Monday, February 1, 2021

Lakshmi tells I dont have anything to pay him ....??? - Spiritual story - Parasara bhattar in Guna Ratna kosam

திருவரங்கத்தில் வடக்கு உத்திர வீதியில் வாழ்ந்த ஒருவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கத் தெற்கு உத்திர வீதிக்குச் செல்ல நேரிட்டது.

ஆனால் வீதிகளைச் சுற்றித் தெற்கு உத்திர வீதிக்குச் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால்,

திருவரங்கநாதன் கோயிலின் வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார்.

திட்டமிட்டபடி வடக்கு வாசல் வழியாகத் திருக்கோயிலுக்குள் நுழைந்தார்.

தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியை அடைந்தார்.

தன் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டார்.

மீண்டும் தெற்குவாசல் வழியாகக் கோயிலுக் குள்ளே நுழைந்தார்.

வடக்கு வாசலை நெருங்கும் சமயம். இடப் புறத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் சந்நதியைக் கண்டார்.

அவர் இறைவனையோ இறைவியையோ வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வரவில்லை,

வீதிகளைச் சுற்றிச் சென்றால் சிரமமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் கோயிலுக்குள் நுழைந்தார்.

இருந்தாலும் தாயாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தமது கைகளைக் கூப்பி ஒரே ஒரு முறை ரங்கநாயகித் தாயாரை வணங்கினார்.

உள்ளிருக்கும் ரங்கநாயகியோ இவரது வணக்கத்தைக் கண்டு மிகவும் உளம் மகிழ்ந்தாள்.

உடனே தனது கணவனான அரங்கனிடம், "என்னை நோக்கி நம் குழந்தை கைகூப்பி விட்டானே! இவனுக்கு என்ன கொடுக்கலாம்?" என்று கேட்டாள்.

அரங்கனோ, "ரங்கநாயகி! நீ தான் செல்வங்களுக்கு எல்லாம் தலைவி! இவனுக்கு நல்ல செல்வத்தை அருளலாமே!" என்றார்.

ரங்கநாயகித் தாயாரும் அவ்வாறே உயர்ந்த செல்வங்களை அந்த நபருக்கு வழங்கி விட்டாள்.

அதன்பின் சற்றே சிந்தித்தாள் ரங்கநாயகி.

"சுவாமி! அவன் கைகூப்பி வணங்கி அஞ்ஜலி முத்திரையை என்னை நோக்கிக் காட்டி விட்டானே!

அதற்கு நான் கொடுத்த செல்வம் என்பது ஈடாகாது! அதைவிடப் பெரிதாக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்!" என்று அரங்கனைப் பார்த்துச் சொன்னாள் ரங்கநாயகித் தாயார்.

"ஆம்! ஆம்! இந்தச் செல்வம் போதாது! அழியாத செல்வமான ஆத்ம அநுபவத்தை அவனுக்குக் கொடுத்து விடு!" என்றார் அரங்கன்.

அவ்வாறே ரங்கநாயகித் தாயாரும் ஆத்மா தன்னைத்தானே அநுபவிக்கும் நிலையான கைவல்ய நிலையை அந்த நபருக்கு அருளினாள்.

அதன் பின் சிந்தித்த ரங்கநாயகி, மீண்டும் அரங்கனைப் பார்த்து, "அவன் அஞ்ஜலி முத்திரை அல்லவோ காட்டியிருக்கிறான்?

நாம் தந்த செல்வமோ, ஆத்ம அநுபவமோ அதற்கு ஈடாகாது! நீங்கள் அந்தக் குழந்தைக்கு முக்தியைத் தந்து விடுங்கள்!" என்றாள்.

ரங்கநாயகியின் கூற்றை ஏற்ற அரங்கன் அந்த நபருக்கு வைகுண்ட லோகத்தையே அளித்து விட்டான்.

அந்த நபரும் முக்தி பெற்று விட்டார்.

"இப்போது திருப்தியா?" என்று அரங்கன் ரங்கநாயகியிடம் கேட்டார்.

"இல்லை சுவாமி!" என்றாள் ரங்கநாயகி.

"ஏன்?" என்று அரங்கன் வினவ, "அந்தக் குழந்தை காட்டிய அஞ்ஜலி முத்திரைக்கு நாம் அவனுக்குத் தந்த செல்வம், ஆத்ம அநுபவம், முக்தி ஆகிய எதுவுமே ஈடாகாது.

ஆனால் முக்திக்கு மேல் கொடுப்பதற்கு நம்மிடம் ஒன்றுமில்லையே! அதனால் தான் எனக்கு வெட்கமாக உள்ளது!" என்று பதிலளித்த ரங்கநாயகித் தாயார் வெட்கத்தால் தலைகுனிந்து கொண்டாளாம்.

பராசர பட்டர் ஸ்ரீகுணரத்ன கோசம் எனும் நூலில் இந்தக் கதையை அப்படியே ஒரு ஸ்லோகமாகப் பாடுகிறார்:

"ஐச்வர்யம் அக்ஷரகதிம் பரமம் பதம் வாகஸ்மைசித் அஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய

அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இத்யதாம்பத்வம் லஜ்ஜஸே கதய கோயம் உதாரபாவ:"

ஏதோ போகிற போக்கில் கைகூப்பிய அந்த நபருக்கு

மிக உயர்ந்த முக்தி உட்பட அனைத்தையும் தந்து விட்டு

இனி கொடுக்க ஒன்றுமில்லையே என வெட்கம் கொண்டு இன்றளவும் ரங்கநாயகித் தாயார் தலைகுனிந்து கொண்டே கோயில் கொண்டிருப்பதாக இந்த ஸ்லோகத்திலே அநுபவிக்கிறார் பராசர பட்டர்.

இதிலிருந்து அடியார்களுக்கு எவ்வளவு பெரிய அநுக்கிரகத்தைப் பண்ணினாலும், திருமாலுக்கும் திருமகளுக்கும் திருப்தி உண்டாவதில்லை,

மேலும் மேலும் அடியார்களுக்கு அவர்கள் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறதல்லவா?

'அலம்' என்றால் போதும் என்று பொருள்.

'அனல:' என்றால் போதும் என்று எண்ணாதவர்.

அலம் (போதும்) என்று எண்ணாமல் அடியார்களுக்கு மீண்டும் மீண்டும் அருளை வாரி வழங்கிக் கொண்டே இருப்பதால், திருமால் 'அனல:' என்றழைக்கப்படுகிறார். 

No comments:

Post a Comment