Monday, May 24, 2021

Narasimhavatar part 6

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

          *ஸ்ரீநரசிம்மாவதாரம்* 

 *பகுதி 06* 

 *நரசிங்கபுரம், பேரம்பாக்கம்:* 

சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.
       
மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்
தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்
ஆகமம் : பாஞ்சரார்த்தம்
பூஜை : ஆறு (6) கால பூஜை
பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்
புராண பெயர் : நரசநாயகர் புரம்
ஊர் : நரசிங்கம் மாவட்டம் : திருவள்ளூர்

ஸதல வரலாறு:
'பிரகலாதர் ' எனும் உற்சவர் சிலையை உருவாக்கிய விதம் பற்றிய ஆவணம் கூறும் ஒரு பழைய கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றினையும் சற்று விரிவாக உரைக்கிறது.
சந்திரகிரி இராஜ்ஜியத்தின், ஜெயங்கொண்ட சோழமண்டல எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றின் அருகில்,தெற்குப் பகுதியில் நரசநாயகர் புரம் எனும் ஒரு பழைய கிராமம் அமைந்துள்ளது.
அவ்வூரில் உள்ள கோயிலில் 'கடவுளின் அவதாரம்' எனப் பெயரிடப்பட்டு 'புரந்தர நரசிங்க பெருமாள்' எனும் மூலவர் வீற்றிருந்தார் என மேலும் அக்கல்வெட்டு உரைக்கிறது. அந்த 'நரச நாயகர் புரம்' பின் பேச்சு வழக்கில் நரசிங்கபுரம் என பெயர் மாற்றம் ஆனது.

 *மங்களாசாசனம்* 

சமீபத்தில் ஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் விஜயம் செய்து மங்களாஸாசனம் செய்துள்ளார் என்று கோயில் குறிப்பேடு சொல்கிறது. மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு.

 *திருவிழா* :
ஆனி பிரமோற்ஸவம் 10 நாட்கள், நரசிம்ம ஜெயந்தி , கருட சேவை, சுவாதி நட்சத்திரத்தில் ஹோமம் திருமஞ்சனம் (அபிஷேகம்). 

 *தல சிறப்பு* 

ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார். முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.
16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

 *நேரம்:* 

காலை : 7.30 AM TO 12.00 AM
மாலை: 4.30 PM TO 08.00 PM
(பிற விஷேஷ காலங்களில் நேர மாற்றம் உண்டு)

பிரார்த்தனை:

சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.
பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 *வழி:* 

பூந்தமல்லி பஸ்நிலையத்திலிருந்து பேரம்பாக்கம், தக்கோலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும். நிறுத்தம்: நரசிங்கபுரம்.

 *பழையசீவரம்:* 

பழைய சீவரம் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலாற்றின் கரையில் பழைய சீவரம் கிராமத்தில் ஒரு சிறு மலையில் அமைந்துள்ளது. புராணங்களின்படி, "ஸ்ரீபுரம்' எனப்பட்டது.
 "ஸ்ரீ' ஆகிய இலக்குமியுடன் பெருமாள் அமர்ந்திருக்கும் ஊர் ஆதலால் ஸ்ரீபுரம் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் சீவரம் ஆனது. மிகவும் பழைமையான ஊர் என்பதால் பழைய சீவரம் என்றானது.
 பாலாற்றின் கரையிலே ஒரு சிறு குன்று, அந்த குன்றின் மேலே சற்று தூரத்தில் ஓர் அழகிய ஆலயம்!ஆலயத்தின் மூல மூர்த்தி ஸ்ரீ லட்சிமி நரசிம்ம பெருமாள். இந்த ஆலயம் அமைந்திருக்கும் குன்றின் புராண பெயர் பத்மகிரி ஆகும். இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது. பல்லவ மன்னர்களில் 2- ஆம் நரசிம்மவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோயில். இக்கோயிலுக்கு என தனி தலவரலாறு பிரம்மாண்ட புராணத்தில் உள்ளது.
 நைமிசாரண்யத்தில் பல முனிவர்களும் ரிஷிகளும் கூடி இருக்கும் வேளையிலே விஷ்ணுசித்தர் என்னும் முனிவர், ஸ்ரீமன் நாராயணனை அர்ச்சை ரூபத்தில் தொழுது முழுமையான பலன் பெற ஏதேனும் ஒரு தலம் உள்ளதா என கேட்டார். அதற்கு மரீசி முனிவர் "ஒரு தலம் உள்ளது. அங்கே தொழுபவர்களுக்கு பெருமாள் குறைவற்ற நிறைந்த முழுப்பலனைத் தந்ததற்கான வரலாறும் உள்ளது' என்று சொன்னார்.
 நைமிசாரண்ய சேத்திரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை நினைத்து தவம் செய்து கொண்டிருந்த அத்திரி முனிவருக்கும் அவர் மனைவி அனுசூயைக்கும் நெடு நாள்கள் ஆகியும் பெருமாள் காட்சி கொடுக்க வில்லை. இருந்தும் அவர்கள் தங்களது தவத்தினைத் தொடர்ந்தார்கள் அவர்களின் உறுதியைக் கண்டு மகிழ்ந்த பெருமான் அவர்களுக்கு அசரீரி வடிவில் ஒரு செய்தியைச் சொன்னார். தென்திசை நோக்கி சென்று பாலாற்றின் கரையிலே அமைந்துள்ள பத்மகிரியில் தவம் செய்யும்படியும் தாம் அங்கு வந்து காட்சி தருவதாகவும் கூறினார்.

