Thursday, May 6, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 39, 40 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam
கீதாம்ருதம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி
39.ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே து இமாம் ச்ருணு
புத்யா யுக்தோ யயா பார்த்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி
ஏஷா புத்தி: – இந்த அறிவுரையானது, தே –உனக்கு, ஸாங்க்யே- ஞான யோக விஷயத்தில் , அபிஹிதா- சொல்லப்பட்டது. யோகே து-கர்ம யோக விஷயத்தில், இமாம் – இதைக் கேள். யயாபுத்த்யா யுக்த: - அந்த புத்தியோடு கூடியவனாக , கர்மபந்தம் – கர்மத்தினால் ஏற்பட்ட தளையை ,ப்ரஹாஸ்யஸி- அழித்துவிடுவாய்.
ஸாங்க்யம் என்பது இங்கு முந்தைய ஸ்லோகத்தில் கூறப்பட்ட சமத்வ புத்தியைக் குறிக்கிறது. அதாவது நாம் உடலல்ல ஆத்மா எனும் அறிவு. இப்போது அதை அடைவதற்கு செய்ய வேண்டிய கர்ம் யோகத்தைப் பற்றிக் கூறுகிறார்.
கர்மபந்தம் என்பது முன்வினையினால் ஜனனமரணம் எனும் சுழற்சி ஏற்படுவது. அஞ்ஞானத்தினால் நாம் உடலல்ல ஆத்மா என்றறியாமல் கர்மப்ந்தத்தில் கட்டுப்படுகிறோம். அதனால் செய்வதறியாமல் குழம்புவோர்க்கு கூறப்பட்டதே இந்த கீதை. இதன் மூலம் கர்மத்தளையை அறுத்து ஆன்மநிலையை அடைவதே கர்ம யோகம்.
40. நேஹாபிக்ரம நாசோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வலபமபி அஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
இஹ –இந்த கர்ம யோகத்தில்,அபிக்ரம நாச: ஆரம்பத்தில் அழிவு என்பது ந அஸ்தி- இல்லை. ப்ரத்யவாய: - எதிர்விளைவு என்பது ந வித்யதே- இல்லை. அஸ்ய தர்மஸ்ய –இந்த கர்ம யோகம் என்னும் தர்மத்தை, ஸ்வல்பமபி- சிறிது அனுசரித்தாலும், மஹதோ பயாத்-பெரியதான ஜனனமரணபயத்தில் இருந்து த்ராயதே- காப்பாற்றுகிறது.
சாமான்ய கர்மங்கள் ஆரம்பித்து விட்டுவிட்டால் பிறகு முதலில் இருந்து தொடங்க வேண்டும். உதாரணமாக ஒரு விதை விதைத்தால் அதைத் தொடர்ந்து பராமரிக்காவிட்டால் பயனில்லை. இதைத்தான் ஆரம்பத்திலேயே அழிவு என்கிறார். யாகம் , தேவ காரியங்கள் போன்ற இன்னும் சில கர்மங்கள் பாதியில் விட்டுவிடும்போது எதிர் விளைவுகளை உண்டாக்கும். ஏனெனில் இவை எல்லாம் பலனை எதிர்பார்த்துச்செய்பவை.
ஆனால் பலனைக் கருதாது செய்யப்படும் கர்மங்கள் ஆரம்பித்துத் தொடராமல் விட்டுவிட்டாலும் அந்த மனநிலை தொடர்கிறது. அதனால் அடுத்தபிறவியிலும் அதைத் தொடர்ந்து செய்யும் நிலை ஏற்படுகிறது. அதே போல் எதிர்பாராமல் பாதியில் தடை ஏற்படினும் அடுத்த பிறவியில் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை ஆறாவது அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.
ஒன்றிலும் நிச்சய புத்தியில்லாவிடில் என்ன நிலை என்பதை அடுத்துக் கூறுகிறார்.

No comments:

Post a Comment