கீதாம்ருதம் - அத்தியாயம் 2.- சாங்கிய யோகம்
மகாபாரத யுத்தம் என்பது நமக்குள் என்றும் நிகழ்வது. நல்ல எண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் இடையே நிகழும் போரையே பாரத யுத்தம் சித்தரிக்கிறது. நல்ல எண்ணங்கள் சிறுபான்மையான பாண்டவர்கள். கெட்ட எண்ணங்கள் கௌரவரைப் போல பெரும்பான்மையானவை.
மனம் பகவானை நோக்கித் திரும்பினால் மட்டுமே வெற்றி கிட்டும். பாஞ்சஜன்யத்தின் ஒலி என்பது சத்வ குணத்தைப் பெருக்கி ரஜஸ் தமஸ் இவைகளை அடக்கும் தெய்வீக இசையாகும்.
அர்ஜுனன் என்பது நம் மனமே. குழம்பியுள்ள மனம் பகவானின் உதவியை நாடுகிறது. அவன் அருளால் நம் குழப்பம் தீர்ந்து மனம் தெளிவுறுகிறது.
அது நடக்க வேண்டுமானால் அர்ஜுனனைப் போல் நாமும் நம் மனமாகிய ரதத்தின் சாரதியாக இருக்க பகவானை வேண்ட வேண்டும். பார்த்தசாரதி நாம் பார்த்த சாரதியாக ஆனால் வெற்றி நிச்சயம்.
இப்போது இரண்டாவது அத்தியாயத்தில் இருந்து கீதோபதேசம் ஆரம்பிக்கிறது. அதை அடுத்து பார்ப்போம்.
கீதாம்ருதம் - அத்தியாயம் 2 (தொடர்ச்சி)
அர்ஜுன உவாச
4. கதம் பீஷ்மம் அஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுசூதன
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹான் அரிசூதன
அர்ஜுனன் கூறினான்
அரிசூதன- எதிரிகளை வெல்லும், மதுசூதன- மதுசூதனா, கதம்- எவ்வாறு , அஹம் –நான் , பூஜார்ஹான் – பூஜிக்கத்தகுந்த, பீஷ்மம் – பீஷ்மரையும், த்ரோணம் ச- துரோணரையும், ஸங்க்யே- யுத்தத்தில், இஷுபி: - அம்புகளால், பிரதியோத்ஸ்யாமி – எதிர்கொள்வேன்?
5. குரூன் அஹத்வா ஹி மஹானுபாவான்
ச்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபி இஹ லோகே
ஹத்வா அர்த்தகாமான் து குரூன் இஹைவ
புஞ்ஜீய போகான் ருதிரப்ரதிக்தான்
இஹ லோகே- இந்த உலகில்,மஹானுபாவான் – மஹாநுபாவர்கள் ஆகிய , குரூன் – குருமார்களை , அஹத்வா- கொல்லாமல், பைக்ஷ்யம் – பிச்சை எடுத்து, போக்தும் – உண்பதே ஷ்ரேய; - சிறந்தது. ஹி – ஏனெனில் , இஹ – இங்கு, குரூன் ஹத்வா- ஆசார்யர்களைக் கொன்று, அர்த்தகாமான் – செல்வம் விரும்பும் பொருள்கள் இவைகளின் வடிவில், ருதிரப்ரதிக்தான் – ரத்தம் கலந்த, போகான் – போகங்களைத்தான் , புன்ஜீய – அனுபவிக்கப்போகிறேன்.
க்ஷத்திரியர்கள் இறக்கும் தருவாயிலும் பிச்சை எடுத்து உண்ணக்கூடாது என்பது வர்ணாஸ்ரம தர்மம். ஆனால் அர்ஜுனன் பீஷ்மத்ரோணாதியரைக் கொல்வதை விட பிச்சை எடுப்பது மேல் என்கிறான். இதிலிருந்து அவன் தர்மம் அதர்மம் இவற்றை நேர்மாறாகப் புரிந்து கொண்டுள்ளான் என்பதையும் , அவன் கண்ணன் முந்தைய ஸ்லோகங்களில் கூறியதைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிகிறது.
பீஷ்மர் துரோணர் முதலியவர்களை மகானுபாவர்கள் எங்கிறான். அப்படியானால் அவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் பாண்டவர்களை எதிர்க்கக் கூடாது. ஆயினும் அவர்கள் அப்படிச்செய்வது அர்ஜுனனைப்போல் அவர்கள் குழம்பாமல் தங்கள் ஸ்வதர்மம் எது என்பதை சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது.
