நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது
எங்கள் மகன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பெண்ணிற்காக வாங்கிய கூரை புடவையும் திருமாங்கல்யத்தையும் பரமாச்சாரியாரிடும் வைத்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக குடும்பத்துடன் காஞ்சிபுரம் செல்ல தீர்மானித்தோம்.
ஸ்ரீ சங்கர ஜெயந்திக்கு மறுநாள் காரில் எங்கள் குடும்பத்தார் அனைவரும் காலை ஆறு மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டோம். செல்லும் வழியில் வேடிக்கையாக, காஞ்சிக்கு காரில் செல்வதால் பெரியவர்களின் ஆசியை பெற்றுக்கொண்டு ஒரு மணி நேரத்துள்ளாகவே சென்னைக்கு திரும்பிவிடலாம். பிறகு விடுமுறையை வீணாக்காமல் அலுவலகம் செல்லலாம் என்று சிரித்து பேசிக்கொண்டே காஞ்சி அடைந்தோம்.
பெரியவர்களை தரிசித்து அவரின் ஆசியை பெற்றுக்கொண்டு கூட்டம் நகர்ந்தவண்ணம் இருந்தது. சென்ற அரை மணிக்குள் எங்களுடைய முறையும் வந்தது. நாங்கள் கொண்டுவந்த தட்டை வைத்தோம். எங்களின் கோரிக்கைகளை கேட்டு திருமாங்கல்யத்தை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு எங்களை ஆசிர்வதித்தார்.
உடனே ஒருவர் அவசரம் அவசரமாக ஒரு கேசட்டை கொடுத்து பராமச்சரியரிடம் பேசினார். பெரியவர் அந்த டேப்பில் உள்ளதை மொழிபெயர்த்து தர ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறினார். அருகில் இருந்தவர் "அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்" இல்லை என்று கூறினார். சிறுது யோசித்த பெரியவர்கள் மூன்று நபர்கள் சுருக்கெழுத்தாளர்கள். அவர்களை வரச்சொல் என்று கூறினார். எங்களுக்கு உடம்பு சிலிர்த்துவிட்டது .
ஏன் என்றால் என் கணவர் ரயில்வேயில் வேலைசெய்யும் ஒரு சுருக்கெழுத்தாளர். பெரியவர்கள் கூறியபடியே அன்று அங்கு மூன்று சுருக்கெழுத்தாளர்கள் வந்திருந்தார்கள்!
என் கணவரும் இன்னொரு சுருக்கெழுத்தாளரும், பராச்சார்யாளின் ஞான திரிஷ்டியை கண்டு வியந்தனர். பிறகு பெரியவர்கள் தியாகராஜன் என்பவரை கூப்பிட்டு, "அந்த சுருக்கெழுத்தாளர்களை உள்ளே அழைத்து வா" என்று கூறினார். வந்திருந்த மூன்று சுருக்கெழுத்தாளர்களில் ஒருவர் சென்றுவிட்டார். ஆகையால் என் கணவரும் இன்னொருவரும் பெரியவர்கள் முன்னாள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
டேப் ரெகார்டரில் கேசட் போடப்பட்டது. என் கணவரும் மற்றொருவரும் அவர்களின் வேலையை செய்ய தொடங்கினர். அந்த கேசட் என்ன தெரியுமா? நமது இந்திய ஜனாதிபதி மாண்புமிகு திரு வெங்கட்ராமன் அவர்கள் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு, ஆதி சங்கரரை பற்றிய ஆங்கில உரையாகும்.
என் கணவர் உள்ளே சென்றவுடன், நாங்கள் அங்கேயே நின்றுகொண்டு நடமாடும் தெய்வத்தை ஆசை தீர தரிசித்துக்கொண்டே இருந்தோம்.
