Friday, May 21, 2021

Pulavar talai malai kandar - Spiritual story

புலவர் தலை மலை கண்டர்.
சிவ பக்தர்.
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இவர் கொலை செய்து கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.
சிறு வயது முதலே கொலை செய்வதையும்
கொள்ளை அடிப்பதையும் வெறுத்து வந்தார்
தலை மலை.
நிறைய தலைகளை மலை போல் வெட்டி குவிப்பார் என்றே இந்த
தலை மேல் கண்டன் என்ற பெயரை
வைத்தனர் பெற்றோர்.
சிவபெருமானை வணங்குவதையே முழுமூச்சான வேலையாக கொண்டிருந்தார்.
ஒரு நாள் ஒரு முனிவர் காட்டு வழி வந்தார்.
காட்டில் இருந்த சிவ லிங்கத்தைப் கண்டு அங்கிருந்த வில்வ மரத்தின் இலைகளைப் பறித்து அர்ச்சித்தார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் தலைமலை கண்டன் முனிவரின் பாதங்களை வணங்கித் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டினான்.
சிறுவனை வாழ்த்தி பஞ்சாட்சரத்தை உபதேசித்துவிட்டுச் சென்றார்.
விபூதிப் பட்டையும் ஐந்தெழுத்து மந்திர ஜபமுமாக நாட்களைக் கழித்தான்.
பஞ்சாட்சர மந்திரம் ஒரு கோடி ஆனதும் அவன் நாவில் கவிதை பொழியும் சக்தியை தந்தருளினார் ஈசன்.
தெய்வத்தை வாழ்த்தி பாடல்களைப் புனைந்து பாடும் சிறுவனைக் கண்ட ஊரார் வியந்து, "புலவர் தலைமலை கண்டர்" என்று குறிப்பிடத் தொடங்கினர்.
திருமணம் செய்து வைத்தால்
தலைமலையின் பக்தி மாறும் என நினைத்த பெற்றோர்
மங்கை எனும் பெண்ணை திருமணம் செய்வித்தனர்.
மங்கைக்கோ ஏழு சகோதரர்கள்.
ஏழு பேரும் கொலை கொள்ளையை தொழிலாக கொண்டவர்கள்.
பெற்றோர் காலமான பிறகு, சீதனப் பொருள்களை விற்று சில காலம் வாழ்க்கை நடத்தினார் புலவர். அவையெல்லாம் தீர்ந்ததும் கடன் வாங்கி காலம் கழித்தார்.
கடன் இனி வாங்க ஆளே இல்லை என்ற சூழ்நிலை வந்த போது
மங்கை தன் சகோதரர்களோடு களவாட போகச் சொன்னாள்.
புலவர் கல்லும் கனியும்படி 'மருதூரந்தாதி' பாடி இறைவனிடம் "ஞான சம்பந்தருக்கு, திருநாவுக்கரசருக்கு, புகழ்த் துணை நாயனாருக்குப் பொருள் தந்து உதவியது போல் எனக்கும் கருணை காட்டக் கூடாதா?" என இறைஞ்சினார். எதுவும் நடக்கவில்லை.
வேறு வழியின்றி ஒரு அமாவாசையன்று மைத்துனர்களோடு களவுத் தொழிலுக்குப் புறப்பட்டார்.
அவர்கள் குறி வைத்திருந்தது திருப்புவனத்தில் ஒரு செல்வந்தர் மாளிகை.
'தன் எதிரில் கொலை செய்யக் கூடாது' என்ற நிபந்தனையை மைத்துனர்கள் ஏற்றுக் கொண்டனர்.
திருப்புவனம் தனவந்தர் சிவ பக்தி கொண்ட பண்டிதர்.
தினமும் உறங்கச் செல்லுமுன் ஈசன் மீது ஒரு பாடல் பாடிவிட்டுத் தான் படுப்பார்.
பன்னிரெண்டு ஆண்டுகளாக இதை செய்து வந்தார்.
ஒரு நாள்
"தலையில் இரந்துண்பான் தன்னுடலில் பாதி
மலை மகளுக்கு ஈந்து மகிழ்வான் உடையில்"
என்பது வரை பாடினார்.
அதன் பிறகு என்ன முயன்றும் அடுத்த இரண்டடி வரவே இல்லை. 'தன் புலமை இப்படி அரை குறையாக இருக்கிறதே' என்ற வேதனை அவரை உருக்கியது.