 அதன் படியே, இங்கே வந்து தவம் செய்த அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ரூபத்தில் மேற்கு நோக்கியவாறு முனிவருக்கு அருட்காட்சி அளித்தார். அத்திரி முனிவரின் வேண்டுகோளின்படி அங்கேயே மக்களுக்கு அருளுவதற்காகத் தங்கிவிட்டார் என்கிறது பிரம்மாண்ட புராணம்.
 ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் சுமார் 6 அடி உயரத்தில் ஸ்ரீமஹாலட்சுமியைத் தன் மடியிலே இருத்திக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பொங்க காட்சி அளிக்கிறார். தனிக்கோயில் நாச்சியார், அஹோபிலவல்லி தாயாருக்குத் தனி சந்நியும் உண்டு.

 அத்ரி முனிவர் இங்கு கார்த்திகை மாதம் வந்து தங்கி தவம் செய்தார். தவக்கோலத்தில் பெருமாளை முழுவதும் தரிசனம் செய்யாமல் திருமுக மண்டல தரிசனம் மட்டும் செய்தார். ஆதலால் இத்தலத்தில் அத்திரி முனிவர் தரிசனம் செய்த அதே கோலத்தில் கார்த்திகை மாதத்தில் தரிசனம் செய்யலாம். இதனை, "அர்த்த ரூப சேவை' என்பர்.

 இந்த பழைய சீவரம் தலத்திற்கு மற்றுமோர் சிறப்பும் உண்டு. பேரருளாளன் என போற்றப்படும் காஞ்சி வரதராஜ பெருமாள் ஆதியில் அத்தி மரத்தால் ஆன மூலவராக இருந்து அருள்பாலித்து வந்தார். பின்பு கால ஓட்டத்தில் அந்த அத்தி வரதர் உருவத்தில் சிறு பின்னம் ஏற்பட்டதால், வேறு சிலை நிறுவ எண்ணிய பெரியோர்கள் இந்த பத்மகிரியில் இருந்துதான் தற்போதுள்ள வரதராஜர் சிலையை செய்து காஞ்சிக்கு எடுத்து சென்று பிரதிஷ்டை செய்தார்கள் என சொல்லப்படுகிறது.
 பழைய சீவரத்தில் இருந்து வந்த வரலாற்றை நினைவு படுத்தும் வகையிலே காஞ்சிவரதர் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வோர் வருடமும் மாட்டு பொங்கல் தினத்தன்று பார்வேட்டை அல்லது பரிவேட்டைக்கு இந்த ஊரில் வந்து தங்குகிறார்.

 ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலில் லட்சுமி நரசிம்மசுவாமி, அகோபிலவல்லி தாயார், ஆண்டாள், வேதாந்ததேசிகன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், விஷ்ணுசித்தர் போன்றோருக்கு என உபசந்நிதிகளும் உள்ளன.

 இக்கோயிலில் இரண்டு கால பூசைகள் நடக்கின்றன. தை மாதம் பார்வேட்டை உற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரையில் சித்ரா பெüர்ணமி, மாசியில் மாசி மகத் திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் அர்த்த ரூப சேவையில் தரிசனம் செய்தோருக்கு வேண்டிய பலன் எல்லாம் தடையின்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலுக்கு அருகில் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப்பெருமாள் அருளுகிறார்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீநரசிம்மாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment