நண்பர்களே,
ஒரு வார்த்தை உங்களோடு
ஒரு சின்ன சந்தேகம். நான் நிறைய எழுதுவது படிக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? முன்பெல்லாம் குறைந்தது ஐந்து கதை கட்டுரையாவது எழுதுவேன். இப்போது கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கிறேன். ரெண்டு அல்லது மூன்று...... இதுவும் ஜாஸ்தியா? உங்களில் எத்தனைபேர் என் பெயரை, கட்டுரை கதை, கண்ணில் பட்டதும் ஓடிவிடுபவர்கள்?
இப்படி இரவும் பகலும் எழுதியும் ஒரு சில வழக்கமான பெயர்களைத் தவிர மற்றவர்கள் அதனால் தான் பேசாமல் இருக்கிறீர்களா ? நான் எழுதுவதில் சுவாரசியம் இல்லைஎன்றால் என்னால் எப்படி புதிதாக சுவாரஸ்யம் விதைக்க முடியும்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? என்னால் 82ல் எப்படி மாற்றம் செய்து கொண்டு திருப்தி அளிக்க முடியும். சினிமா, அரசியல், அக்கப்போர் தான் பிடிக்கும் என்றால் எனக்கு அதற்கும் ஸ்னானப் பிராப்தி கூட கிடையாது. நான் பழையவன்.. குறைந்தது ஐம்பது அறுபது வருஷ இடைவெளி கொண்டவன். நான் பார்த்த வாழ்ந்த சமுதாயம் வேறு அது மறைந்து விட்டது, அல்லது மறைந்து கொண்டே வருகிறது. எனக்கு ஆஃப்ரிக்க மொழியில் பேசவோ ஜப்பானிய மொழியில் பாடவோ முடியுமா? தெரிந்ததை அறிந்தபடி தானே எழுத முடியும். எல்லாம் அந்த கிருஷ்ணன் பண்ணும் விஷமம். என்னை ஓட ஓட விட்டு வேடிக்கை பார்ப்பவன். பதினெட்டு இருபது மணி நேரம் ஒவ்வொருநாளும் படிக்கிறேன், படித்ததை ஏதோ புரிந்துகொண்டு எழுதுகிறேன். இது தான் என்று இல்லாமல் எதெதெல்லாமோ படிக்கிறேன் எழுதுபவன். ஆங்கிலத்திலும் அற்புத விஷயங்கள் நிறைய இருக்கிறதே.பழைய சமஸ்க்ரிதத்தில் இல்லாததா?
''ரொம்ப ஏன் சார் எழுதறீங்க ? ஒண்ணு ரெண்டு போதுமே? என்றால் மற்ற நேரத்தில் நான் என்ன செய்வது? ஒரு கதை கட்டுரை எழுத அரைமணி முக்கால் மணி நேரம் போதுமே எனக்கு ? அதுவே ரொம்ப ஜாஸ்தி. வெளியேயம் எங்கும் போகமுடியாது. தூக்கமும் கிடையாது. பாடுகிறது பேசுகிறது, எழுதுவது படிப்பது தவிர வேறு என்ன பண்ணுவது?
நான் என்ன புதுசாக ஆகாசத்தில் இருந்து ஏதாவது கொண்டு வந்து தருகிறேனா? உங்களுக்கு எல்லாம் ஏற்கனவே நன்றாக தெரிந்ததைத்தான் மீண்டும் திரும்ப சொல்பவன். எனக்கு தெரிந்தது அவ்வளவு தான். முடிந்ததும் அதே.
இதோ அற்புதமான தெய்வீக மார்கழி நாளை முதல் வருகிறது. விடிகாலை கோயிலுக்கு போக முடியாது. வீட்டிலிருந்த படியே மார்கழி முப்பது நாளும் அந்த ஆயர்பாடி சிறுமி நம் அழகி ஆண்டாளை, அவள் பாடிய திருப்பாவையை பற்றி வழக்கம் போல் எழுதுவேன்.. மார்கழி விருந்து. ஏழு வருஷமாக எழுதிக்கொண்டு தானே வருகிறேன். அதை ''பாவையும் பரமனும்;; என்ற புத்தகமாக கூட வெளியிட்டேன். ரெண்டு பதிப்புகளும் தீர்ந்து போய் ஒரு சில பிரதிகள் மட்டுமே கைவசம் உள்ளது விலை கிடையாது நன்கொடை 150 ரூபாய் அதை அச்சடிக்க ஆகின்ற செலவு. உயர்ந்த வகை காகிதத்தில், ஐந்து வண்ணங்களில் 100 பக்கங்களுக்கு மேல் ஆண்டாள் கையில் அற்புதமாக அமர்ந்துஎத்தனையோ வீடுகளில் பேசுகிறாள் என்ற சந்தோஷம் எனக்கு போதும். என் முயற்சிக்கு எழுத்துக்கு பரிசு அது தான்.
நாம் தீவுகளாக தத்தம் வீட்டில் தனித்து எங்கெங்கோ உட்கார்ந்து கொண்டிருக் கிறோம். வாட்ஸாப்ப் FB EMAIL தான் நம்மை இணைக்கும் வசதி. கிட்டே வந்தால் ஒட்டிக்கொள்ளும் கொரோனா இன்னும் முழுசாக போகவில்லையே. ஆகவே இருக்கும் வசதியில் ஒருவரோடு ஒருவர் சம்பாஷிப் போம்.
சிலர் என்னுடைய பழைய கட்டுரைகள் கதைகள் கேட்கிறீர்கள். 3500 க்கு மேல் இருக்கிறது. அவற்றை எளிதில் தேடிப் படிக்க வசதியாக ஏற்கனவே என்னுடைய வலைப் பதிவு தளம் வைத்திருக்கிறேன் அதில் சாவகாசமாக எப்போது வேண்டுமானாலும் மேய்ந்து படித்து தேவைப்பட்டால் மற்றவர்களுக்கு அனுப்ப வசதியாக இருக்கும். உள்ளே நுழைய கொடுக்கவேண்டியது: https://sivansaalayadharshan.blogspot.com/
ஜே கே சிவன் 9840279080
Sir
ReplyDeleteIn the above mentioned blogspot showing nothing.. kindly send me the link in my email ID iamsatry@gmail.com. thanking you sir