6. ந ச ஏதத் வித்ம: கதரன் ந: கரீய:
யத் வா ஜயேம யதி வா ஜயேயு:
யானேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம:
தே அவஸ்தித: ப்ரமுகே தார்தராஷ்டிரா:
ந: நமக்கு, கதரத்- போரிடுவதா வேண்டாமா என்ற இவ்விரண்டில் , கரீய: - எது சிறந்தது என்று ந வித்ம: - அறியோம். யான் – எவர்களை ஹத்வா- கொன்று ந ஜிஜீவிஷாம: - நாம் வாழ விரும்ப மாட்டோமோ, தே தார்த்ததராஷ்டிரா:- திருதராஷ்ட்ரனின் புதல்வர்கள் , ப்ரமுகே – எதிரில், அவஸ்திதா: - நிற்கிறார்கள்.
அர்ஜுனன் போர் புரியத் தயங்கியது பீஷ்மத்ரோணாதியருடன் அன்றி துரியோதனாதியருடன் அல்ல. இங்கு அவர்களிக் கொன்று உயிர் வாழ விரும்பமாட்டோம் என்பது அவன் மனக் குழப்பத்தைக் காட்டுகிறது. இது அவனுக்கே தெரிகிறது என்பதை அடுத்த ஸ்லோகம் காட்டுகிறது.
கீதாம்ருதம் அத்தியாயம் 2
7. கார்பண்ய தோஷோ அபகதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யத் ச்ரேய: ஸ்யாத் நிச்சிதம் ப்ரூஹி தத் மே
சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்
கார்பண்ய தோஷ உபஹதஸ்வபாவ: -கோழைத்தனத்தினால் தன்னிலை மாறியவனும், தர்ம ஸம்மூடசேதா: - தர்மம் எது என்பதில் குழப்பம் அடைந்தவனுமாகிய நான் , த்வாம்- உங்களை , ப்ருச்சாமி- கேட்கிறேன் யத்- எது, நிஸ்சிதம் –நிச்சயமாக , ச்ரேய: ஸ்யாத்-உறுதியான நன்மையை அளிக்குமோ, தத் – அதை மே- எனக்கு, ப்ரூஹி- கூறுங்கள். அஹம் – நான் , the- உங்களுடைய, சிஷ்ய: - சீடன். த்வாம் உங்களை, ப்ரபன்னம்- சரணடைந்த , மாம் – எனக்கு , சாதி – அறிவுரை கூறுங்கள்.
அர்ஜுனன் தன் வாதங்களை எல்லாம் கூறியபின்னர் செய்வதறியாமல் திகைத்து தன் மனக்குழப்பத்தை உணர்ந்து பகவானிடம் உபதேசிக்க வேண்டுகிறான். நான் உன்னைச் சரண் அடைந்தேன் என்று கூறிய பின்னரே பகவான் கீதொபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார்.
நாம் வாழ்வில் ஒரு பிரச்னை வரும்போது நம் மனதைப் போட்டு அலைக்கழித்து பிரச்னையை சந்திக்க மனமின்றி பல வாதங்களை நாமே கற்பித்துக்கொண்டு அதிலிருந்து விலக முயற்ற்சிக்கிறோம். ஆனாலும் அமைதி கிடைப்பதில்லை . கடைசியில் செய்வதின்னதென்று அறியாமல் நாம் பகவானிடம் சரண் புகும்போது அவன் அருட்கரம் நீட்டி ஆட்கொள்கிறான்.அர்ஜுனனின் நிலை இதைத்தான் உணர்த்துகிறது.
8. நஹி பிரபச்யாமி மமாபனுத்யாத்
யத் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம்
அவாப்ய பூமௌ அஸபத்னம் ருத்தம்
ராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம்
பூமௌ- பூமியில், அஸபத்னம்- எதிரிகள் இல்லாத, ராஜ்ஜியம் – ராஜ்ஜியத்தையும் , ஸுராணாம்- தேவர்களுடைய , ஆதிபத்யம் – தலைமையையும் , அவாப்ய அபி – அடைந்தாலும் கூட , மம- என்னுடைய , யத் சோகம் – எந்த துக்கமானது, இந்த்ரியாணாம் – இந்திரியங்களை உச்சோஷணம் – வாட்டுகிறதோ அது, அபனுத்யாத் – நீங்குவதாக , ந பிரபச்யாமி- நான் காணவில்லை.
அடுத்து சஞ்சயனின் வார்த்தையில் வியாசர் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் பொருட்செறிந்தவையாகும். அதை பின்பு காண்போம்
கீதாம்ருதம் - அத்தியாயம் 2
சஞ்சய உவாச
ஏவம் உக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச: பரந்தப
ந யோத்ஸ்ய இதி கோவிந்தம் உக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ
சஞ்சயன் கூறினான்.
