Tuesday, March 9, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 29,30 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

கீதாம்ருதம்- அத்தியாயம் 2- தொடர்ச்சி

29..ஆஸ்சர்யவத் பச்யதி கஸ்சித் ஏனம்
ஆஸ்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆஸ்சர்யவத் சைனமன்ய: ச்ருணோதி
ச்ருதாப்யேனம் வேத ந சைவ கஸ்சித்

கஸ்சித் – யாரோ ஒருவர்தான், ஏனம்- இந்த ஆத்மாவை , ஆஸ்சர்யவத்- ஆச்சரியம் போல, பஸ்யதி- பார்க்கிறார். ததாஏவ- அவ்வாறே, அன்ய: - இன்னொருவர் , ஆஸ்சர்யவத்- ஆச்சரியத்தைப் போல் , வததி- சொல்கிறார்.. அன்ய: ச –இன்னொருவர் , ஏனம் – இதை , ஆஸ்சர்யவத்- ஒரு ஆச்சரியம் போல் , ச்ருணோதி- கேட்கிறார். கஸ்சித் – இன்னொருவர் , ச்ருதாபி- கேட்டபோதிலும் , ஏனம் – இந்த ஆத்மாவை, ந வேத – உணர்வதில்லை
ஆத்மாவை அறிவது எளிதல்ல என்பதை இந்த ஸ்லோகம் விளக்குகிறது.
ஆத்ம ஞானம் உடையவர்கள் இதை ஆச்சரியமாகப் பார்க்கிறரகள். அதாவது இந்த்ர்யம் மனம் புத்தி இவைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காண்கிறார்கள். அப்படி உள்ளவர்களிலும் கூட ஏதோ சிலரே அதைப் பற்றி விளக்க முயல்கின்றனர். அப்போதும் கூட ஆத்மாவை வியப்புக்குரியதாகவே வர்ணிக்கின்றனர். ஏனென்றால் ஆத்மா வாக்குக்கு அப்பாற்பட்டது.

ஏதோ சிலரே ஆத்மாவைப் பற்றி கேட்க விரும்புகின்றனர். அப்படி கேட்கையில் அதை வியப்புக்குரியதாக உணர்கின்றனர். கேட்டபோதிலும் எவரும் இதை உள்ளபடி உணர்வதில்லை. ஏனென்றால் ஆத்மஞானமானது கேட்டோ, படித்தோ, சொல்லியோ வருவதில்லை.

ஆத்மஞானிகள் தாமறிந்ததை நம்மிடம் உள்ள கருணையால் எடுத்துக் கூற முற்படுகிறார்கள். ஆயினும் உபனிஷத் , 'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ, ' வாக்கானது ப்ரம்மத்தை எட்ட முடியாமல் மனதுடன் கூட திரும்பி விட்டது, என்று கூறியுள்ளபடி,
வேதத்தினாலேயெ வர்ணிக்க முடியாத , மனதினாலும் சிந்திக்க முடியாத ப்ரம்மத்தை எங்ஙனம் எடுத்து இயம்ப இயலும்?

அதைக் கூற முற்பட்டாலும் கேட்பவர் எத்தனை பேர்? கேட்பவர்களிலும் உள்ளபடி உணர்வது என்பது அருமையிலும் அருமையாக உள்ளது. இந்தக் கருத்து 'மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே' என்ற ஸ்லோகத்தால் பின்னொரு அத்தியாயத்தில் வலியுறுத்தப் படுகிறது.

. 30. தேஹீ நித்யம் அவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதானி ந த்வம் சோசிதும் அர்ஹஸி

பாரத- அர்ஜுனா, தேஹே ஸர்வஸ்ய – எல்லா தேகத்தினுள்ளும் உள்ள , அயம் தேஹீ- இந்த ஆத்மா , நித்யம் – எப்போதும், அவத்ய: - கொல்லப்பட முடியாதவன் . தஸ்மாத்- அத்னால் , ஸர்வாணி பூதானி – எல்லா உயிரினங்களுக்காகவும் , த்வம் – நீ , சோசிதும் – வருத்தப்பட , ந அர்ஹஸி- வேண்டியதில்லை .

கிருஷ்ணன் இதுவரை,ஆத்மா என்பது அழிவற்றது என்றும் , முந்தைய ஸ்லோகத்தில் மனம், வாக்கு, இந்த்ரியம் இவைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் கூறினார். இப்போது அதனால் எந்த உயிருக்காகவும் வருத்தப்பட வேண்டாம் என்று கூறுகிறார். இது அர்ஜுனன் பீஷ்மரையும் த்ரோணரையும் எவ்வாறூ கொல்வேன் என்றதற்கு பதிலாக அமைந்துள்ளது.

  

No comments:

Post a Comment