Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
கீதாம்ருதம்- அத்தியாயம் 2 தொடர்ச்சி
33. அத சேத் த்வம் இமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்த்திம் ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி
அத – ஆகையால் , த்வம் –நீ, இமம தர்ம்யம் –இந்த தர்மத்தோடு கூடிய, ஸங்க்ராமம்- யுத்தத்தை , ந கரிஷ்யஸி சேத் –செய்யாமல் போனால் , தத:- அதனால் , ஸ்வதர்மத்தையும் , கீர்த்திம் ச- கீர்த்தியையும், ஹித்வா- இழந்து, பாபம் அவாப்ஸ்யஸி- பாபத்தை அடைவாய்.
. 34. அகீர்த்திம் சாபி பூதானி கதயிஷ்யந்தி தே அவ்யயம்
ஸம்பாவிதஸ்ய ச அகீர்த்திம் மரணாத் அதிரிச்யதே
ச-மேலும், பூதானி- எல்லோரும், தே- உன்னுடைய, அவ்யயம்-அழியாத , அகீர்த்திம் – அபகீர்த்தியை , கதயந்தி-பேசுவார்கள். ஸம்பாவிதஸ்ய –கௌரவம் உடையவனுக்கு , அகீர்த்தி:- இகழ்ச்சியானது , மரணாத் – மரணத்தைக் காட்டிலும் , அதிரிச்யதே- கொடிய துன்பத்தைக் கொடுப்பதாகும்.
அர்ஜுனன் ஒருவனாகவே கௌரவர்கள் விராட தேசத்தில் பசுக்களைக் கவர்கையில் கௌரவ ஸேனையை புறமுதுகிட்டு ஓட வைத்தான். சிவனைக் குறித்து தவமியற்றி பாசுபதாஸ்திரம் பெற்றான். அவனுடைய வீரச்செயல்களால் தன்ஞ்சயன் என்று புகழப்பெற்றான்.
இவ்வளவு புகழும் இப்போது யுத்தத்திலிருந்து விலகினால் அகன்று அழியாத அபகீர்த்திதான் ஏற்படும் என்றும் கௌரவம் இழந்து உயிர் வாழ்வது இறப்பதைக் காட்டிலும் கொடியது என்றும் கூறுகிறார்.
உலகத்தில் எவ்வளவு புகழ் பெற்றாலும் ஒரு சிறிய தவறினால் மக்கள் அவர்களை மதியாமல் தூற்றுவதைக் காண்கிறோம். இது எதனால் என்று பார்த்தால், மனித இயல்பு மேலோரையும் கீழே இழுத்து அவர்களும் சாதாரணமானவர்கள்தான் என்று நிரூபிப்பதில் உள்ள ஒரு அல்ப திருப்தி.
35. பயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் த்வம் பஹுமத: பூத்வா யாஸ்யஸி லாகவம்
யேஷாம் – எவர்களுடைய கருத்தில், த்வம்- நீ , பஹுமத: பெருமை பெற்றவனாக பூத்வா - இருந்தாயோ , மஹரதா: அந்த பீஷ்மர், த்ரோணர் முதலிய மஹா வீரர்கள், த்வாம் – உன்னை , பயாத்-அச்சத்தினால், ரணாத் – யுத்த்த்திலிருந்து, உபரதம்- பின் வாங்கியவனாக ,மம்ஸ்யந்தே- எண்ணுவார்கள். அதனால் லாகவம் - இகழ்வை, ப்ராப்ஸ்யஸி- அடைவாய்.
அர்ஜுனன் பீஷ்மர் முதலியோரை எவ்வாறு எதிர்ப்பது என்று தயங்கினான். ஆனால் அப்படி செய்யாமல் யுத்தத்தில் இருந்து விலகினால் அவர்கள் மதிப்பில் இருந்து இறக்கப்படுவான் என்கிறார்.
36.அவாச்யவாதான் ச பஹூன் வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தி த்வ ஸாமர்த்யம் ததோ துஹ்கதரம் து கிம்
பாண்டவர்களின் விரோதிகளான கௌரவர்களோவெனில் அர்ஜுனனின் கருணையைப் பாராட்ட மாட்டார்கள். அவன் வீரத்தை இகழ்ந்து பரிகசிப்பார்கள். அதைவிடகேவலம் வேறு ஏது என்கிறார்.
37.ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:
ஹதோ வா- கொல்லப்பட்டாலும் , ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் - ஸ்வர்கத்தை அடைவாய் . ஜித்வா வா – அல்லது வென்றாலும் , போக்ஷ்யஸே மஹீம்-புவியை அனுபவிப்பாய் . தஸ்மாத்- ஆதலால், கௌந்தேய –அர்ஜுனா, யுத்தாய – யுத்தத்தின் பொருட்டு , க்ருதநிஸ்சய: - உறுதிகொண்டவனாக, உத்திஷ்ட – எழுவாயாக.
யுத்தத்தில் இருந்து விலகுவது அர்ஜுனனைப் போன்ற சுத்தவீரனுக்கு அழகல்ல என்று கூறி மாண்டாலும் வென்றாலும் இரண்டும் நன்மைக்கே ஆதலால் யுத்தம் புரியவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
38.ஸுகதுஹ்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
தத: யுத்தாய யுஜ்யஸ்வ ந ஏவம் பாபம் அவாப்ஸ்யஸி
ஸுகதுஹ்கே- சுகம் துக்கம் இரண்டையும், ஸமே க்ருத்வா- சமமாகக் கருதி லாபாலாபௌ- அவ்வாறே லாபம் நஷ்டம், ஜயாஜயௌ-வெற்றி தோல்வி இவைகளையும் சமமாக பாவித்து, தத: அந்த மனநிலையுடன் , யுத்தாய – யுத்தம் செய்ய , யுஜ்யஸ்வ- முயற்சிப்பாயாக . ஏவம் – இவ்வாறு, பாபம்- எந்த பாவத்தையும் , ந அவாப்ஸ்யஸி- அடைய மாட்டாய்.
முந்தைய ஸ்லோகத்தைக் கேட்ட அர்ஜுனன் மாள்வது வெல்வது இரண்டையும் பற்றி கவலையுறவில்லை உறவினர்களையும் பெரியோர்களையும் கொல்லும் பாபத்திற்கே அஞ்சுகிறேன் என்று கூறுவதை எதிர்பார்த்தது போல் இந்த ஸ்லோகத்தில் பதில் கூறுகிறார், பலனை கருதாமல் செய்யப்படும் கர்மத்தினால் பாபம் இல்லை என்று.
No comments:
Post a Comment