நோய்வாய்ப் பட்டு படுக்கையில் விழுந்தார்.
சதா அவர் வாய் அந்த முடிக்கப் படாத பாதிப் பாடலை முணு முணுத்துக் கொண்டிருக்கும்.
சிவபெருமானே வருவார் வருவார் தன் கவிதையை முடித்து வைக்க என எண்ணியபடியே படுத்திருந்தார்.
புறக்கடை வழியாக புலவர் தலை மலை கண்டர் தன் மைத்துனர்களோடு செல்வந்தர் இல்லத்தினுள் நுழைந்தனர்.
அவரைக் காவலுக்கு வைத்துவிட்டு மைத்துனர்கள் விலையுயர்ந்த பொருட்களைத் திருடும் போது சில பாத்திரங்கள் கீழே விழுந்து உருண்டன. சத்தம் கேட்டுக் காவலர்கள் வேல்கம்புகள், தீப்பந்தங்களோடு விரைந்துவர, தப்பித்தால் போதும் என மைத்துனர்கள் தலை தெறிக்க ஓடினர்.
தலைமலை கண்டரை நிறுத்தியிருந்த இடம் பணக்காரரின் படுக்கையறை வாயிலோரம். தன் நிலை இப்படிக் கீழ்த்தரமானதே என நொந்துகொண்டே நின்றிருந்தார் புலவர்.
தனவந்தர் வழக்கப் படி அரைப் பாடலைப் பாட புலவர் தலைமலை தன் நிலை மறந்து, "இருப்பு அன மேனியானார் என்றாலோ" என்று தொடர்ந்து பாட, பணக்காரர் துள்ளியெழுந்து "ஆமாம் திருப்புவன ஈசன் திறம்" என்று முடித்தபடி வெளியெ வந்து பார்த்தார்.
இருட்டில் நின்றிருந்த புலவரைக் கட்டித்தழுவி, "தாங்கள் யார்? சிவ பெருமானே என் வருத்தம் தீர்க்க புலவர் வடிவில் வந்திருக்கிறாரோ? தங்களுக்கு என்ன கொடுத்தாலும் தகும்" என வியப்புடன் சொன்னார்.
புலவர் "முதலில் தீபத்தை ஏற்றுங்கள்" நான் ஈசனல்ல. அவர் அடியார் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியையும் இழந்தவன். வயிற்றுப் பசிக்குத் திருட வந்தவன்" என்றார்.
விளக்கு ஏற்றப்பட்டது. புலவர் அருகே கொள்ளையடித்த பொருள்கள் இறைந்து கிடந்தன. நடந்ததைச் சொன்னார் புலவர்.
"புலவரே! திருப்புவனத்து இறைவன் என் மன நோய் தீர்க்கத் தங்களை இங்கே அனுப்பியிருக்கிறான். இந்த இல்லத்தில் உள்ளதெல்லாம் உங்களுக்குச் சொந்தம்" என்று அவரை அன்புடன் அழைத்துச் சென்று முதலில் பசியாற்றினார் செல்வந்தர்.
அதன் பிறகு, புலவர் தலைமலை கண்டர் மனைவியையும், மைத்துனர்களையும் அழைத்துவரச் செய்தார்.
மைத்துனர்கள் திருந்தி தனவந்தரின் பண்ணையில் பணி புரிந்தனர்.
தனவந்தரும் புலவரும் போட்டி போட்டுக் கொண்டு சிவ பெருமான் மீது பாமாலை பொழிந்தனர்.
புலவர் தலைமலை கண்டர் பாடிய 'மருதூர் யமக அந்தாதி' தமிழ்ப் பண்டிதர்களால் போற்றப்பட்டு வருகிறது.
அறியாப்பருவத்து அடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப்
புறப்பனிப் பற்று விட்டாங்கு.
நாலடியார் 171 வது செய்யுள்
இதன் விளக்கம்:
கொளுத்தும் வெயில் பட்டவுடன் புல்லின் மேல் படிந்துள்ள பனி தானாகவே விலகி விடும். இளமையில் தீயவர்களோடு சேர்ந்து செய்யும் பாவச் செயல்கள் நல்லோர்களுடைய சேர்க்கையால் தானாகவே விலகி விடும்.
Image may contain: 2 people



No comments:

Post a Comment