Wednesday, January 27, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 4,5,6 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramanujam

கீதாம்ருதம் - அத்தியாயம் 2 (தொடர்ச்சி)

அர்ஜுன உவாச
4. கதம் பீஷ்மம் அஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுசூதன
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹான் அரிசூதன

அர்ஜுனன் கூறினான் 
அரிசூதன- எதிரிகளை வெல்லும், மதுசூதன- மதுசூதனா, கதம்- எவ்வாறு , அஹம் –நான் , பூஜார்ஹான் – பூஜிக்கத்தகுந்த, பீஷ்மம் – பீஷ்மரையும், த்ரோணம் ச- துரோணரையும், ஸங்க்யே- யுத்தத்தில், இஷுபி: - அம்புகளால், பிரதியோத்ஸ்யாமி – எதிர்கொள்வேன்?

5. குரூன் அஹத்வா ஹி மஹானுபாவான் 
ச்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபி இஹ லோகே 
ஹத்வா அர்த்தகாமான் து குரூன் இஹைவ 
புஞ்ஜீய போகான் ருதிரப்ரதிக்தான் 
இஹ லோகே- இந்த உலகில்,மஹானுபாவான் – மஹாநுபாவர்கள் ஆகிய , குரூன் – குருமார்களை , அஹத்வா- கொல்லாமல், பைக்ஷ்யம் – பிச்சை எடுத்து, போக்தும் – உண்பதே ஷ்ரேய; - சிறந்தது. ஹி – ஏனெனில் , இஹ – இங்கு, குரூன் ஹத்வா- ஆசார்யர்களைக் கொன்று, அர்த்தகாமான் – செல்வம் விரும்பும் பொருள்கள் இவைகளின் வடிவில், ருதிரப்ரதிக்தான் – ரத்தம் கலந்த, போகான் – போகங்களைத்தான் , புன்ஜீய – அனுபவிக்கப்போகிறேன்.

க்ஷத்திரியர்கள் இறக்கும் தருவாயிலும் பிச்சை எடுத்து உண்ணக்கூடாது என்பது வர்ணாஸ்ரம தர்மம். ஆனால் அர்ஜுனன் பீஷ்மத்ரோணாதியரைக் கொல்வதை விட பிச்சை எடுப்பது மேல் என்கிறான். இதிலிருந்து அவன் தர்மம் அதர்மம் இவற்றை நேர்மாறாகப் புரிந்து கொண்டுள்ளான் என்பதையும் , அவன் கண்ணன் முந்தைய ஸ்லோகங்களில் கூறியதைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

பீஷ்மர் துரோணர் முதலியவர்களை மகானுபாவர்கள் எங்கிறான். அப்படியானால் அவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் பாண்டவர்களை எதிர்க்கக் கூடாது. ஆயினும் அவர்கள் அப்படிச்செய்வது அர்ஜுனனைப்போல் அவர்கள் குழம்பாமல் தங்கள் ஸ்வதர்மம் எது என்பதை சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது.

6. ந ச ஏதத் வித்ம: கதரன் ந: கரீய: 
யத் வா ஜயேம யதி வா ஜயேயு:
யானேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம: 
தே அவஸ்தித: ப்ரமுகே தார்தராஷ்டிரா:

ந: நமக்கு, கதரத்- போரிடுவதா வேண்டாமா என்ற இவ்விரண்டில் , கரீய: - எது சிறந்தது என்று ந வித்ம: - அறியோம். யான் – எவர்களை ஹத்வா- கொன்று ந ஜிஜீவிஷாம: - நாம் வாழ விரும்ப மாட்டோமோ, தே தார்த்ததராஷ்டிரா:- திருதராஷ்ட்ரனின் புதல்வர்கள் , ப்ரமுகே – எதிரில், அவஸ்திதா: - நிற்கிறார்கள்.

அர்ஜுனன் போர் புரியத் தயங்கியது பீஷ்மத்ரோணாதியருடன் அன்றி துரியோதனாதியருடன் அல்ல. இங்கு அவர்களிக் கொன்று உயிர் வாழ விரும்பமாட்டோம் என்பது அவன் மனக் குழப்பத்தைக் காட்டுகிறது. இது அவனுக்கே தெரிகிறது என்பதை அடுத்த ஸ்லோகம் காட்டுகிறது.

No comments:

Post a Comment