கீதாம்ருதம்-அத்தியாயம் 2
13. தேஹினோ அஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்தி: தீர: தத்ர ந முஹ்யதி
யதா- எவ்வாறு, தேஹின: உடல் படைத்தவர்கள், தேஹே- இந்த தேகத்தில், கௌமாரம்- பால்யம், யௌவனம்- இளமை, ஜரா- முதுமை ( இவைகளை அடைகிறார்களோ) , ததா- அவ்வாறே, தேஹாந்தரப்ராப்தி: - இந்த தேகத்தை விட்டு இன்னொரு தேகத்தை அடைகிறார்கள் . தீர: - அறிஞன் , தத்ர – இந்த விஷயத்தில், ந முஹ்யதி- கலங்குவதில்லை.
இந்த ஜன்மத்தில் அடைந்த தேகத்திற்கு படிப்படியே பாலப்பருவம், இளமை, முதுமை இவைகள் ஏற்படுகின்றன. அதை நாம் ஸாதாரணமாக ஏற்றுக் கொள்கிறோம். அதே போல மரணமும் நம்முடைய அடுத்த கட்டமான வேறு தேகம் அடைவதையே குறிக்கிறது. அதனால் உண்மை அறிந்தவர்கள் அதைக் குறித்துக் கவலை கொள்வதில்லை.
பீஷ்மரைப் போன்றவர்கள் இதை அறிந்ததனால் அர்ஜுனனைப் போல் மனச்சலனம் அடையாமல் இருந்தார்கள்.
ஆயினும் சுகம் துக்கம் என்ற உணர்வுகள் எல்லோருக்கும் உண்டல்லவா? இதற்கு பதில் அடுத்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.
14. மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ண ஸுகதுஹ்கதா:
ஆகமாபாயின; அநித்யா: தான் திதிக்ஷஸ்வ பாரத
கௌந்தேய-குந்தி புத்திரனே, , சீதோஷ்ண ஸுகதுஹ்கதா:- குளிர் உஷ்ணம் சுகம் துக்கம் இவற்றைத் தருவது, மாத்ராஸ்பர்சா: து – புலன்களுடன் போகவிஷயங்களின் சேர்க்கைதான். ஆகமாபாயின: -இவை உண்டாகி அழிபவை. அநித்யா:- நிலையற்றவை. பாரத-பரத குலத்தோன்றலே , தான் – அவைகளை , திதிக்ஷஸ்வ – பொறுப்பாயாக.
மாத்ரா என்பது பஞ்ச பூதங்கள். இவைகளின் சேர்க்கையால் ஏற்படுவன உலக விஷயங்கள். இந்த்ரியங்கள் இவைகளுடன் சம்பந்தப்படுவதால்தான் சுகம் துக்கம் உஷ்ணம் குளிர் முதலிய எல்லா உணர்வுகளும் ஏற்படுகின்றன. இதில் பொருள்கள் மட்டும் அல்ல தேகங்களும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே அதனால் நம் பந்துக்கள் நண்பர்கள் விரோதிகள் எல்லாம் இதில் அடக்கம்.
நாம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது மனிதர்களோ அல்லது மற்ற விஷயங்களோ நம்மை பாதிப்பதில்லை. ஏனென்றால் நம் இந்த்ரியங்கள் மனம் இவைகள் உலகவிஷயங்களுடன் தொடர்பற்று இருக்கின்றன. அதனால் சுகமும் இல்லை துக்கமும் இல்லை வேறு எந்த உணர்வும் இல்லை.
எந்த உணர்வும் நிரந்தரம் அல்ல. உண்டாகி அழிவன. இன்று நண்பன் நாளை எதிரியாகலாம் . இன்று சுகம் கொடுக்கும் அதே விஷயம் நாளை துக்கத்தைக் கொடுக்கலாம். ஆதலால் இவை உண்டாகி அழிவன என்கிறார்.
சரி. இதை எப்படி எதிர் கொள்வது? அவைகளை பொறுத்துக்கொள் என்கிறார். உதாரணமாக நாம் எதற்கோ இல்லை யாருக்கோ காத்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் பொறுமை இழந்து விடுகிறோம் நல்ல வெய்யில் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் மறுபடி மின்சாரம் வருமளவும் பொறுமை இழந்து தவிக்கிறோம்.
அதற்கு பதிலாக பொறுமையுடன் காத்திருந்தால் அவைகளை சுலபமாக கடக்கலாம். அல்லது மனதை வேறு எதிலாவது ஈடுபடுத்திக்கொள்ளலாம். நம்மால் ஒன்றும் செய்ய இயலாத விஷயத்தில் கவலைப்பட்டுப் பயனில்லை.