மதியம் ஒரு மணியாகியும் என் கணவர் வரவில்லை. மடத்தில் சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. எங்களுக்கோ நல்ல பசி. சாப்பிடலாம் என்றல் என் கணவரை விட்டுவிட்டு சாப்பிட யாருக்கும் மனம் இடம் தரவில்லை. சரி, இன்று நாம் கொடுத்துவைத்தது அவளவுதான். எந்த ஹோட்டலில் சாப்பிடவேண்டுமோ என்று புலம்பிக்கொண்டிருந்தோம்.
மணி பிற்பகல் ஒன்றரை இருக்கும் என் கணவரும் இன்னொருவரும் தாங்கள் எழுதிய பேப்பரை எடுத்துக்கொண்டு பெரியவர்களிடம் கொடுக்க தியாகராஜன் என்பவருடன் உள்ளே சென்றனர். நாங்களும் சென்று வழியில் நின்றுகொண்டோம். பெரியவர்கள் அதை பெற்றுக்கொண்டு ஒருவரி விடாமல் படித்து சில திருத்தங்களை செய்துவிட்டு, "நீங்கள் இருவரும் எங்கே உத்தியோகம் செய்கிறீர்கள்? இன்று லீவு போட்டுவிட்டு தானே வந்திருக்கிறீர்கள்? ஆகாரம் முடிந்துவிட்டதா? உங்களுடன் யார்யார் வந்திருக்கிறார்கள்?" என விவரங்களை கேட்டார். என் கணவர், குடும்பத்துடன் வந்திருப்பதாகவும், ஆகாரம் இனிமேல்தான், என்று கூறினார்.
பெரியவர்கள் தியாகராஜன் என்பவரை கூப்பிட்டு எங்களுக்கு உடனே ஆகாரம் கொடுங்கள் என்று கூறினார். நாங்கள் அன்று மடத்தில் சாப்பிட்டது சாப்பாடு அல்ல. பிரசாதம். தேவாமிர்தம். அந்த மாதிரி உணவை இன்றுவரை நாங்கள் சாப்பிட்டதில்லை. இனியும் சாப்பிட முடியுமோ என்னவோ...
மறுபடியும் என் கணவர் பெரியவர்களின் விருப்படி எழுதியதை பிரதிகள் எடுக்க சென்றுவிட்டார். மலை ஐந்து மணி ஆகிவிட்டது. வேலை முடியவில்லை. மறுபடியும் பெரியவர்களிடம் சென்று சென்னையில் ரோனியோ போட்டு முடிந்த அளவு காபி எடுத்து கொடுக்கிறேன். இன்று எங்களுக்கு விடை தாருங்கள் என்று கேட்டார்.
உடனே பெரியவர்கள் எங்களை ஆசீர்வதித்து பிரசாதங்கள் கொடுத்து "சென்று வாருங்கள். கல்யாணம் நன்றாக நடக்கும்" என்று ஆசிர்வதித்து அனுப்பினார். நாங்கள் வீட்டிற்கு வரும்பொழுது ஒன்பது மணி ஆகிவிட்டது.
செல்லும் பொழுது வேடிக்கையாக பேசியதையும், ஒரு மணியில் திரும்பிவிடலாம் என்று சென்ற நாங்கள் ஒரு நாள் முழுவதும் அந்த தெய்வத்தின் சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடத்ததையும், பெரியவரின் ஞான திருஸ்டி சக்தியையும் பேசி பேசித் தீர்த்துவிட்டோம்.
இன்று அந்த நாளை நினைக்கும் பொழுது எங்களுக்கு மெய்சிலிர்ப்பு உண்டாகிறது. உண்மையில் அவர் நம்மிடையே ஒரு நடமாடும் தெய்வம்தான்!
-- சாருமதி கோபாலன்
நன்றி: மங்கை புத்தகம் (ஜனவரி 1991 இதழில் அச்சிடப்பட்டது)
For the English translation of this article, you can access it at https://mahaperiyavaa.blog/2019/11/19/we-think-one-and-periyava-thinks-other/
(தட்டச்சு: வெங்கடேசன் ராமதுரை)
No comments:
Post a Comment