பரந்தப- அரசே(த்ருத்ராஷ்ட்ரைக் குறித்து) ஹ்ருஷீகேசம் – ரிஷிகேசனாகிய க்ருஷ்ணனிடம் ஏவம்உக்த்வா- இவ்வாறு கூறிவிட்டு, குடாகேச: -உறக்கத்தை வென்ற அர்ஜுனன் , ந யோத்ஸ்ய- யுத்தம் புரிய மாட்டேன் , இதி உக்த்வா – என்று கூறி, தூஷ்ணீம் பபூவ-மௌனம் சாதித்தான்.
இங்கு அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் குறிக்கும் சொற்கள் பொருட்செறிந்தவை. குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் என்று பொருள். அதாவது இந்த்ரியங்களை அடக்கத் தெரிந்தவன். அதனால் அவனுடைய மனக்குழப்பம் தாற்காலிகமானது என்பதைக் குறிப்பிடுகிறது. ஹ்ருஷீகேசன் என்ற சொல் இதற்கு விடை கூறுபவன் இந்த்ரியங்களுக்கு ஈசன் என்பதைக் குறிக்கிறது.
இனி கோவிந்தன் என்பதின் பொருளைப் பார்க்கலாம்.
கோவிந்தன் என்னும் பெயரின் உயர்வு.
"கோ என்றால் மோக்ஷம் அல்லது சுவர்க்கம். அதைக்கொடுப்பதால் கோவிந்தன்..
கோ என்றால் அஸ்த்ர சஸ்த்ரம். அதை விச்வாமித்ரரிடம் இருந்து பெற்றதால் கோவிந்தன்.
கோ, பசுக்கள் அவற்றை அறிந்தவன் அதாவது அவைகள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன்.
கோ என்றால் வேதம் வேதத்தால் அறியப்படுபவன்..
கோ என்றால் வஜ்ராயுதம் அதை இந்திரன் பெற வழிகாட்டியவன்.
வேதம் பகவானை சஹஸ்ராக்ஷ: என்று சொல்கிறது கோ என்றால் கண் என்றும் பொருள்.
கோ என்றால் நெருப்புஜ்வாலை. பகவான் சூர்யமண்டல மத்ய வர்த்தி என்று கூறுகிறது வேதம்.
கோ என்றால் பூமி. ஜலம், வேதம், இந்த்ரியங்கள் என்றும் பொருள். வராஹமாக பூமியை வெளிக்கொணர்ந்தான், மத்ஸ்யமாகவும் கூர்மமாகவும் நீரில் சஞ்சரித்தான், வேதங்களின் உட்பொருள் ஆனான்..
கோவிந்தா என்று கூப்பிட, திரௌபதிக்கு செய்ததுபோல் உடனே அருள் செய்வான்.
1௦. தம் உவாச ஹ்ருஷீகேச: ப்ரஹஸன் இவ பாரத
சேனயோ: உபயோ: மத்யே விஷீதந்தம் இதம் வச:
சேனயோ: உபயோ: மத்யே, இரண்டு சேனைகளின் நடுவில் , விஷீதந்தம்-துக்கிக்கும் , தம் – அவனைப் பார்த்து, ஹ்ருஷீகேச: - ஹ்ருஷீகேசனான கண்ணன் , ப்ரஹஸன் இவ – சிறிது சிரித்தவன் போல், இதம் வச: -இந்த வார்த்தைகளை, உவாச-கூறினான்.
க்ருஷ்ணனின் சிரிப்புக்கு அர்த்தம் என்ன?
1. எல்லாம் அவன் திட்டத்தின்படி நடப்பதால்.
2. பெரியவன் போல் பேசும் சிறுவனிடம் தந்தையின் சிரிப்பு அல்லது ஒரு அறிஞனிடம் எல்லாம் தெரிந்தவன் போல பேசும் ஒரு மூடனிடம் ஏற்படும் நகைப்பு..
3. போர்புரிய சித்தமாக வந்துவிட்டு போர் ஆரம்பிக்கும் தருணம் இரு சேனைகளும் ஆயத்தமாக நிற்க அப்போது தன் செய்கை சரியா தவறா என்று சிந்திப்பதைப் பார்த்து சிரிப்பு.
நாம் அவனிடம் சரணடைந்துவிட்டால் அவன் நம் மன்க்குழப்பத்தை நீக்குவான். இல்லையென்றால் நாம் செய்யும் காரியத்தின் விளைவை நாம் அனுபவிக்கும்படி சாக்ஷிபூதமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பான்.
இதன் பின் கீதோபதேசம் ஆரம்பிக்கிறது.
No comments:
Post a Comment