மதர் தெரேஸா ஒருமுறை போகவேண்டிய விமானம் காலதாமதம் ஆனதாம். அதற்கு அவர் நல்லது. நாமஜபம் செய்ய நேரம் கிடைத்தது என்றாராம். இது நடந்ததா என்று தெரியாது. ஆனால் அதில் பொதிந்து கிடக்கும் உண்மையை உணரமுடியும்.
கீதாம்ருதம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி
15. யம் ஹி ந வ்யதயந்தி ஏதே புருஷம் புருஷர்ஷப
ஸமதுஹ்கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே
புருஷர்ஷப – மனிதர்களுள் ரிஷபம் போன்றவனே, ஸமதுஹ்கஸுகம்- சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்கின்ற , யம் தீரம் புருஷம்- எந்த புத்திமானான புருஷனை, ஏதே- இந்த அனுபவங்கள் , ந வ்யதயந்தி – கலங்கவைப்பதில்லையோ, ஸ: அவன் , அம்ருதத்வாய – அமரத்தன்மைக்கு , கல்பதே- பாத்திரம் ஆகிறான்.
16. நாஸதோ வித்யதே பாவ: நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோ அந்த: அனயோ: தத்வ தர்சிபி:
அஸத: - இல்லாததற்கு , ந பாவ: - இருப்பு என்பது இல்லை. ஸத:- இருப்பதற்கு, அபாவ: ந- இல்லாமை என்பது இல்லை. அனயோ: உபயோ: அபி- இவ்விரண்டினுடைய , அந்தம் – தத்துவம் , தத்வ தர்சிபி: -தத்வ ஞானிகளால் திருஷ்ட: - கண்டறியப்பட்டது.
அஸத் என்பது ஆத்மா இல்லாத மற்றவை.. நம் தேகம், மனம், புத்தி இவையாகும். நிரந்தரமில்லாதவை, எப்போதும் மாறிக்கொண்டிருப்பவை எல்லாம் அஸத் என்று கூறப்படுகிறது.
ஸத் என்பது எப்போதும் உள்ளது அதாவது அழிவற்ற, மாறுபாடடையாத ஆத்மா.
அஸத் என்பதற்கு இருப்பு இல்லை என்றால் அது மாறிக்கொண்டே இருப்பதால் இருப்பதாகத் தோன்றும்போது கூட அவை உண்மையில் இல்லை என்று பொருள்.
இது புரிந்துகொள்ள சற்று கடினமாகத் தோன்றினாலும் நம் நடைமுறை வாழ்க்கையில் இது உண்மையாகவே இருக்கிறது. எப்படி என்றால், இல்லாததை நாம் இருப்பதாக நினைக்கின்றோம். நம் உடல், மனம், புத்தி இவையே 'நான்' என்று நினைக்கிறோம். ஆனால் உணமையில் நான் என்பது ஆத்மாவே. இதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
நான் யார் என்று சிந்தித்தோமானால் முதலில் நம் உடலின் பெயர்தான் தோன்றும். ஆனால் இது உன் பெயர்தானன்றி நீயில்லை. அதற்கு அடுத்து நான் இன்னாரின் மகன், தந்தை கணவன் என்ற எண்ணம் தோன்றும். அதுவும் உன் உறவுப்பெயரே அன்றி நீயல்ல. மற்றும் நம் தொழில் முதலியவைகளால் நான் ஒரு டாக்டர், டீச்சர் என்னும் எண்ணமும் உண்மையான நாம் அல்ல. உண்மையில் நீயார்?
நாம் பேசும்போது என் உடம்பு சரியாக இல்லை, மனம் சரியாக இல்லை, புத்தி குழம்புகிறது என்றெல்லாம் கூறுகிறோம் அல்லவா. அதனால் நான் என்பது உடலோ, மனமோ, புத்தியோ அல்ல இவைகளுக்கு அப்பாற்பட்டது என்று தெரிகிறது.
ஆனாலும் உண்மையான நான் யார் என்பதை அறிவதற்கு இன்னொரு தடங்கல் உள்ளது. அதுதான் ஈகோ என்று கூறப்படும் நான் என்ற அகங்காரம். இந்த அகங்காரமும் ஆழ்ந்து நித்திரை செய்யும்போது இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று அப்போதும் இருக்கிறதல்லவா? அதுதான் ஆத்மா. அதைத்தவிர மற்றதெல்லாம் நிரந்தரமல்ல என்பதை இனி வரும் ஸ்லோகங்களில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment