்.
அவர் ஓலைப்படுத்திய வ்யாக்யானம்
"சுருதபிரகாஷிக"(அவர் ஆசார்யரிடம்
கேட்டறிந்ததின் ஒளிப்பிரவாகம்) என்றழைக்கப்பட்டது.பின் நாட்களில் சுதர்சன சூரி அதை மேலும் விரிவாக்கி
36000 படிகள் கொண்ட ஸ்ரீபாஷ்ய வியாக்யான கிரந்தம் செய்தார்.அந்த வியாக்யானம் "சுருதபிரகாஷிக படி" என்றும் சுதர்சன சூரி,சருதபிரகாஷிக பட்டர் என்றும் அழைக்கப்பட்டார்.
ஒருமுறை அம்மாள் பல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் உபதேசித்துக் கொண்டிருந்தார். பக்தி யோகம் கடைபிடிப்பதற்கு மிகவும் கடினம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கூறினர். அம்மாளும் அது கேட்டு ப்ரபத்தியைப் பற்றி விளக்கினார். அவர்கள் ப்ரபத்தியும் நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம் என்றார்கள். அப்பொழுது அம்மாள்
"எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருந்தால் நீங்கள் உய்வடையலாம்" என்று கூறினார்.
6.திருமால் அடியார்கள் அனைவரும் சமம்,
அவர்களுக்குள் வர்ண/ஜாதி வித்யாசம் பார்க்கக்கூடாது என்று வலியுறுத்திய வள்ளல்கள்:
🤲🤝🤲🤝🤲🤝🤲🤝🤲🤝
எம்பெருமானார் அதிகாலையில் காவிரியில் நீராடச் செல்லும் போது,அந்தணர் குலத்தோரான அவர் சீடர்கள் முதலியாண்டான்/கூரத்தாழ்வான் தோள் பிடித்துச் செல்வார்.நீராடித் திரும்பும் போது,மல்லர்
குலத்தவரான பிள்ளை உறங்காவில்லி தாசர் தோள் பிடித்து வருவார்.
உறங்காவில்லி தாசரை "ராமாநுஜ ஸ்பர்ச வேதி" என்று கொண்டாடினார்.
ஒருமுறை நடாதூரம்மாளும் ஆளிப்பிள்ளான் என்னும் அந்தணரல்லாத ஸ்ரீவைஷ்ணவரும் அருகருகே அமர்ந்து பிரசாதப்பட்டுக் கொண்டிருந்தனர் (சாப்பிட்டுக் கொண்டு).இவர்களைப் பார்த்த வேறொருவர்,"இது எப்படி சாத்யம்" என்று வியக்க, "உண்மையான ஆசார்யனின் தொடர்பு உள்ள யாராயினும்/எதுவாயினும் , அவர்களுடன்/அவற்றுடன் நாமும் தொடர்பு உள்ளவராக இருக்க வேண்டும். ஆதலால் இப்பொழுது அனுஷ்டானத்துடன் இந்த ஸ்ரீவைஷ்ணவருடன் பழகுவது கூட பூர்வாசார்யர்கள் விளக்கியது போல் பாகவத தர்மத்தின் சிறப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்" என்று பதிலுரைத்தார் .
7.திருவேங்கடவரே பிரசாதம் சாதித்த பேறு பெற்ற மஹான்கள்:
🍚🥭🍚🥭🍚🥭🍚🥭🍚🥭🍚🥭
ஒருமுறை,ராமாநுஜர் தம் சீடர்களுடன் திருமலை ஏறிச் சென்ற போது நடந்த களைப்பாலும்,பசியாலும் சோர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தார்.அப்போது திருவேங்கடவரே ஒரு பிரம்மச்சாரி உருவில் வந்து, ராமாநுஜருக்கும்/சீடர்களுக்கும் ததியன்னமும் (தயிர்சோறு,
மாம்பழமும் அமுது செய்யக் கொடுத்தார்.
ஒருமுறை,நடாதூர் அம்மாளும்,அவர் சீடர்களும் திருமலை செல்லும் போதும், திருவேங்கடவர் பிரம்மச்சாரி உருக்கொண்டு,அவர்களுக்கு ததியன்னம் கொடுத்துப் பசி போக்கினார்.
8."கச்சிக்கு வாய்த்தான் மண்டபம்" விசேஷம்:
⛩⛩⛩⛩⛩⛩⛩
காஞ்சி தேவப்பெருமாளைச் சேவித்துவிட்டு,பிரதட்சிணமாக வரும் போது,மூலஸ்தானத்துக்கு பின்புறம் உள்ள மண்டபமே கச்சிக்கு வாய்த்தான் மண்டபம்.இந்த மண்டபத்தில் இருந்து தான்,தேவப்பெருமாள் ராமாநுஜரின் ஐயங்களைப் போக்கிய பிரசித்தி பெற்ற
"ஆறு வார்த்தைகளை"திருக்கச்சி நம்பிகள் மூலமாக அருளிச்செய்தார்.
இந்த மண்டபத்தில் தான் திருவரங்கப்பெருமாள் அரையர், தேவப்பெருமாள் பெரிதும் உகக்கும் வண்ணம்,திவ்யப்பிரபந்தப் பாசுரங்களை
இசையோடும்,அபிநயத்தோடும் பாடி,அதற்குப் பரிசாக ராமாநுஜரை வேண்டிப் பெற்றார்.தேவப்பெருமாள் மிகவும் நேசித்திருந்த ராமாநுஜரை, நிரந்தரமாக ஸ்ரீரங்கத்துக்கு--அரங்கர் கைங்கர்யத்துக்கு-அழைத்துச் சென்று விட்டார்.
இந்த மண்டபத்துக்கு அருகில் அமர்ந்து தான் நடாதூர் அம்மாள்,ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் செய்வார்.ராமாநுஜருக்கு மட்டுமல்லாமல்,ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கே பெரும் திருப்பு முனையாக இருந்த"ஆறு வார்த்தைகள்"அருள்மொழிந்த இடமாதலால் இங்கிருந்து காலட்சேபம் செய்வதை மேன்மையாகக்
கருதினார்.
9."வசந்த மண்டபம்" விசேஷம்:
💐🏵💮🌸🌻🌼🌺🌹
ஸ்ரீரங்கத்தில் உடையவர் திருநாடு அலங்கரித்த போது,ஸ்ரீரங்கநாதப் பெருமாள் உடையவரின் சரம திருமேனியை,பெரிய கோயில் வளாகத்துள் அமைந்துள்ள தமது 'வசந்த மண்டபத்திலேயே' பள்ளிப்படுத்துமாறு நியமனம் செய்தார்.ஒரு காலத்தில் பெரியபெருமாளின் வசந்த மண்டபம் இருந்த இடம் தான் இன்றைய உடையவர் சந்நிதி !!
தேவப்பெருமாள் நியமனப்படி,காஞ்சி பெருமாள் கோயில் வளாகத்தில் 'வசந்த மண்டபம்' நிர்மாணித்தார் நடாதூரம்மாள்.
(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
No comments:
Post a Comment